நடந்தது, நடக்கின்றது, நடக்கப் போவது - எதுவும் நம் கையில் இல்லை.


மேலே சொன்ன வாசகத்தை எத்தனையோ முறை வாழ்க்கையில் உணர்ந்தாலும், நேற்று முன்தினம் 24.01.21 ஞாயிறன்று நடந்த ஒரு நிகழ்வு மீண்டும் எனக்கு உணர்த்தியது.


ஞாயிறன்று மதியம் இரண்டு மணிக்கு சென்னையில் இருந்து காஞ்சிக்கு ஒரு இன்னோவா வாகனத்தில் (டிராவல்ஸ்) புறப்பட்டேன். கிழக்குத் தாம்பரத்தில் வசிக்கக் கூடிய நான், காஞ்சிக்குச் செல்ல வேண்டுமென்றால் படப்பை, ஓரகடம், வாலாஜாபாத் வழியே செல்வது வழக்கம். டிராஃபிக் அதிகம் இருக்காது. போரூர், பூந்தமல்லி சாலை என்றாலே எனக்கு அலர்ஜி. காரணம் - கடுமையான போக்குவரத்துதான்.


ஆனால் அன்று போரூர், பூந்தமல்லி வழியே பயணிக்க வேண்டியதாயிற்று. காரணம் - என் நண்பர் கோவை கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் தி.நகரில் பிக்கப் பண்ணிக் கொண்டு செல்ல வேண்டி இருந்ததால்! ‘பரவாயில்லை... போய்த்தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக பூந்தமல்லி வழியே சென்றேன்.


போரூர் தாண்டுவதற்குள் ‘புஸ்’ஸென்றாகி விட்டது. ஆங்காங்கே டிராஃபிக் நெரிசல். ஒவ்வொரு முறை ஜாமில் வண்டி சிக்கிக் கொள்ளும்போதெல்லாம், ‘அடடா... தி.நகரில் இருந்து வண்டியை தாம்பரம் வழியே விட்டிருக்கலாமே’ என்றுதான் தோன்றியது (கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்).


ஸ்ரீபெரும்புதூரில் கடும் டிராஃபிக். காஞ்சிபுரம் ரயில்வே கேட் கடக்கிறபோது மாலை ஐந்தரை மணி ஆகி விட்டது. சென்னையில் புறப்பட்டு சுமார் மூன்றரை மணி ஆகி இருந்தது.


அன்றைக்கு எனது தரிசனத் திட்டம் - முதலில் ஓரிக்கை, பெரியவா பிருந்தாவனம், காமாட்சி கோயில். இதில் சொன்ன வரிசைப்படி.


மூன்று இடத்துக்கும் சுமார் நாலரை உயரத்துக்கு பிரமாண்ட மலர்மாலைகள் வாங்கி வண்டியில் வைத்திருந்தேன். 


ஓரிக்கை மணிமண்டப பெரியவாளுக்கு ஒரு மாலை; பிருந்தாவனத்துக்கு இரண்டு மாலை; காமாட்சி அன்னைக்கு ஒரு மாலை. மொத்தம் நான்கு மாலைகள். எனக்கு எப்போதும் பூக்கட்டித் தரும் ஸ்கந்தாஸ்ரமம் சுந்தரம் வெகு நேர்த்தியாக மாலைகளைக் கொடுத்திருந்தார். 


‘இந்த நான்கு மாலைகளில் எது காமாட்சிக்கு?’ என்று கொண்டு வந்த பூக்காரப் பையனிடம் கேட்டேன். ‘வெள்ளை (சம்பங்கி) மாலை காமாட்சிக்கு. மற்ற மூன்று மஞ்சள் (சாமந்தி) மாலைகள் மகா பெரியவாளுக்கு’ என்றார். இதை ஏன் இங்கு விளக்கமாகச் சொல்கிறேன், பின்னால் நடந்த அற்புதமே இந்த மாலைகளை வைத்துதான்!


ஏழு மணிக்குக் காமாட்சி கோயில் செல்வதாகத் திட்டம். எனவே, வண்டியை முதலில் ஓரிக்கை நோக்கி விடச் சொன்னேன். ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.


ஓரிக்கை செல்லும்போதும் டிராஃபிக் ஜாம்தான். என்ன காரணத்தால் பெரியவா இப்படி சோதனை செய்கிறார் என்று எல்லோரும் குழம்பினோம். ஏதோ ஓரிடத்தில் சாலையை அடைத்து வைத்திருந்தார்கள். அங்கிருந்து வலப்பக்கம் திரும்பினால் ஓரிக்கைக்கு பத்து நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால், அன்றைக்கு நோ என்ட்ரி’ போர்டு வைத்திருந்தார்கள். வேறு வழி இல்லாமல் இடப்பக்கம் திரும்பினோம்.  ஓரிக்கைக்குச் செல்ல வேண்டும் என்றால், மீண்டும் சுற்ற வேண்டும். எப்படியும் முக்கால் மணி நேரத்துக்கு மேலாகலாம் என்பது என் கணிப்பு. ஓரிக்கை சென்று விட்டுத் திரும்பும்போது இதே டிராஃபிக் ஜாம் இருந்தால் பிருந்தாவன தரிசனம், காமாட்சி தரிசனம் என்று இரண்டுமே சிக்கல் ஆகி விடும்.


எல்லோருக்கும் ஒரு தவிப்பு. ‘சரி... ஓரிக்கையை இன்றைக்கு ‘ஸ்கிப்’ பண்ணி விடலாம். மடத்துக்குப் போவோம்’ என்று வண்டியை ஸ்ரீமடத்துக்கு விடச் சொன்னேன்.


‘ஓரிக்கைக்குப் போக வேண்டிய மாலை..?’ என்று இழுத்தாள் என் மனைவி.


‘பரவாயில்லை... அதையும் காஞ்சி காமாட்சிக்குக் கொடுத்துடலாம். காமாட்சிக்குக் கொண்டு போற ஒரு மாலையோட இந்தப் பெரியவா மாலையையும் கொடுத்துடலாம். இந்த மாலையை நாளைக்குக் காமாட்சிக்கு சார்த்தச் சொல்லலாம்’ என்றேன் நான்.


இதுவரை இப்படி ஆனதில்லை. மாலை கொண்டு போனால், அதை எந்த விதமான தடங்கலும் இல்லாமல் சார்த்துவதற்குப் பெரியவா இத்தனை வருடமாக அனுக்ரஹம் தந்திருந்தார். ஆனால், இன்றைக்கு ஏனோ இப்படி (கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்).


முதலில், ஸ்ரீமடம்.


ஸ்ரீமடத்தின் வாசலில் வண்டி நின்றது. எல்லோரும் இறங்கினோம். டிரைவரும் இறங்கி விட்டார். மாலைகளை எடுப்பதற்கு வண்டியின் பின்பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன். டிரைவர் வந்தார். அதற்கு வண்டி லாக் ஆகி விட்டது. எந்தக் கதவையும் திறக்க முடியவில்லை. ‘என்னடாது... ஓரிக்கை போக முடியவில்லை... மடத்தின் வாசலில் நின்றும், மாலைகளை வண்டியில் இருந்து எடுக்க முடியவில்லை’ என்று தவித்துப் போனேன். 


வண்டி நின்றிருந்த இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. நண்பர் கிருஷ்ணனும் டிரைவரும் சேர்ந்து கால்மணி நேரம் பிரயத்தனப்பட்டு அங்கிருந்த சிலரின் உதவியுடன் வண்டியின் ‘லாக்’கை ரிலீஸ் செய்தார்கள். மாலைகளை எடுத்துக் கொண்டு மடத்தினுள் போனோம்.


பிருந்தாவன தரிசனம். இரண்டு பெரியவாளுக்கும் மாலைகளை சமர்ப்பித்தாகி விட்டது.


தரிசனம் முடிந்து, காமாட்சி கோயிலுக்குப் போனோம். நண்பர் ஸ்யாமா சாஸ்திரி இருந்தார். வாசலில் இருந்து அழைத்துச் சென்றார்.


எஞ்சிய இரண்டு மாலைகளை எடுத்துச் சென்றேன். காமாட்சி சந்நிதி அருகே இரண்டையும் சமர்ப்பித்து ‘ரெண்டுமே காமாட்சிக்கு’ என்றேன்.


அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் என்னைப் பிரமிப்புக்கு உள்ளாக்கின. ‘ஒரு மாலையை காமாட்சிக்குப் போட்டுட்டு, இன்னொண்ணை ஆதி சங்கரருக்கு சார்த்திடலாம்’ என்றார்.


எங்கள் அனைவருக்குமே சந்தோஷம். 


இரண்டு மாலைகளில் எது காமாட்சிக்கு? 


இரண்டு மாலைகளையும் காமாட்சிக்கு பூஜை செய்கிறவரிடம் ஸ்யாமா சாஸ்திரி கொடுத்து விட்டு, ‘ஒண்ணு அம்பாளுக்கு... இன்னொண்ணு பகவத் பாதாளுக்கு’ என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த பூஜகர், ‘எந்த மாலை காமாட்சிக்கு?’ என்று கேட்டிருக்கிறார். ‘உனக்கு எது தோணுதோ அதை சார்த்திடு’ என்றிருக்கிறார் ஸ்யாமா. 


எந்த மாலை காமாட்சிக்கு என்று பூக்காரர் சுந்தரம் சொல்லி அனுப்பினாரோ, அந்த வெள்ளை (சம்பங்கி) மாலை அம்பாளுக்குக் கச்சிதமாகச் சார்த்தப்பட்டது. வெள்ளுடையில் வேறு அன்றைக்கு காமாட்சி தரிசனம் தந்து கொண்டிருந்தாள். நிறைவான தரிசனம்.


அடுத்து, ஆதி சங்கரர் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார் ஸ்யாமா. ஓரிக்கை பெரியவாளுக்குப் போய்ச் சேர வேண்டிய மாலை பகவத் பாதாளுக்கு அணிவிக்கப்பட்டு ஆரத்தி நடந்தது. உத்ஸவர் ஆதி சங்கரர் கழுத்தில் இருந்த மாலையை எனக்கு அணிவித்தார் பூஜகர்.


‘இந்த மாலையை எனக்குப் போடறதைவிட என்னோட ஆச்சார்யருக்குப் போடு இன்னிக்கு’ என்பதாக ஓரிக்கை பெரியவா, அங்கே வர விடாமல், காமாட்சி ஆலயத்தில் இருக்கும் பகவத் பாதாளுக்கு இந்த மாலை போய்ச் சேர வழி செய்தாரோ என்று எனக்குத் தோன்றியது.


விஷயத்தைப் பிறகுதான் ஸ்யாமா சாஸ்திரியிடம் முழுவதும் சொன்னேன். ‘அம்பாளுக்குப் போய்ச் சேர வேண்டியது கரெக்டா போயிடுத்து. பெரியவாளுக்குப் போக வேண்டியது பகவத் பாதாளுக்குப் போய்ச் சேர்ந்துடுத்து... நாம யாருண்ணா தீர்மானிக்கறது...’ என்று பரவசத்துடன் பேசினார் (கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்).


இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், நேற்றும் இன்றும் ஆதி சங்கரர் பற்றி ஒரு நிகழ்வை அடியேனது யூ டியூப் சேனலில் பேசி வருகிறேன். அதில் ‘ஆதி சங்கரரை எல்லாரும் கொண்டாடணும்... இன்றைக்கு இருக்கிற வழிபாடு, பக்தி எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான்’ என்று பெரியவா சொன்னதாகப் பேசியுள்ளேன்.


அதை பெரியவாளே நிகழ்த்தியும் காட்டியதாகவே உணர்கிறேன்.


காமாட்சி ஆலயத்தில் இருந்து வெளியே வரும்போது என்றும் இல்லாத மன நிறைவு.


ஆதி சங்கரர் சொரூபத்தில் பெரியவாளே ஆட்கொண்டு விட்டதாக ஓர் உணர்வு.


ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர...


பெரியவா சரணம்.


அன்புடன்,

பி. சுவாமிநாதன்

Comments

Popular posts from this blog