*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - உனக்கு பணம் தானே வேணும்? நான் தரேன்!*


மஹா பெரியவா பலப்பல சமயங்கள்ல திடீர்னு க்ஷேத்ராடனம் போகலாம்னு சொல்லிட்டு, தேவையானைதை எல்லாம் எடுத்து வைச்சுக்க கூட கொஞ்சமும் அவகாசம் தராம சட்டுன்னு புறப்பட்டுடுவார்.


அவர் புறப்பட்டாச்சுன்னா, அவர் கூடப் போறவா எல்லாரும் அப்பவே கிளம்பியாகணும். அதனால எப்பவுமே புறப்படறதுக்குத் தோதா, தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வைச்சிருப்பா மடத்து சிப்பந்திகள்.


ஒரு முறை இந்த மாதிரி கிளம்பின பெரியவா, நிறைய க்ஷேத்ரங்களுக்குப் போயிட்டு, அப்படியே

திருவையாறுக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு மூணு நாள் அங்கேயே தங்கலாம்னு தீர்மானிச்சார்.


ஆசார்யாள் ஒரு ஊர்ல தங்கறார்னா, அவருக்குப் பாதபூஜை பண்றதுக்கு, பிக்ஷாவந்தனம் செஞ்சு வைக்கறதுக்குன்னு பல பெரிய மனுஷா போட்டி போட்டுண்டு வருவா. மடத்தை சம்ரக்ஷணை பண்றதுக்காகவும், தர்மகார்யங்கள் செய்வதற்கும் அந்த சமயத்துல காணிக்கையா ஒரு தொகையை வசூல் பண்ணுவா மடத்து நிர்வாகிகள்.


அந்த அடிப்படையில் பரமாசார்யாளோட பாதுகைகளுக்கு பூஜை பண்றதுக்கு இருநூறு ரூபாய் காணிக்கைன்னு நிர்ணயம் செஞ்சிருந்தா.


திருவையாறுக்குப் பக்கத்தில கிராமம் ஒண்ணுல எழுவது வயசுப் பாட்டிக்கு, "பல காலமா படமாவே பார்த்துண்டு இருக்கிற பெரியவாளை நேர்ல தரிசனம் பண்ணணும், அவருக்குப் பாத பூஜை செய்யணும்"கற ஆசை  எழுந்தது.


ஆனா,கையில் ஒரு செல்லாத நோட்டு கூட கிடையாது.சொந்த பந்தம்னு சொல்லிக்கவும் எந்த நாதியும் இல்லை. மனசுக்குள்ளே இருந்த ஆசையை பெரியவா படத்துக்கு முன்னால் நின்னு சொல்லிண்டு பிரார்த்திச்சா.


அன்னிக்கு ராத்திரி பாட்டிக்கு ஒரு கனவு.


"உனக்கு என்ன வேணும் பணம்தானே? நான் தரேன். நீ வந்து தரிசனம் பண்ணிட்டுப் போ!" அப்படின்னு பெரியவா சொல்றாப்புல வந்த அந்தக் கனவை கண்டதுக்கு அப்புறம் அந்தப் பாட்டி தூங்கவே இல்லை. எப்படியும் தனக்கு காசு கிடைக்கும், பெரியவா பாதுகைக்கு பாத பூஜை பண்ணனும்னு பெரியவாளைப் பார்க்க தயாரா இருந்தா.


தான் கண்ட கனவை மத்த சில பேர் கிட்டே சொன்னா பாட்டி. அவர்களோ "பரமாசார்யாள் தரேன்னாரா. எப்படி அவரே எடுத்துண்டு வந்து குடுப்பாராக்கும்?"னு பரிஹாசம் செஞ்சா. ஆனால் பாட்டி நம்பிக்கையுடன் இருந்தாள்.


மணி பதினொண்ணு ஆச்சு, "செல்லம்மா பாட்டி...செல்லம்மா பாட்டி!" யாரோ வாசல்ல நின்னு தன்னோட பேரைச் சொல்லிக் கூப்பிடற சத்தம் கேட்டு வெளீல வந்தா, பாட்டி.


"இந்தாங்க சீக்கிரமா வந்து இதுல கையெழுத்துப் போட்டுட்டு இந்தப் பணத்தை வாங்கிக்குங்க. இருநூறு ரூபாய் உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு!"


வாசல்ல நின்ன தபால்காரர் பாட்டியிடம் சொன்னார்.


பாட்டிக்கு தன்னையே நம்ப முடியலை..!


"எனக்கா, பணமா? யார் அனுப்பியிருக்கா?"

தழுதழுப்பா கேட்டா.


"அதெல்லாம் யார்னு தெரியலை. பணத்தை அனுப்பினவங்க ஃபாரத்துல (form) பேர், அட்ரஸ் எல்லாம் எழுதலை. ஆனா, தபாலாபீஸ் முத்திரைலேர்ந்து காஞ்சிபுரத்துலேர்ந்து அனுப்பியிருக்காங்கன்னு

மட்டும் தெரியுது" என்றார்.


பாட்டிக்கு பரம சந்தோஷம். சொன்னபடி பெரியவா அனுப்பிட்டார்னு, திருவையாறுக்குப் போய், ஆசார்யாளை தரிசனம் பண்ணி, அவரோட பாதுகைக்கு பூஜையும் செஞ்சா.


"என்ன ஆசை பூர்த்தியாச்சா"?ன்னு கேட்டு, பழம், கல்கண்டு ப்ரசாதம் குடுத்து ஆசீர்வாதம் பண்ணினார் பரமாசார்யாள். பாட்டியோட கண்ணுலேர்ந்து பொலபொலன்னு ஆனந்த பாஷ்பம் வழிஞ்சது.


பரம சந்தோஷமா பிரசாதத்தை வாங்கிண்டு போனா.


பாட்டிக்குப் பணம் அனுப்பினது யார்னு கடைசி வரைக்கும் ஒருத்தருக்கும் தெரியவே இல்லை.


ஆனா, பரமாசார்யாள் தான் தனக்குப் பணம் அனுப்பினார்னு பரிபூரணமா நம்பினா பாட்டி.


யாருக்கு என்ன தரணும்? எப்போ தரணும்? எப்படித் தரணும்? அதை அனுபவிக்க அவாளால முடியணும். இதெல்லாம் ஸ்வாமியால் மட்டும் தான் முடியும்னா, பரமாசார்யாளை "நடமாடும் தெய்வம்"-னு சொல்றது சரி தானே? 


*பெரியவா சரணம்!*


_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural


*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

Comments

Popular posts from this blog