நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று.
இன்று?
நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு:
ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள்.
"இப்பத்தான், ஒரு வருஷம் ஆஸ்திரிலேயால, பெரிய பொண்ணுக்கு சேவை பண்ணிட்டு வந்தேன். இரண்டாவது பொண்ணு, உடனே கிளம்பி அமெரிக்கா வாங்கிறா . மாப்பிள்ளையை விட்டு, டிக்கெட் போட சொல்றேன்கிறா .
இதோடு, ஆறு, ஏழு டிரிப் மாத்தி மாத்தி போயாச்சு. நான் போய் இறங்கன உடனே, இரண்டு பொண்ணுங்களும் அடுப்படி பக்கமே வரதில்லை. அம்மா, அது நல்லா பன்னுவியே, இது நல்லா பன்னுவியேன்னு சொல்லி, விதவிதமா சமையல் பன்ன வேண்டியிருக்கு.
காலையில எழுந்ததிலேந்து, ராத்திரி வரை வேலை, வேலை, முடியல. அதுவும், அமெரிக்கால சம்மர் டைம்ல போனா, காலை ஆறு மணிக்கு உதிக்கிர சூரிய பகவான் ராத்திரி 9.30 க்கு தான் கிளம்பறார். எனக்கு ஏழரை மணிக்குள்ள டின்னர் முடித்தாகனும். அங்க ஏழரை மணிக்கு, பளிச்சின்னு, பகல் மாதிரி இருக்கு. நான் சாப்பிறது டின்னரா இல்லை சாயங்கால டிபனான்னான்னு புரியலை.
மத்தியான சாப்பாடு , சாயங்காலம் பேரன், பேத்தி ஸ்கூலேந்து வந்தவுடன் ஸ்நாக்ஸ், பொண்ணு, மாப்பிள்ளை வந்தவுடன் ஈவினிங் டிபன், இரண்டு பேருக்கும் ராத்திரி பத்து மணிக்கு டின்னர்.
அதுக்கப்புறம், வண்டி பாத்திரம் அலம்பனும். அங்க இருக்கிற டிஷ் வாஷர் நம்ம ஊரு, குக்கர், சரவணா எவர்சில்வர் பாத்திரத்தை எல்லாம் சுத்தம் பன்னாது. அதுக்கு, கிளாஸ், பீங்கான் இதெல்லாம் தான் பிடிக்கறது.
வாஷிங்மிஷில, ஒவ்வொறு நாள் ஒவ்வொருத்தர் டிரஸ்ஸைப் போட்டு, மடிச்சி வைக்கனும். வெளியில டூர் போக பிளான் பன்னா, செத்தேன் நான். ஒரு நாள் டூர்னா, 20, 30 ,இட்லி, மொளகா பொடி, தக்காளி சட்னி , மத்தியானத்துக்கு புளிசாதம், தயிர் சாதம், ராத்திரிக்கு சப்பாத்தி, குருமா ன்னு இவ்வளவு ஐட்டங்களை ஒன்பது மணிக்குள்ள தயார் பன்னனும். லாங் வீக் எண்டு டூர்னா, சமையல் கட்டையே , கார் டி ரங்கில (டிக்கி சொல்லப்படாது, அங்க, அர்த்தம் வேறையாம்.) தூக்கி போட்டுன்டு கிளம்பனும்.
இதுக்கு நடுவில உடம்புக்கு ஒன்னும் வரக்கூடாதுன்னு ஸ்வாமியை வேண்டிக்கினும். ஜலதோசம், தலைவலின்னு அங்க டாக்டர் ட போனா, டாலர் டாலரா கொட்டி மூக்கை சிந்தனும். "
இப்படி இன்னும் பலவாறு அந்தப் பெண்மணி புலம்பிக் கொண்டிருந்தார்.
இதைப் படித்த உடன், "இதுக்குத்தான், என் பொண்ணுக்கு வந்த அமெரிக்கா, ஆப்ரிகா மாப்பிள்ளை வேணான்னு முடிவு பன்னி, பெங்களுரு, ஹைதராபாத், டெல்லி, மும்பாய் மாப்பிள்ளையா பார்த்தோம் " என்று தயவுசெய்து பதில் இடவேண்டாம். அப்படி செய்தவர்களில் பலர், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், வெளியில் சொல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் தாய்மார்கள் இங்கும் அதிகம் உண்டு என்று என்னால் சொல்ல முடியும்.
இதற்கு காரணம்? பாசம், பாசம், பாசம்.
பொதுவாகவே பெண்களுக்கு தன் மகனை விட , தன் மகளிடம் பாசம் அட்லீஸ்ட் 1% அதிகம் என்பது அனைவரும் கண்ட உண்மை. "பையன், மருமகட்ட மாட்டிகிட்டு முழிக்கிறான். என் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட ரா" என்பது நாம் அடிக்கடி கேட்கப்படும் வசனம்.
இந்தக் கால பெண்களைப் நன்கு படிக்க வைக்கத் தெரிந்த, அந்தக் கால அம்மாக்கள் சமையல் படிப்பை கற்றுக் கொடுக்க மறந்து விட்டார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில், அந்த மூன்று நாட்களில், தூரமாக அமர்ந்து கொண்டு, சாதம் பொங்குவதையும், சாம்பார் செய்வதையும் என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது நினைவிற்கு வருகிறது. ஆனால், இன்று?
அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்த மகள்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அம்மா என்ற உரிமையில் அத்தனை வேலைகளையும் அம்மாவின் தலையில் கட்டும் மகள்கள் தான் அதிகம். இந்த மத்யமார் தளத்தில், "மகளுக்காக VRS வாங்கிக் கொண்டு விட்டேன்" என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அம்மாக்களை காண முடிகிறது.
இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்." மனது நினைக்கும் வேகத்திற்கு, 50 வருட உடம்பு ஒத்துழைக்காது" என்பதை.
விவரம் புரியாமலா சொன்னார்கள் நமது முன்னோர்கள் "எமன் கையிலிருப்பது பாசக் கயிறு " என்று. பாசக் கயிறு நமது உடலை சுற்றிக் கொள்ளும் பொழுது, அதிகமாக இறுகாமல் மூச்சு திணறாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொறு தாய்மார்களின் பொறுப்பாகும்.
"பசித்த ஒருவனுக்கு மீன் குழம்பை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு" என்பது பழமொழி.
உங்கள் மகளுக்காக நீங்கள் வாழ்வதை விடுத்து, மகள் தன் வாழ்க்கையைத் தானே வாழ கற்றுக் கொடுங்கள்.
மாமியார், மாமனார், கொழிந்தியாள், மைத்துனர், கணவர், மகன், மகளுக்காக இதுவரை வாழ்ந்த நீங்கள், அட்லீஸ்ட் 55,60 வயதுகளில் உங்களுக்காக வாழ முயற்சி செய்யுங்களேன்.
Comments
Post a Comment