கேரளா எல்லையில்  ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு  வீடு.


வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.


பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். 


இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.


அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள  தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.


எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.


காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.


அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.


ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது. காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க.


தாத்தாவும் மீசையை ஸ்டைல முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்.  


பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க. 


இத ரெண்டு மூனு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு device வாங்கி கொடுத்தோம்.


இந்த வாரமும் வழக்கம் போல் எங்கள் ஞாயிறு மாலை visit. வழக்கம் போல் காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன் திறந்து கொடுக்க, 

பாட்டி உள்ளே சென்றார்.


பாட்டி உள்ளே செல்ல, என் மனைவியும் பின் சென்று.. "பாட்டி, ஏன் அந்த device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல்ல. மறந்துடீங்களானு"

கேட்க …


பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்!


"குழந்தே, இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை. நானே திறந்திருவேன். அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம்.


இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து. இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும் அவரை சார்ந்து  இருக்கேன்னு அவருக்கு ஒரு ஆளுமை.


திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே. இன்னும் வாழப்போறது கொஞ்சநாள் தான். யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு சொன்னாங்க.


கொஞ்ச நேரம் என்னால ஒன்னும் பேச முடியல. இந்த மூடியில இவ்வளவு விஷயமா?


வயசானவங்களை underestimate பண்ணக்கூடாது. அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க.


இந்த பாடம் எல்லாம் எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.


இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும். அதுக்கு அவங்க நம்மளோட இருக்கணும். 🤝🏻

Comments

  1. Ella post pakanum sis pls link thanga.
    Made for each other couple

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog