கடன் தீர

*கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண* *கணபதி*! ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்! யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?! சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்! தோரண கணபதியை வழிபடும்முறை: மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும். ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும். கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு. சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி. இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள். இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள கீழ்கண்ட 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும். *ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி* சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும் முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய் காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே! தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண) திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல் திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம் கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்! பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும் கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய் விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும் காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும் சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம் தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்! பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே! எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே! சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல் இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே! குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க் கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!! தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips