Ratha saptami - Festivals Decoded (Tamil)

(Warning/எச்சரிக்கை: தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பிறகு ஆக்ஷன் கிங்/க்வீன் ஆகுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Please read till the end and do not jump to any of this hastily. )

ஆடி போய் ஆவணி வந்தா என் பிள்ளை top ல வருவான்னு கேட்டிருப்பீங்க. அதே மாதிரி மாசம் போய், மாசம் பொறந்தா ஒரு பண்டிகை நம்ம ஊரிலே உண்டு. (பிரசாதம் Tasteஆ இருந்தா பண்டிகை ஞாபகம் இருக்குங்கற சங்கத்தோட தலைவி நானு.😜நீங்க எப்படி? சங்கத்திலே உறுப்பினர் ஆக கட்டணம் இல்லை. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை😀)
இதோ அடுத்து வரப்போவது ரதசப்தமி.
ரதசப்தமி கொண்டாடுவதற்கான காரணம் என்னன்னு பார்ப்போமா?
இந்த வருஷம் ( 19/2/2020), பிப்ரவரி 19 நாள் அன்னைக்கு ரதசப்தமி. திருப்பதி கோவில் தொடங்கி பல கோவில்களிலே ரொம்ப விசேஷமா நடக்கும் இந்த நாள். தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாவது நாளான சப்தமி அன்று இது கொண்டாடப்படுகிறது.சூரியன் தான் நவக்கிரங்களோட ஹீரோ ன்னும் மத்த கிரகங்கள் எல்லாம் அவரைச் சுத்தி சுத்தி வர்ராங்கன்னும், சூரியன் தனது ஏழு குதிரைகள் (நம்ம ஆளுங்களுக்கு என்னைக்கோ  ஒளி வெள்ளை,பிரிச்சா 7 நிறம்னு தெரியும். சிம்பாலிக்கா சயின்ஸ் பாடத்தை நிலாவை காட்டி கைப்பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டிகிட்டே சொல்லிக்கொடுத்த கில்லிஸ்.) பூட்டிய ஒற்றை சக்கர தேரை வடக்கு(உத்தராயணம்) நோக்கி திருப்புகிறார். சூரியன் ஒவ்வொரு வருஷமும் 6 மாசம் தென் துருவத்தை நோக்கிப் போவார். அப்போ நமக்கு மழை, குளிர் காலம் (தக்ஷிணாயணம்). அப்புறம் தைமாசம் ஒரு ரிவர்ஸ் கியர் போட்டு வடதுருவம் பார்க்கப் போவார். அப்போ நமக்கு வசந்த காலம், கோடைக்காலம்.நிஜத்திலே சூரியன் அங்கேயே தான் இருப்பார். நம்ம பூமி தான் ஒரு 6 மாசம் ரொம்ப லவ்வாகி கிட்டே (வடக்கே)போகும். அப்புறம் "டூ" விட்டுட்டு தெற்குப் பக்கம் போகும்.
நம்ம புராணங்கள்  தக்ஷிணாயணம் தேவர்களோட இரவுன்னும்,  உத்தராயணம் பகல் பொழுது, புண்ணிய காலம்னும் சொல்லுது. பாரதப் போர் முடிவுக்கு
வந்தப்போ  தக்ஷிணாயணம்.(அப்போ இறந்தா சொர்க்கம் போக முடியாதுன்னு பீஷ்மர் அம்புப் படுக்கையிலே வெயிட் செஞ்சு ரதசப்தமிக்கு அடுத்த நாளில் உயிர் விட்டார். அந்த நாள் பீஷ்மாஷ்டமி.)
ரதசப்தமி அன்னைக்கு சூரியனுக்கு பர்த்டே. மார்கழி குளிர் டாட்டா காட்டிட்டு போக மெதுவா வசந்த காலம் அட்டெண்டென்ஸ் குடுக்க ஆரம்பிக்கும். ( வேர்த்து கொட்டுது, வெயில் பிளக்குது,வசந்தமா? னு எல்லாம் கேக்கப்படாது. )

எப்ப சீசன் மாறினாலும் அங்கே ஒரு பண்டிகையை அழகா டிஸைன் செஞ்ச நம்ம முன்னோர்களுக்கு எத்தனை நோபல் பரிசு வேணும்னாலும் குடுக்கலாம்.

எப்பவுமே சீசன் மாறும்போது உடல்நிலை பாதிப்புக்கு நாம் ஆளாவோம். வாதம், பித்தம், கபம் எல்லாம் மாறுவதாலே நோய்கள் வரும். அதனாலே தான் பண்டிகை, நைவேத்யம்னு அழகா நம்ம மனசும் வயிரும் நிறைய வச்சிருக்காங்க. ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்யற ஒவ்வொரு பிரசாதமும் வரப்போற கிளைமேட்டுக்கு நம்ம உடம்பை தயார் செய்யற மாதிரி டிசைன் செய்திருப்பாங்க. உணவே மருந்து கான்செப்ட்.
பொங்கலுக்கு சாப்பிட்ட போளியும் சக்கரைப் பொங்கலும் கையிலே இன்னும் மணக்குமே!
 நம்ம பாட்டன், பாட்டி எல்லாம் பிஹெச்டி வாங்காத டையட்டிஷியன், டாக்டர், மனநல மருத்துவர்,மொத்தத்திலே ஒரு மெடிக்கல் யூனிவர்சிட்டின்னு சொல்லிகிட்டே போகலாம்.

வெயில் உடலுக்கு வலு கொடுக்கும், நோய்களைத் தீர்க்கும். 6 மாசமா குளிர்ல இழுத்துப் போர்த்தி கிட்டு தூங்கின எல்லாரையும் வெயில் பட வைக்க தான் வட நாட்டிலே மகர சங்கராந்தி ன்னு பட்டம் விட்டு கொண்டாடற வழக்கத்தை வச்சாங்க. ஊரே பட்டம் விட, வேடிக்கை பார்க்கன்னு சன்பாத் எடுக்கும். சூரியன் கிட்டே இருந்து விட்டமின் டி யும்,எள், வெல்லம் சேர்த்த எள்ளுருண்டை பிரசாதமும் எலும்பை வலுவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தி குடுக்கும்.
நம்ம மக்கள் இன்னும் ஒரு படி மேல.
 ரதசப்தமி அன்னைக்கு, 7 எருக்க இலைகளை தலை, தோள்கள், முட்டிகள், பாதங்களிலே வைத்து, கூட மஞ்சள் தூள், அட்சதை(பெண்களுக்கு), வெறும் அட்சதை(ஆண்களுக்கு) ஆற்றிலோ, கடலிலோ சூரியனுக்கு
மந்திரம் சொல்லி, ஸ்னானம் செய்வார்கள்.
தண்ணீரை அப்போது சொம்பிலிருந்து ஊற்றுவார்கள். சூரியனை வணங்கி விரதம் இருப்பார்கள். இவை எல்லாம் சூரிய சக்தியை நம்ம உடம்பு முழுமையாக கிரகிச்சுக்க உதவும்.
அன்று விரதம் இருந்தால் நல்ல உடல்நலம் கிடைக்கும். முன் 7 ஜென்மத்தின் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கை உண்டு. சுமங்கலிகள் விரதம் இருந்தால் வைதவ்யம் வராது என்றும், கணவரை இழந்த பெண்கள் இருந்தால் அடுத்து வரும் ஜென்மங்களில் அது போல நடக்காது என்றும் நம்பிக்கை.
ஏன் எருக்க இலைன்னு கேள்வி வருதா? எருக்க இலையிலே என்ன எல்லாம் இருக்குன்னு பார்த்தா இதுக்கு விடை கிடைக்கும். நம்ம ஆட்கள் அந்த காலத்திலே யே ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிச்சவங்கன்னு புரியும்.

எருக்க இலைகளிலே இருக்கிற கார்டியாக் கிளைகோஸைட், ( cardiac glycoside)இருதய செயலிழப்பு, தாறுமாறான இதயத்துடிப்பை சரி செய்யக்கூடியது. இருதயத்தைக் காக்கும். பூஞ்சைககாளான் தொற்றுக்களை சரி செய்யக்கூடியது. ஆஸ்துமா, கல்லீரல், மண்ணீரல் பிரச்சினைகளை குணமாக்கும்.தோல், சீரண உறுப்புகள், நரம்பு மண்டலம், சுவாசிப்பது, இரத்த ஓட்டம் அனைத்தையும் சீராக்க உதவும். தொழுநோய்க்கும் இது சிறந்த மருந்து.
இதன் பால் போன்ற சாறு, கான்சர் மற்றும் ஆர்த்ரைட்டிஸை(தோள்,முட்டியிலே அதனாலே தான் வைக்கிறோம்) குணப்படுத்தும். நுரையீரல், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இது மருந்தாகும்.
இதன் இலைச்சாறு யானைக்கால் உண்டாக்கும் கொசுக்களையும், அவற்றின் முட்டை, லார்வே ஆகியவற்றை நீரிலேயே கொல்லும் திறன் பெற்றது.
ஆடுமாடுகளை பாதிக்கும் வயிற்றுப் புழுக்களையும் நீரிலேயே அழிக்கும்.
இப்ப ஏன் இலையை வச்சுக் குளிக்கறோம்கறதுக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சிருக்கும். கூடவே வைக்கும் மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி.
குளிக்கறப்போ நமக்கு நன்மை. குளித்து நீர் நிலைகளிலே கலக்கற இலைகளாலே இதோட நன்மைகள் ஆடு, மாடு, மற்ற மனிதர்கள்னு எல்லாருக்கும் உண்டு. கொசுக்களுக்கும் பைபை.
என்னா டெக்னாலஜி! மொத்த நீர் நிலைகளையும் எல்லாருமா சேர்ந்து குளோரின், பிளீச்சிங் பவுடர் எதுவும் இல்லாம டிஸ்இன்பெக்ஷன் செய்திடுவோம்.
டெட்டால், பினாயில், எதுவுமே இல்லாம ஆரோக்கியமா இருந்த பரம்பரை நம்மளோடது.
எருக்க இலை எவ்விடமோ, ஆரோக்கியம் அவ்விடமே.....ன்னு இனிமே மாத்திப்பாடலாம்.
சும்மா காலையிலே எந்திரி, இலையை வச்சு குளின்னா நம்ம பயபுள்ளைக  சோம்பேறிப்பசங்க, கேட்காது, செய்யாதுன்னு நம்மளைப்பத்தி நல்லா நம்ம பெரிசுங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.
இலையை கண்டுபிடிச்சு, அதுக்கு ஒரு பண்டிகை வச்சு, அதை ஆன்மீகத்திலே கலந்து விட்டு என்ன ஒரு ஜீனியஸ்தனம். உடம்பெல்லாம் மூளையா இருந்திருக்காங்க. தமிழன்டா! தமிழச்சி டா!, இந்தியன்டா!ன்னு நீங்க தாராளமாக பெருமைப்படலாம். இது தெரியாம மூட நம்பிக்கை உள்ள மனுஷங்கன்னு அவங்களை எல்லாத்துக்கும் கிண்டல் செஞ்ச போஸ்ட் கிராஜுவேட் ..................ஆன நாம தான் ...............................( நீங்களே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கோங்க)😜

உடனே எருக்க இலையை அறுவடை செய்ய சீறிக் கிளம்பற சிங்கம்ஸ், சிங்கிஸ்( சிங்கத்துக்குப் பெண்பால்😜) ஒன் மினிட்! பிரேக் போட்டு இதைப் படிச்சிட்டு போங்க.

ஆர்வக் கோளாறிலே, இவ்வளவு நல்லதா? போடு ஜூஸை ன்னு போட்டுக் குடிச்சா கன்பர்மா பரலோகத்துக்கு டிக்கெட் கிடைக்கும். ஆர்வக் கோளாறில் இலையை அவசரமா பறிச்சு அதோட பால் கண்ணில் பட்டால் "புண்ணியம் தேடி காசிக்கு போவார்" னு விக்ரம் மாதிரி, "அழகு அழகு தேவதை" ன்னு ராஜபார்வை கமல் மாதிரி, உன்னை நினைச்சு நினைச்சு உருகி, உதயநிதி மாதிரி கண்ணு தெரியாம கருப்பு கண்ணாடி மாட்ட வேண்டி வரும். உஷார்.

நான் சொல்லிட்டேன்பா.ஏதாவது ஏடாகூடம் செஞ்சு வச்சிடாதீங்க. அப்புறம் உதை வாங்க என் உடம்பிலே தெம்பில்ல.🥴

நல்ல பிள்ளையா பூ விக்கிற அக்கா கிட்டேயோ அண்ணாகிட்டேயோ வாங்கி வீட்டு பெரியவங்க கிட்டே கேட்டு முறையா,சமத்தா செய்ங்க. அப்பா, அம்மா,பாட்டி, தாத்தா ஏதாவது சொன்னா அதை மூட நம்பிக்கை, இதுங்களுக்கு வேற வேலையில்லை,ஷட் அப் பண்ணுங்கன்னு எல்லாம் இனிமே சொல்ல மாட்டீங்கல்ல?

ரொம்ப கருத்து சொல்ரேனோ?😀

நான் ஜூட்.
அன்புடன்,
ஜெயா சுப்பிரமணியம்.




Comments

Popular posts from this blog