ஹிந்தியும் நானும்

ஹிந்தியும் நானும்.

ஹிந்தி தெரிஞ்சா தான் சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைக்கும் என யாரோ ஒரு நல்ல உள்ளம் அட்வைஸ் கொடுக்க, கழுதை மேய்ச்சாலும் கவர்மென்ட் கழுதையை மேய்க்கணும் என்ற அந்தக்கால கோட்பாடுகளின் படி ஹிந்தி படிப்பது என்ற தீர்மானம் எங்கள் வீட்டில் நிறைவேற்றப்பட்டது.

காலனிக்குள்ளேயே ஒரு டீச்சர் கிடைக்க ஒரு சுபமுகூர்த்த நாளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நானும் மூன்றாம் வகுப்பு படித்த என் தங்கையும் ஒரே  டியூஷன் கிளாஸ் போக ஆரம்பித்தோம்.

என் வயது காரணமாக நான் நேரடியாக மத்யமா படிக்கலாம் என்றும் என் தங்கை பிராத்மிக் எழுத வேண்டும் என்றும் டீச்சர் சொல்ல படிக்க ஆரம்பித்தோம்.இதை சாக்காக வைத்து  ஹிந்திப் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சோம். அப்போ டிடி மட்டும் தான். பாதி நேரம் எப்படியுமே ஆத்தா ஹை ஜாத்தா ஹைன்னு தான் ஓடும்.

குறித்துக் கொடுத்த கேள்வியை அப்படியே நெட்டுரு போட்டு மத்யமா பாஸ். அடுத்து ஒரு oral test என்ற போது தான் ஹிந்திக்கு என்னால் ஏழரை சனி ஆரம்பம் ஆனது. ஹிந்தி தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஒரே கேள்விக்கு ஆண் ஒருவாறாகவும் பெண் வேறு மாதிரியும் பதிலளிக்க வேண்டும்.
நான் செய்த குழப்பத்தில் "கடுப்பேத்தறா யுவர் ஹானர்" ஆனார் டீச்சர்.  மே, மை, ஹி, ஹூ எல்லாம் புரியாத புதிர் ஆனது.இனிமே உனக்கு பான்ட் சட்டை தான் மாட்டி விடணும் என்று காண்டான டீச்சரை நான் ஆண் தேற்றுவது போல ஹிந்தியில் தேற்ற சாந்தமான சரஸ்வதி டீச்சர் உக்ர காளி ரேஞ்சுக்கு பிபி ஏறி எனக்கு ஹிந்தியே மறந்து போச்சு என்று புலம்ப ஆரம்பித்தார். பாவம் யாரு பெத்த புள்ளையோ. ரொம்ப கன்பியூஸ் ஆயிட்டாங்க.
டீச்சரின் தோழியே examiner ஆக வர மேற்கொண்டு பிபி ஏறாமல் தப்பித்தார். கொசுறாக நானும் தப்பிச்சேன். இப்பயும் சர்டிபிகேட் வச்சிருக்கோம்ல!
அடுத்தது ராஷ்டிரபாஷா. அதையும் நெட்டுறு போட்டுத் தேற்றி முடித்து, நான் பிரைவேட் கழுதையே மேய்க்கிறேன்னு பிடிவாதம் பிடிச்சு ஹிந்தி குற்றுயிரும் குலையுயிரும் ஆகாம காப்பாத்தி விடப் போய் தான் இன்னைக்கு உங்களுக்கெல்லாம் ஹிந்தியை பார்க்கிற பாக்கியம் இருக்கு. என் நல்ல மனசை நீங்க பாராட்டி தான் ஆகணும்.என் தங்கை விடாமல் படித்து கடைசி எக்சாம் வரை முடித்தாள். உள்நாட்டில் இருந்த வரை உதவாத ஹிந்தி அவள் ஜெர்மனியில் குடியிருந்த போது உதவியது. அங்கே கடை வைத்திருப்பவர்கள் வட நாட்டவர், பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஆக கடைசிவரை எங்கள் இருவருக்கும் government கழுதை மேய்க்க சான்சே இல்லை. நாலு ஹிந்தி படம் பார்த்திருந்தா போதும். படிக்கிற ஹிந்திக்கும் பேசற ஹிந்திக்கும் சம்பந்தமே இல்லை. ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன்னு தெரியலைன்னு அவ புலம்பியது தனிக்கதை. ( ஹிந்தி படிச்சே ஆகணும்னு பிள்ளைங்களுக்கு ஸ்கூலிலே ஹிந்தி செலக்ட் செய்யறதுக்கு முன்னாடி நோட் திஸ் பாயின்ட் பேரன்ட்ஸ்!)
அப்படியே 2012 வாங்க. ராகவ்க்கு நான்காம் வகுப்பு டூ எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் third language ஆக எடுக்க சொன்ன போது ஹிந்திக்கு திரும்பவும் ஆரம்பிச்சது சனி.
. ராகவ் ஸ்கூலிலே மாசாமாசம் PTM உண்டு. நான் முதல் மாசம் போய் யார் டீச்சர்-னு பார்த்திட்டு வர்ரதோட சரி. ஏதாவது பிரச்சினைன்னா அவங்களே கூப்பிடப் போறாங்க.  எதுக்கு சும்மா போய் கேக்கணும்னு விட்டிடுறது.வருஷக் கடைசியிலே போய் ஒரு thankyou சொல்லிட்டு
வர்ரதோட சரி. ஆடிட்டோரியம்ல எல்லா மிஸ்ஸும் உக்காந்திருப்பாங்க.  நம்ம போய் கியூவில் வெயிட் செய்து பார்க்கணும். கணக்கு, சயின்ஸ், கிளாஸ் டீச்சர் முன்னாடி எப்பவும் கூட்டம் இருக்கும். ஹிந்தி, சமஸ்கிருதம் டீச்சர் எல்லாம் கொஞ்சம் பிரீயா இருப்பாங்க. நான் போய் நல்லா வெள்ளையா வடக்கத்தி சாயலிலே இருந்த மிஸ் கிட்டே உக்கார்ந்து நான் ராகவோட அம்மான்னு அறிமுகப்படுத்திகிட்டேன். அவங்களும் இன்ன மாதிரி எல்லாம் நீங்க வீட்டிலே பிராக்டீஸ் குடுங்க. ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு ராகவ் நல்ல பையன், புத்திசாலி, நல்லா ஆன்ஸர் பண்றான் எல்லாம் சொன்னாங்க. பெத்த மனசுக்கு அப்படியே கரும்பு ஜூஸ் குடிச்ச பீல். இப்படியே நாங்க "வாங்க பழகலாம்" னு 10 நிமிஷம் பழகினோம்.  திடீர்னு,
 எப்படி இருப்பான் உங்க பையன், முகம் ஞாபகம் வரலேன்னாங்க. உடனே செல்போன் எடுத்து படத்தை காட்ட இவன் என் கிளாசிலேயே இல்லைன்னு ஜெர்க் குடுத்தாங்க.  அப்போ தான் எனக்கு நம்ம இவ்வளோ நேரம் பழகினது வேற கிளாஸ் மிஸ்ஸோட ன்னு பல்பு அடிச்சது. இரண்டு பேர் முகத்திலேயும் டன் டன்னா அசடு வழிஞ்சது. அடுத்த PTM லே இருந்து உஷாரா ராகவை அடையாளம் காட்ட சொல்லிட்டு தான் டீச்சர் கிட்டே போறதுன்னு சபதம் எடுத்தேன்.(எவ்வளவு பல்பு தான் வாங்கறது?)

முதலிலே ரொம்ப கம்மி அளவில் இருந்ததால் நானே ஹிந்தி சொல்லிக்குடுத்து சமாளித்தேன்.  ஹிந்தி நோட்டில் சிகப்பு மையில் டீச்சர் சுழித்து சுழித்து ஹிந்தியில் ஏதோ எழுதி (திட்டி) தருவார்.  இப்படியே ஹிந்தியை கொடுமைப் படுத்தினோம்.ஆறாம் வகுப்பில் கேள்வி பதில் ஆரம்பித்த போது கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தேன். நம்ம "ஏக் காவு மே ஏக் கிஸான் ரகு தாத்தா" பரம்பரை.
ஒவ்வொரு டெஸ்டுக்கு முன்னாலேயும் நான் உட்கார்ந்து ஹிந்தி தெரிஞ்சவங்க கிட்டே கேட்டு  தமிழில் எழுதி சொல்லிக் கொடுப்பேன். கூகிள் டிரான்ஸ்லேட்டர் வச்சு கொஞ்ச காலம் ஒடிச்சு. ஒவ்வொரு வருஷத்தையும் ஒரு வழியா பிடிச்சு தள்ளி எட்டாம் கிளாஸ் வந்ததும் என் ஹிந்திப் புலமை (?) மேல நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி, ஒரு ஹிந்தி மாஸ்டர் ஏற்பாடு செய்தோம்.
அழகா 8 கிளாசிலே ஜம்முன்னு ஹிந்தி சொல்லிக் குடுத்தார். முதலிலே ராகவ் க்கு தெரிஞ்சது தெரியாதது எதுன்னு கண்டுபிடிச்சு அதுக்கு ஏற்றபடி interesting ஆக நடத்தினார். ஹிந்தியை எப்படா தலைமுழுகுவோம்னு காத்திருந்த நானும் ராகவ்வும் ஆர்வமா ஹிந்தியை பார்க்க ஆரம்பிச்சோம். Passionate ஆக டீச்சர் கிடைச்சா யாரும் எதையும் ஈசியா படிக்கலாம்.
8ம் கிளாசோட ஹிந்திக்கு பிரியாவிடை குடுத்தோம்.
 முதலிலேயே இவரைக் கூப்பிட்டிருந்தா  ஹிந்திக்கு நல்லா இருந்திருக்கும். அதுக்கு விதி என் வழியிலே வித்தை காட்டணும்னு இருக்கு. யார் என்ன செய்யரது?

லேட்டஸ்ட் நிலவரம். கார் துடைக்க வந்த ஹிந்திக்காரப் பையன் காலை 5 மணிக்கு கதவு தட்டி ஹிந்தியில் துடைக்க துணி வேண்டும்  என்று கேட்க அரைகுறை தூக்கத்துடன் கதவு திறந்து பழைய சேலைத்துணி ஒன்றைக் கொடுத்து அனுப்பினேன். ஏதோ கோபமாக சொல்லிக் கொண்டே கீழே இறங்கிப் போனார். ஆனாலும் அவருக்கு ரொம்பக் கோவம் வருதுன்னு என்று நான் அவர் எழுந்ததும் புகார் வாசித்தேன்.

விசாரித்த என்னவரிடம் துட்டு கேட்டா மேம்சாகிப்  பழைய துண்டு குடுக்கிறாங்க என்று  பதில் புகார் வாசித்திருக்கிறான். துண்டு போட்டு சொம்பு வைத்து நாட்டாண்மை செய்யாத குறையாக ஹிந்தியில் அவரை சமாதானப்படுத்தி, இனிமே நான் மட்டும் அவர்கிட்டே பேசரேன், நீ YouTube, Instagram,Facebook மட்டும் பாரு என்று ஒரு மொழிக்கலவரம் நடக்காமல் பார்த்துக்கொண்டார் என்னவர்.

டிசம்பர் மாசம் மும்பையில் நடந்த YouTube Recharge Event க்கு நானும் ராகவும் போனோம். ஆர்வக்கோளாரில் என் ஹிந்திப்புலமையை நான் எடுத்து விட, மும்பைக்காரர்கள் ரொம்ப மரியாதை தெரிந்தவர்கள். கொஞ்சம் கூட சிரிக்காமல் கேட்டதைக் தந்தார்கள்.  காரம் தூக்கலாக நான் இட்லி சாம்பார் கேட்க ( அல்லது கேட்டதாக நினைக்க) சர்க்கரை தூக்கலாகப் போட்ட சாம்பாருடன் இட்லி கொடுத்தார்கள்.🥴

நான் ஒரு இடத்துக்கு போக சொன்னால் (again சொன்னதாக நினைத்தால்) ஆட்டோ அண்ணா கரெக்டாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார். இது ஒண்ணும் ஆவரதில்லை என்று ராகவ் அம்மா பிளீஸ் இனிமேல் நான் பேசறேன் என்று takeover செய்ய ஹிந்தி திரும்ப என்னிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பித்தது.

பல்பு வாங்கறதுன்னு ஆச்சு. அப்பறம் தமிழ்நாடென்ன? மும்பை என்ன? All state bulbs accepted here.

நான் ஹிந்தி டீச்சர் பார்த்து பழகிட்டு வந்த கதையை வச்சு இன்னைக்கும் அப்பாவும் பிள்ளையும் என்னை கிண்டல் பண்ணிகிட்டிருக்காங்க.😀. நீங்களும் அவங்க  சங்கத்திலே சேர மாட்டீங்கன்னு நம்பி சொல்லிட்டேன். என்னை பல்பு கடை திறக்க வெச்சுடாதீங்க.😜
Jaya Subramaniam

Comments

Popular posts from this blog