Kavidhai

கணவனை பணி நிமித்தம் பிரியும் ஒரு மனைவியின் தவிப்பு இது. எப்பயோ கிறுக்கியது.

மெத்தப் படித்து மென்பொருள்
இயக்கும் நீ
நிலவு வாழ்க்கை
சூரிய சோகம்
விடியா இரவில் விழித்து
நீ தொலைதூர "கால்" பேச
தொலைந்தது நமக்கான நேரம்

விடிந்தும் விடிவதில்லை பகல் பொழுது
உன் பணிப்பயணங்கள் நம்மை பிரிக்க
உன் நினைவுகள் வயிற்றில் உதைக்க
கண்ணில் கனவுடன் காத்திருக்கும் நாம்

நீ வரும் வாரங்கள்
விருட்டென்று போக
எல்லாம் விட்டுவிட்டு
பாதையோரத்தில் சிறு கடை
வைத்து சேர்ந்து பிழைப்போமா
என்றெல்லாம் எண்ணங்கள் வந்துபோகும்

என்னைச் சுற்றி உன் தெய்வங்கள்
வந்து போகும் பெற்றவர்
கூடிப் பேச தோழிகள்
காலம் கடத்த தொலைக்காட்சி
பை நிறைய புதுப் பணம்
எதுவும் ஈடில்லை
"கண்ணம்மா" என்றெனையழைக்கும்
உன் குரலுக்கு

உனை அணைக்கும் மென்போர்வை
காது மடல் தினம் வருடும் அலைபேசி
நீ கொஞ்சும் நம் குழந்தை
மடியை நீங்கா உன் கணிணி
நித்தம் நீ இயக்கும் சிற்றுந்து
அனைத்தும் நானாக
மாட்டேனா என தவங்கள்
இயற்றிக் காத்திருக்கிறேன்  நான்!
Jaya Subramaniam

Comments

Popular posts from this blog