Thought For The Day - நடமாடும் ஞானகுரு

நேற்று ஒரு நிகழ்வு.

காலை சுமார் 9.30 மணி.

தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்திவிட்டு, stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரியவரும் ரோடை Cross செய்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும்.

வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று break போட்டு நின்றது.

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.

என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.

ஸ்கூட்டர்,அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில்,அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது.

முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார்.

இன்று அதே நேரத்தில்,அங்கு எனக்கு இருக்கும் சூழ்நிலை. அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.

எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.

அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், ஒரு நிமிஷம் சார் என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.

அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, என்ன? என்று கோபமாக கேட்டாள்.

நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான்  நினைத்தேன்.

ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.

தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு "ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை. நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நெம்பர்ஸ் எல்லாம் இதில்தான் இருக்கிறது. மிக்க நன்றி" என்று கூறிவிட்டு கண் கலங்கினார்.

நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது.Work tension. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டேன்" என்று கைகூப்பினாள்.

அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றதுதான். இதை போய் பெரிசுபடுத்திக்கொண்டு. ஜாக்கிரதையாக போ தாயி" என்று அன்போடு அனுப்பி வைத்தார்.

நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே" என்றேன்.

சின்ன பொண்ணு சார்.இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆலவிருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார். வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா? நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே." என்றார்.

என்னால் பேசவே முடியவில்லை. அசந்து விட்டேன்.

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்.....
Source: 

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips