Panduranga - For A Devotee!

பக்தனுக்காக சமையல்காரனாக_மாறிய பாண்டுரங்கன் அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல. தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி. திருமண ஏற்பாடு அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா. இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன், அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான். அவனும் ஏழைதான் என்றாலும், அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது. நாளையப் பொழுதில் திருமணம். ஆனால் நீளோபாவின் வீடு உறவுகளின் கலகலப்பின்றி காணப்பட்டது. நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால், அவரது உறவினர்களின் மனதில் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. எங்கே திருமணம் வீட்டிற்கு முன்பாகவே சென்றால், பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் எவரும் வந்து சேரவில்லை. முதியவர் வருகை இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள். அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா. உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர். ‘எல்லாம் இறைவனின் சித்தம். ஐயா! தாங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா. அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி.. இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார். ‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர். நீளோபா அவரைத் தடுத்து, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா?. உள்ளே போய் பசியார உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்து தான் சாப்பிட வேண்டுமா?’ என்று கூறினார். சமையல் பொருட்கள் ‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களை காப்பாற்ற முடியாது. உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார். பதறிப்போய் அவரை தடுத்தார் நீளோபா. ‘ஐயா! நில்லுங்கள். அந்த பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தன் மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார். முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை கல்யாண சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் முதியவர். அவளும் அப்படியே செய்தாள். அதன்பிறகு முதியவருக்கு உணவு அளித்தனர். அதனை சாப்பிட்டு முடித்தார். அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். ‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர். நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியும்?’ என்றார். சமையல்காரனாக... ‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான். தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா. ‘நன்றாக இருக்கிறது! தன்னுடைய கல்யாணத்திற்கே மணப்பெண்ணே சமைப்பதா?. நன்றாக இருக்கிறது!. நாளைக்கு அடுப்படிப் பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாக சமைப்பேன். சிக்கனமாய், அதே நேரத்தில் சுவையாய், மணமாய், விதவிதமான சமையல் செய்வேன். திருமண விருந்திற்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறிவிட்டார் முதியவர். அவரது வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார். விருந்தில் மயங்கினர் அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். ‘என்ன நீளோபா.. திருமணத்திற்கு வீடு தேடி வந்து அழைத்தாய்.. வராவிட்டால் ஏழை என்று ஒதுக்கிவிட்டதாக நினைத்து கொள்வாய் என்றுதான், அவசர வேலைகளைக் கூட அப்படியே போட்டு விட்டு வந்தேன்’ என்று கூறியபடி வந்த உறவினர்கள் அனைவரும் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்து போய்விட்டார்கள். விருந்தில் அத்தனை பதார்த்தங்களை இதுவரை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். லட்டு, முறுக்கு, அதிரசம் என்று கண்களை கவர்ந்தன. சமையலை வாசனை மூக்கைத் துளைத்தது, முந்திரியும், பாதாமும் முதல் பந்தியில் சாப்பிட்டவர்களை, அடுத்த பந்திக்கும் இழுத்தது. பாண்டுரங்கன் விக்கிரகம் விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார். ஆனால் முதியவரை காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பது கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவருக்கு தெரிந்தது. அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது... ஓம் நமோ நாராயணா நமஹா Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog