குச்சி
குச்சி என்னும் தலைப்பில் இணையத்தில் உலா வருகிறது இந்த அருமையான கவிதை. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. காந்தியின் குச்சியில் ஆரம்பித்து சாத்தான்குளக் குச்சியாகிய லத்தியில் முடிகிறது. உருக்கமாகவும், உறைக்கும்படியும் இருக்கிறது. படியுங்கள்.....
* * *
குச்சி:
ஊன்றி நடக்க உதவும்.
அது
காந்தியின் கைகளில் இருந்தபோது
கையெடுத்துக் கும்பிட்டது உலகம்!
குச்சி
கொடியைக் காக்கப் பயன்படும்.
அது
திருப்பூர் குமரன்
கைகளில் இருந்தபோது
வந்தே மாதரம் என்று
வணங்கியது தேசம்!
குச்சி
கம்பீரம் எனச் சொல்லப்படும்.
அது
நேதாஜி கையில் கிடைத்தபோது
இராணுவ அணிவகுப்பின் இறுமாப்போடு
இதயம் நிமிர்த்தியது தேசம்!
குச்சி
ஒழுக்கத்தை ஊட்டித் தரும்.
அது
ஆசிரியர்கள் கையில் இருந்தபோது
கல்வியும் கலாச்சாரமும்
கருணையும் பண்பாடும்
உச்சத்தில் இருந்ததாக
உரக்கச் சொன்னது பூமி!
குச்சி
ஒரு தேசத்தை ஆள உதவும்.
அது
நல்ல மன்னர்கள் கையில் இருந்தால்
நீதி நேர்மை வழுவாத
செங்கோல் என்று
சிலாகித்தது ஊர்!
குச்சி
விலங்கு பறவை
விரட்டப் பயன்படும்.
அது
ஆதிமனிதன் கையில்
அகப்பட்டபோது
நீர்நிலை கடக்கவும்
மாமிசம் கறி மலர் பறிக்கவும்
உதவியதாகச் சொல்கிறது
உலக வரலாறு!
குச்சி
பாதுகாப்புக்குப் பேர் போனது.
பறவை கூடும்
மனிதன் வீடும்
வேலியாய் நிற்கும் காடும்
குச்சிகள் தந்த
இலவசக் கொடை!
குச்சி
அது தியாகிகள் பட்டியலில் வரும்.
தன்னை எரித்து நாம்
தின்னும் உணவு தயாரிக்கும்.
அன்னையின் கையில்
அகப்பையாய் மாறி
அன்னம் அள்ளித் தரும்.
குச்சி
விவசாய தேசத்தின் முதல் அமைச்சர்.
அது
கலப்பை ஏர் என நிறம் மாறிக்
காணிநிலம் உழும்போதுதானே
ஒரு நாட்டின் முதுகெலும்பே நிமிரும்!
குச்சி
கனமானதைக் கூட
மெதுமெதுவாக்கும்.
அது
பருப்பு கீரை
தயிர் கடையும் மத்தாகி
மென்மையான மேன்மை செய்யும்!
ஆட்டுக்கல் உரல் திருவை என
உருமாறி உன்னதம் செய்யும்!
குச்சி
சளைக்காமல் எடை சுமக்கும்.
அது கட்டில் நாற்காலி
காற்றாட ஊஞ்சலென
கைநீட்டிச் சேவை செய்யும்!
கொஞ்ச நஞ்சமல்ல
கூடை கூடையாய்ச் சேவை செய்யும்.
அது
கவிஞன் கையில எழுதுகோலாய்
ஓவியன் கையில தூரிகையாய்
சிற்பியின் கையில் உளியாய்
தச்சனின் வேலையில் சுத்தியலாய்
மாறி மாறி வேடம் போட்டு
மலைக்க வைக்கும்!
குச்சி
பாதையைப் படம் வரைந்து
பாகம் காட்டும்.
அது
கண் தொலைத்த
கருணையாளர்களின் கால் நடக்க
தடுமாறாத நிலை கிடைக்க
தட்டித் தட்டி
வழியோர இருளில் தீபம் ஏற்றும்!
குச்சி
காட்டுவழிப் பயணத்தின்
காவல்காரன்.
அதன்
தலையில் துணி சுற்றி
நெருப்பை உடுத்திக் கொண்டால்
வழி காட்டுவது மட்டுமல்ல
விலங்குக்கே பயங்காட்டி
நம்மை
வீட்டுக்கே கொண்டுவந்து
அந்தத்
தீப்பந்தம் நம் பந்தம் சேர்க்கும்!
குச்சி
உடல் முழுதும் துளையிட்டுப்
புண்படுத்தினாலும் அழாது.
அது
புல்லாங்குழல் ஆகும் போது
புன்னாகவராளி இசைக்கும்!
குச்சி
ஒரு தலைமைத்துவக் கருவி.
அது
மேய்ப்பவன் கை அமரும்போது
மந்தைகள் நேராக வழி நடக்கும்!
குச்சி
பயணத்துக்கான ஒரு புனிதச் சக்கரம்.
அது
படகு ஓடம் கடல் நீந்தத்
துடுப்பாய் நின்று துடிப்புக் காட்டும்!
கடல் கடக்கப்
பறவை அலகில்
ஒரே ஒரு குச்சி போதும்.
கண்டங்கள்
விசா இல்லாமல் காலடி வரும்.
கடலில் விழுந்தவனுக்கும்
கையில் ஒரு குச்சி கிடைத்தால் போதும்.
கரைகள் கையில் தட்டுப்படும்.
குச்சி
சுத்தம் செய்யும் போராளி.
அது
குப்பைகளைத்
துடைப்பக் கட்டையால்
பெருக்கித் தள்ளும்!
குச்சி
இதற்கு
லத்தி என இன்னொரு பெயர் உண்டு.
இது
சிலர் பயன்படுத்திய பிறகு
லாக் அப் மரணம்
நிற்காத இரத்தப் போக்கு
அப்பன் பிள்ளை அம்மணம்
கழிவு வழியில் ஆணிகளின் சிலுவை என
சாத்தான் குளமாகிவிட்டது குச்சி.
குச்சி சுமக்கும் மரங்கள்
குற்ற உணர்ச்சியில் அழுதபடி
நிற்கின்றன சிலரால்.
குச்சிகளின் நுனியில்
பூக்களையும் கனிகளையும்
நீட்டுகிறது ஓரறிவுத் தாவரம்.
ஆறறிவு நமக்கு
ஆனால்
ஆணி செருகுகிறோம்.
அவர்கள் மனிதர்களா மிருகங்களா
எனக் கேட்காதீர்கள்.
மிருகங்கள் பாவம்!
குச்சி பிடிக்க
இனி
நடுங்கட்டும் விரல்.
ஏனெனில்
கடைசியில்
குச்சிகளின் பாடையில்தான்
எரியூட்டப்படும் நம் உடல்!
அடிப்பது தாக்குவது
அரக்கர்கள் குணம்.
அன்புக்கெனப் பிறந்தது மனித இனம்.
மறந்துவிடாதீர்கள்
குச்சி
ஒரு தேசத்தின் புகழைக்
கொடியேற்றும்.
லத்தி
ஒரு தேசத்தின் மானத்தை
நிர்வாணமாக்கும்.
மேய்ப்பவன் கையில்
இருக்கும் குச்சி
தண்டிப்பதற்கு அல்ல
வழிநடத்திச் செல்வதற்கே!....
Comments
Post a Comment