If you find an old or sick cow call this number

112 ஆண்டுகள் , 12 ஏக்கர் நிலம், 2,000 மாடுகள்... சென்னையில் ஒரு பிரமாண்டமான பசுமடம்🐄🐄🐄 நீங்கள் சாலையில் போகும்போது ஒரு பசுவோ, காளையோ விபத்தில் அடிபட்டுக் கிடந்தால்... தான் ஆசை ஆசையாக வளர்த்த மாட்டைப் பராமரிக்க வழியில்லாமல் அடிமாட்டுக்கு விற்க முயலும் ஒரு விவசாயியைக் கண்டால்... கோயிலில் நேர்ந்து விடப்பட்ட காளைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் அவை பசியில் துன்பப்பட்டால்... எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்கிறார்கள் `தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்' ட்ரஸ்ட்டைச் (The Madras Pinchrapole Trust) சேர்ந்தவர்கள். `பிஞ்ச்ராபோல்' என்றால் தமிழில் `பசுமடம்' என்று அர்த்தம். நூறல்ல, இருநூறல்ல... 2,000 மாடுகளை கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார்கள் இந்த அமைப்பினர். சென்னை அயனாவரம் - கொன்னூர் பிரதான சாலையில் இருக்கிறது இந்தக் கோசாலை. முகப்பு, ஜெயின் கோயிலின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் ட்ரஸ்ட்டின் அலுவலகம். அதைக் கடந்தால் 12 ஏக்கரில் பிரமாண்டமான கோசாலை. சுற்றியிருக்கும் நான்கு திசைகளிலும், பெரிய பெரிய அபார்ட்மென்ட்கள் முளைத்திருக்க நடுவில், மிகவும் தாழ்வான கட்டடத்தில், 2,000 வாயில்லா ஜீவன்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பசுமடம். சென்னை போன்ற பரபரப்பான மாநகரத்தில், ஒரே இடத்தில் மொத்தமாக 2,000 மாடுகளைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது; குதூகலமான உணர்வு பிறக்கிறது. மொத்தம் 56 ஷெட்களில் வைத்து இந்த மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில், 900 பசுமாடுகள், 900 காளைகள், 200 கன்றுக்குட்டிகள். பசுக்களில், 120 கறவை மாடுகள். இவற்றுக்குத் தேவையான தீவனம், தண்ணீர் ஆகியவை ஷெட்டுக்குள்ளேயே இருக்கின்றன. கதவைத் திறந்து ஷெட்டுக்குள் நுழைந்தால், ஏ.சி அறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது. கூலிங் ஷீட்டுகளால் மேற்கூரை வேயப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே, மாடுகள் சீராக எழுந்து நின்று நம் மீது பார்வையைத் திருப்புகின்றன. அந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு கால்நடை மருத்துவமனை இருக்கிறது. அங்கே, உடல்நிலை சரியில்லாத மாடுகளைப் பரிசோதிக்கிறார்கள், சிகிச்சை தருகிறார்கள். அடிபட்ட நிலையில் கொண்டுவந்து விடப்பட்டும் மாடுகளுக்கு இங்கே சிகிச்சையளித்து விட்ட பிறகுதான் கோசாலைக்குக் கொண்டு செல்கிறார்கள். மாடுகளைப் பரமாரிப்பதற்காக 120 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே மேலாளராகப் பணியாற்றி வரும் சுரேஷ் குமார், கோசாலை செயல்படும் விதம் குறித்து விரிவாகப் பேசினார்... ``1906-ம் வருஷம் 250 மாடுகளுடன் இந்தக் கோசாலை தொடங்கப்பட்டது. இதை உருவாக்கியவர் குஷால்தாஸ். விலங்கு நல வாரியத்தில் அனுமதி பெற்ற, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது. பசுவதை கூடாது, பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இது ஆரம்பிக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம். நூறு ஆண்டுகளைத் தாண்டி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கிட்டத்தட்ட, 2,000-க்கும் அதிகமான மாடுகளை இங்கே பராமரித்து வருகிறோம். மாடுகளுக்குக் காலையில் , பசுந்தழை, வைக்கோல், தண்ணீர் கொடுப்போம். மதிய நேரத்தில் கோதுமைத் தவிடு, எள்ளுப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலந்த மாட்டுத் தீவனம், பச்சைப் புல் கொடுப்போம். காலையில் இரண்டு மணி நேரம் ஷெட்டுக்குள்ளேயே மாடுகளைத் திறந்து விடுவோம். நன்கொடையாளர்கள் பலர் தினமும் இங்கே வருவார்கள். அவர்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள், இறந்து போன பெரியவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களை முன்னிட்டு இங்கிருக்கும் பசுக்களுக்குத் தேவையான உணவை நன்கொடையாகத் தருவார்கள். அப்படி நன்கொடையாகக் கொடுக்கப்படுபவற்றில் வாழைப் பழம், மாம்பழம் , காய்கறிகள், சப்பாத்தி, கோதுமை அல்வா, குலோப் ஜாமூன்... என நீண்ட பட்டியல் ஒன்று உண்டு. மற்ற நாட்களைவிட, அமாவாசை, பௌர்ணமி நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே வருவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று இந்த இடமே திருவிழாபோல காட்சியளிக்கும். ஜெயின் மக்கள் மட்டுமல்ல... மற்ற பிரிவினரும் இங்கே வருவார்கள். எங்கள் வளாகத்துக்குள்ளேயே, 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை இருக்கிறது. கோசாலையிலிருக்கும் மாடுகளுக்கு மட்டுமல்ல... வெளியிலிருந்து கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கும் இங்கே சிகிச்சையளிக்கிறோம். ஆளுநா் , உயர் நீதிமன்ற நீதீபதி ஆகியோர் எங்கள் ட்ரஸ்ட்டின் கௌரவத் தலைவர்களாக இருக்கிறார்கள். போர்டு மெம்பர்களாக ஜெயின் மக்கள், தமிழ் மக்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள். மாடுகளைப் பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை இங்கே கொண்டு வந்து விட்டுச் செல்லலாம். பலர் பொருளாதாரச் சூழல் காரணமாக அவற்றை அடிமாடுகளாக விற்பார்கள். அவர்களுக்குத் தேவையான பணத்தை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்து, மாடுகளைக் வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வருகிறோம். தூரத்திலிருந்து மாடுகளைக் கொண்டு வரச் சிரமப்படுபவர்களுக்கும், நன்கொடையாளர்களிடம் நிதி பெற்று எங்கே இருந்தாலும், மாடுகளை இங்கே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். திருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை... எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாடுகள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்து அறநிலையத்துறையின் சார்பாகவும் பல மாடுகள் இங்கே விடப்பட்டிருக்கின்றன. நேர்ந்துவிடப்படும் மாடுகளைக் கோயில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இங்கே கொண்டு வந்துவிடுவதும் உண்டு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், காளிகாம்பாள் கோயில், பார்க் டவுன் கந்தசாமி கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில்... என பல கோயில்களிலிருந்து ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம், சீக்கியர், சிந்தி... என அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கோசாலைக்கு வருகிறார்கள். நன்கொடை தருகிறார்கள். இஸ்லாமியர்கள் நோன்புக் காலங்களில், நோன்பு திறந்து பின் இங்கே வந்து தானமளித்துவிட்டுச் செல்வார்கள். பசுக்களிடமிருந்து கறக்கப்படும் பாலையும் சிலர் நன்கொடை கொடுத்துப் பெற்றுக்கொள்வார்கள். சிலருக்குப் பாலை பாக்கெட்டில் அடைத்து அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு போய் கொடுப்போம். அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை மாடுகளை எப்படிப் பராமரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் இங்கே நடக்கும். எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து போதிய உதவிகள் கிடைக்கவில்லை. உதவி கிடைத்தால், இன்னும் சிறப்பாக எங்களால் சேவை செய்ய முடியும். நன்கொடையாளர்களும் அதிகமாக வர வேண்டும். பசு, ஜாதி மதம் பார்த்து பால் தருவதில்லை. நமக்காக உழைத்த பசுவையும், காளையையும் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை’’ என்றார் அவர். The Madras Pinchrapole Sriroshiv Trust 383 Konnur High Road, Otteri, Chennai, Tamil Nadu 600012 044 2662 0960 இந்த பதிவை அனைவருக்கும் அனுப்பவும் 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

Comments

Popular posts from this blog