கர்மவினை
மஹாபாரதப் போரின் முடிவில் தனது நூறு புத்திரர்களையும் பறி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த திருதராஷ்டிரன் பகவான் கிருஷ்ணரிடம் "கண்ணா, நான் எந்த ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று கேட்டார்.
அதற்கு பகவான் "திருதராஷ்டிரரே, 300 பிறவிகளுக்கு முன்னால் நீங்கள் செய்த பாவத்தின் பலனை நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு வேட்டுவர். காட்டில் ஒரு "தாய்ப்பறவையை" வேட்டையாட அம்பெய்தினீர்கள். ஆனால், அந்த தாய்ப்பறவையானது தப்பி எங்கோ பறந்து சென்று விட்டது. அந்த கோபத்தில் அந்த தாய்ப்பறவை அடைகாத்துக்கொண்டிருந்த 100 முட்டைகளை போட்டு உடைத்தீர்கள்.அதை அங்கு மறைவில் அமர்ந்திருந்த தகப்பன் பறவை செய்வதறியாமல் சோகத்தில் உருகியது. அந்த வினைப்பயனை தான் இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்" என்றார்.
"அதை நான் என்னுடைய மறு பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே? ஏன் 300 பிறப்பு முடிந்து இப்போது வரவேண்டும்?" என்று திருதராஷ்டிரன் வினவ, நீங்கள் நினைப்பது போல் கர்மவினைக் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் ஒரு குழந்தையை பெறுவதற்கே நிறைய புண்ணியம் செய்ய வேண்டும். நூறு மக்களை பெறுவதற்கு நிறையவே புண்யம் செய்ய வேண்டும். பின் நூறு மக்களை பராமரித்து வளர்க்கும் அளவிற்கு உங்களிடம் சொத்து சம்பத்துகள் இருக்கவேண்டும். ஆக,
அதற்கும் சேர்த்து நீங்கள் புண்யம் சேர்க்க வேண்டும். அவ்வளவு புண்யங்களை சேர்க்க நீங்கள் ஏகப்பட்ட பிறவிகளை எடுக்க வேண்டி இருந்தது. எனவே தான், நீங்கள் நினைப்பது போல் வினைப்பயன் மறுபிறவியிலேயே தீராமல் இவ்வளவு பிறவிகளுக்கு பின்னால் தீர்ந்தது." என்று கிருஷ்ணர் கூறினார்.
குறிப்பு : இக்கதையின் மூலம், இப்பிறவியில் நாம் சேர்க்கும் புண்யமெல்லாம் ஏதோவொரு பிறவியில் செய்த கர்மவினையை சமன் செய்வதில் தீர்ந்துவிடும் எனபதும், பிறவிப் பெருங்கடலை கடக்க நாம் "கூடுதலாக" புண்யம் சேர்க்க வேண்டும்
என்பதும் தெரிகிறது. "கூடுதல்" புண்யம் சேர்க்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் "பாவம்" செய்யாதிருந்தாலே போதும், பிறவிகள் குறைய வாய்ப்புண்டு.
Comments
Post a Comment