சுதந்திர தின விழா
செந்தமிழ்த் திருமுறை பாடிப் பெற்ற சுதந்திரம்:
அரசு ஆள்வர் ஆணை நமதே!
நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது.
சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார்.
நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்!
உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார்.
நேரு சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார்.
மூதறிஞர் இராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆனால் அன்றைய ஆதீனம் 21 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.
எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும்
ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதசுவர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும்
தில்லிக்குத் தனி
விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.
அன்றைக்கு புகழ்பெற்று விளங்கிய
சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லி இருந்தனர்.
புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தை வணங்கி விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார். ஆதீனமும் ஓர் திருமுறைப் பதிகத்தைத் தெரிவித்து அருளி, வாழ்த்தி அனுப்பினார்கள்.
விமானத்தில் ஏறி டெல்லிக்குக் கட்டளைத் தம்பிரானும் ஓதுவாரும், நாதசுவர குழுவும் சென்றாயிற்று.
15.08.1947 அன்று உலகே வியந்து நோக்கிய விழாவும் வந்தது.
கட்டளைத் தம்பிரான் நேருவிடம் உரிய நேரத்தில் தங்கமுலாம் பூசிய ஆணைச் செங்கோலைக் கொடுத்தார்.
அப்போது ஓதுவார் ஆதீனம் தெரிவித்த திருஞானசம்பந்தர் பாடியருளிய கோளறு பதிகத்தைப் மிக்க எடுப்பா கப் பாடிநார்.
பாடலின் இறுதி வரி:
*‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’*
என்பதாகும்.
இந்நாடு விடுதலை பெற்றது திருஞானசம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது
எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் இருக்க, மூத்த மொழியாகிய கண்ணுதல் பெருமானாகிய நம் சிவபெருமான் சங்கம் வைத்து போற்றி சகர்த்த நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது!
இவ்வரலாற்று நிகழ்வை பாடத்திட்டத்தில் சேர்த்து இந்தியக் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அன்று ஒலித்த நம் கோளறு பதிகப் பாடல்களை இன்றும், என்றும் ஓதி உயர்வோமாக!
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்
வாழ்க இந்தியத் திருநாடு!
வாழ்க தமிழ்!
வாழ்க திருமுறைகள்!
அன்புடன்,
ஒளியகம் ந. ஒளியரசு
15.08.2020
Comments
Post a Comment