முகமூடியை கிழித்துப் பாருங்கள்

முகமூடி 12 ம் வகுப்பு தமிழ் Non-detail ல் படித்த ஒரு கதை. எழுத்தாளர் பெயர் ஞாபகம் இல்லை. கதையின் பெயர் "முகமூடி". பிறந்த வீட்டிற்கு திருமணம் ஆகி சில தினங்களில் வரும் மகள். ஆசிரியரான தன் கோபக்கார அப்பாவை தன் அன்பான கணவருடன் ஒவ்வொரு தருணத்திலும் ஒப்பிட்டு கோபம் கொள்கிறாள். மதிய உணவில் துவையலுக்கு நிறைய நெய் விட்ச் சொல்லிப் பிசைந்து ஒரே வாய் சாப்பிட்டு உப்பில்லை என்கிறார். அம்மா சாப்பிட்டு,போதுமே, இருக்கே என்றதும் "அப்படின்னா இது முழுவதும் என் கண் முன்னே சாப்பிடு " என் மனைவியிடம் கோபமாக சொல்கிறார். பெண்ணிற்கு பற்றிக் கொண்டு வருகிறது. தன் தம்பியை படிக்க சொல்லி கண்டிக்கும் அப்பா என் பார்க்கும் ஒவ்வொன்றும் அவளுக்கு தன் அப்பாவின் மேல் கோபமும், வெறுப்பும் வர வைக்கிறது. தன் அன்பான கணவரை நினைத்துப் பெருமிதம் கொள்கிறாள். ஒருமுறை அவள் தெரியாமல் கண்ணாடியை உடைத்த போது, சிறிதும் கோபிக்காமல் "நீ வெளியே இரு" என்று சொல்லி, தானே அத்தனையும் வெகு அழகாக சுத்தம் செய்தது ஞாபகம் வருகிறது அவளுக்கு. சந்தர்ப்பம் வரும் போது அம்மாவிடம் ஆத்திரப்படுகிறாள். அம்மா சிரித்துக் கொண்டே "உங்கப்பா கோபம்கிற முகமூடியை போட்டுகிட்டிருக்கார். அவருக்கு என் மேல் கொள்ளை பிரியம்" என்று சொல்லும் போது அவளால் நம்ப முடியவில்லை. முந்தின இரவு தொடர் இருமல் வந்து மனைவி கஷ்டப்பட்டதால் அவ்வளவு நெய்யை விட்டுப் பிசைந்து சாப்பிட வைத்தார் அப்பா என்று சொல்கிறாள் அம்மா. தானாக அவ்வளவு நெய்யை சாப்பிட மாட்டாள் என்று அவ்வாறு செய்ததாகச் சொல்கிறாள். இது போல் ஒவ்வோரு சந்தர்ப்பத்திலும் அவர் நடந்து கொள்ளும் விதத்திற்கு அம்மா விளக்கம் அளிக்கும்போது தான் அப்பா எவ்வளவு அன்பானவர் என் பெண்ணிற்குப் புரிகின்றது. நம்மைச் சுற்றிலும் முகமூடி அணிந்த "அன்புத் தீவிரவாதிகள்" உண்டு. அவர்களை நாம் அடையாளம் கண்டு வைத்திருக்கிறோமா? எப்போதும் எரிந்து விழும் அம்மாவின் முகமூடியை விலக்கி என்றேனும் அவருடைய அன்பை பார்த்திருக்கிறோமா? கடுகடு அப்பாவின் கோபத்தில் உள்ள முன்னெச்சரிக்கை, ஹிட்லர் என்று பெயர் வாங்கிய ஆசிரியரின் உண்மையான அக்கறை, பழிச்சண்டை போடும் அண்ணனின் உண்மையான அன்பு, சிரிக்கவே தெரியாத அத்தை போன்றவர்களின் முகமூடி விலக்கி பார்த்திருக்கிறோமா? இனியாவது இவர் கோபக்காரர், அவர் முசுடு, இவர் ஹிட்லரின் அப்பா என் நாமே அவர்களுக்கு ஒரு பட்டம் கட்டாமல் இருக்கலாமே. முகமூடிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அன்பான இதயத்தை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை. சந்தோஷமாக வாழுங்கள்.🙂 அன்புடன், ஜெயா சுப்பிரமணியம்

Comments

Popular posts from this blog