சிக்கனம்

சிக்கனம் அந்த நாளில் அடிக்கடி பலரும் சொல்லும் சொல் இது. அனாவசியமாக செலவழிக்கக் கூடாது. கடன் வாங்க கூடாது. ஆடம்பரம் கூடாது. ஏய்த்து பிழைக்கக் கூடாது. முக்கியமாக எதையும் வீணாக்கக் கூடாது. இது எல்லோருக்குமான பால பாடம். சொல்லிச் சொல்லிதான் வளர்ப்பார்கள். இயற்கையாகவே இந்த எண்ணங்கள் எல்லோருக்கும் இருக்கும். காசு பணம் என்றுதான் இல்லை. வார்த்தைகளிலும் சிக்கனம் வேண்டும் என்பார்கள். சாமான்கள் எதையுமே தேவைக்கு மேலே வைத்து வீணாக்க மாட்டார்கள். ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்பதில் கவனமாக இருப்பார்கள். சிக்கனத்தை கருமித்தனம், வெட்கப்பட வேண்டிய குணம் என்று மாற்றி விட்டார்கள். பிறரது நன்மதிப்புக்காகவே தகுதியை மீறி செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மீறுதலை சரிக்கட்ட நியாயத்தை, நேர்மையை தள்ளி வைக்க ஆரம்பித்து , அதனால் தர்மத்தை துறந்து இன்று எப்படியாவது சம்பாதிக்க/ பணம் பண்ண வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. எல்லாவற்றையும் துறந்தவர்கள் கோவணாண்டியை பார்த்து சிரித்தது போல சமூகம் மாறிவிட்டது. எளிமையும், நேர்மையும் அவமானமாக பார்க்கப் படுகிறது. இப்போதைய நோய்த்தொற்று பரவல் போல ஆடம்பர, அனாவசிய செலவுகள் எங்கும் பரவி விட்டது. குடும்பத்தில் ஓரிருவர் சம்பாதிப்பதும், மற்றவர்கள் அவர்களை நம்பி இருப்பதுமாக இருந்ததால் அந்நாளில் இயற்கையாகவே சிக்கனம் வந்து விடும். எளிய வாழ்க்கை முறை. பண்டிகை, விசேஷங்களுக்கு சற்று கூடுதலாக செலவு என்று சீராக இருக்கும். சாப்பாட்டை வீணாக்கக்கூடாது. பரிமாறுபவர்கள் சாமர்த்தியமும் தேவை. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சாப்பிடுவதே பழக்கம். மீண்டும், மீண்டும் சுட வைப்பது, அவரவர் உள்ளே போய் எடுப்பது, சமைத்தது பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்று சமைப்பது, வெளியே போய் சாப்பிடுவது என்பதெல்லாம் தெரியாது. 'சாப்பாட்டை வீணாக்கினால் அது சமுத்திரத்தில் போய் அழும்' என்பார்கள். இப்போது‌ புரிகிறது, வீணாக எறிந்த எத்தனை பொருட்கள் கடலிலே கலந்து கடலையே கலங்க வைக்கிறது என்று. மிகுதியாகும் சாப்பாடு மாட்டுக்கு, நாய்க்கு என்று கையோடு வைத்து விடுவார்கள். பிச்சைக்காரர்களுக்கு போடுவதும் உண்டு. குளிர்சாதனப்பெட்டி இல்லாத காலம்!! 'தண்ணீரை வீணாக்கினால் செல்வம் கரையும்'. 'தண்ணீரை பணத்தை செலவழிப்பது போல செலவழி' என்பர். கேட்டோமா!? அதற்கு மேல் பணத்தை தண்ணீர் போல செலவழிக்கக் கற்றுக் கொண்டோம். நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் பாவம் சேரும் என்ற நம்பிக்கை இருந்தது. பசுவுக்கு, பறவைகளுக்கு, மிருகங்களுக்கு என்று வாசலில் சிறிய தொட்டிகளில் தண்ணீர் வைப்பது வழக்கம். எல்லாம் போயிற்று. தேவையான நீரை குளம், ஊருணிகளில்‌ இருந்து எடுத்து வருவர். கிணற்றில் இறைத்து,பிடித்து‌ வைத்து, செலவழிக்க வேண்டும் என்பதால் அளவுக்கு அதிகமாக செலவழிக்க மாட்டார்கள். கையால் அடித்து நீர் வரும் குழாய்கள் வந்தன. அப்பொழுதும் கருத்தாக இருந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டதால் வீணாகும் தண்ணீரின் அளவும் மி...க அதிகம். துணிமணிகள் அளவாகத்தான் இருக்கும். பெரிய குழந்தைகளின் ஆடைகள் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு, அல்லது தேவைப்படும் மற்றவர்களுக்கும் போகும். பழம் புடவைகள், தூளிகளாக, பொருட்களை தூசு படியாமல் மூடி வைக்க உபயோகப்படும். வேட்டிகள், குழந்தைகளுக்கு கீழே விரித்து விட, அங்கங்கு துடைக்கும் துணிகளாக மாறும்! மணல், சிலேட்டு, பல்பம்/பலப்பம்/ சாக்பீஸ் உபயோகம் அதிகம். காகிதம் ஆரம்பக் கல்விக்கு‌ கிடையாது. இப்போது போல காகிதங்களை ஏகப்பட்டது தயாரிக்கவும் இல்லை. வீணடிக்கவும் இல்லை. காகிதத்தை வீணாக்குவதில்தான் மரங்களின் அழிவும் ஆரம்பம். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், வீண்/ வறட்டு கவுரவம் சம்பந்தப்பட்ட ஊதாரித்தனம் ஏரா....ளம். இன்னும் சொல்ல எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன. சிக்கனம் இங்கும் தான். சொன்னது போதும். சிந்திப்போம்.. "சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு" காலத்தில் இருந்து எவ்வளவு மாறி விட்டோம்!!" இப்போதைய காலகட்டத்தில் சிக்கனத்தை மீண்டும் மீட்டெடுப்போம். பிறருக்கும் உதவுவோம். வாழ்க பாரதம்! வாழ்க வையகம்! (பணிவன்புடன், ரங்கம் பாலாஜி)

Comments

Popular posts from this blog