அவையின் நான்கு கோடி பாடல்கள்

நான்கு கோடிப் பாடல்கள் இன்று மதியம் ஏதோ படித்துக்கொண்டிருந்த போது ஔவையின் நான்கு கோடி பாடல்கள் என்ற தலைப்பில் சில பாடல்கள் பார்த்தேன். வித்தியாசமாக இருக்கவும் ஆர்வம் மேலிட, அவற்றைப் பற்றித் தேடியதில் அறிந்து கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதை.. ஊரூராகச் சென்றுகொண்டிருந்த ஔவை வழியில் ஒரு கிராமத்தினுள் நுழைந்தார். அவ்வூர் நடுவில் அனைவரும் கூடும் இடத்தில் நான்கு பெரியவர்கள் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தனர். ஔவையைக் கண்டதும் எழுந்து வணங்கினர். அவருக்கு நடந்த களைப்பு தீர நீராகாரம் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். கணபதியின் அருள்பெற்ற தெய்வக்கவியான ஔவை அவர்கள் முகத்தைப் படித்து ஏதோ மனவருத்தத்திலிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிட்டார். பெரியோரே! என் களைப்பு நீங்க உதவிய உமக்கு கோடி நன்றி. தாங்கள் ஏதோ வருத்தமாக இருக்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். என்னவென்று என்னிடம் சொன்னால் மனபாரமாவது குறையும். என்றாள். அன்னையே! உம்மிடம் எப்படிச் சொல்வோம்? நாங்கள் நால்வரும் அரசவைக் கவிகள். அரசன் எங்களை நாளைக்காலைக்குள் ஆளுக்கொரு கோடி பாடல்கள் புனைந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். வாழ்நாள் முழுதும் எழுதினால்கூட ஒரு கோடி பாடல்கள் எழுதமுடியுமா என்பது ஐயமே. அப்படியிருக்க ஒரு நாளில் ஒரு கோடி பாடல்கள் எப்படி இயற்ற இயலும். பாடல்களுடன் போகவில்லையெனில் நாளைக் காலை எங்களுக்குச் சிரச்சேதம் நிச்சயம். மானியங்களை வாங்கிக்கொள்கிறீர்கள். பாடல் புனைய வராதோ என்று ஏசுகிறார் அரசர். மிகவும் அவமானமாக இருக்கிறது. என்றார்கள். அவ்வளவுதானே! நான்கு கோடி பாடல்கள்தானே. நான் இயற்றுகிறேன். இப்போதே கிளம்புங்கள். அரசவைக்குச் செல்வோம். பாடல்கள் எங்கே அன்னையே? எல்லாம் மனத்திலிருக்கிறது வாருங்கள், போகலாம். அனைவரும் அரசவைக்குச் சென்றனர். ஔவை என்பதால் அரசன் மிகுந்த மரியாதைகளுடன் வரவேற்றான். நான்கு கோடிப் பாடல்கள் கேட்டீராமே. வரிசையாகச் சொல்கிறேன். எழுதுவதற்கு ஆள்களைக் கூப்பிடுங்கள். நிஜமாகவா? இதோ.. என்று அரசன் ஆணையிட.. கடகடவென்று எழுத்தாணியும் கையுமாக ஆள்கள் வந்தார்கள். நான் பாடிவிட்டால் அந்தக் கவிஞர்களின் தண்டனையை ரத்து செய்யவேண்டும். நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் பாடுகிறேன் என்றாள் ஔவை. அப்படியே ஆகட்டும். தங்கள் திருவாயால் பாடல்கள் கிடைத்தால் போதும். ஔவை மடை திறந்ததுபோல் நான்கு பாடல்களைச் சொல்லி ஒவ்வொரு பாடலும் கோடி பெறும். என்று முடித்தார். அதைக் கேட்ட அரசன் ஔவையின் சாதுர்யத்தையும் பாடல்களின் உயர்ந்த கருத்துக்களையும் எண்ணி, மிகவும் வியந்து, மகிழ்ந்து, ஔவைக்கு நிறைய பரிசில்கள் கொடுத்தான். அனைத்தையும் அக்கவிஞர்க்கே வழங்குமாறு பணித்த ஔவை, அரசே! கவி என்பது தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வரும். இம்மாதிரி அறிஞர் பெருமக்களைப் படுத்தாதே என்று அறிவுறுத்திவிட்டுத் தடியை ஊன்றிக்கொண்டு கம்பீரமாகக் கிளம்பினார். அப்பாடல்கள் என்னவென்று கேட்கிறீர்களா? இதோ. 1. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி உறும். நம்மை மதிக்காதவர் வீட்டு வாசலை மிதிக்காத பண்பு ஒரு கோடிக்குச் சமம். 2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி உறும். வருந்தி வருந்தி உணவு உண்ண அழைக்கவேணும். விருந்தோம்பல் இல்லாத எவர் வீட்டிலும் உணவு ஏற்காமை ஒரு கோடிக்குச் சமம். 3. கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதல் கோடி உறும். தம் குலத்தில் பிறந்த சகோதரர்கள், உறவினர்களுக்குள் பிரிவினை வருமாகின் அதை ஒரு கோடி செலவு செய்தாவது சரி. செய்துகொள்ளவேண்டும். உறவுகளுக்குள் ஒற்றுமை பேணுவது ஒரு கோடிக்குச் சமம். 4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடை நாக்கோடாமை கோடி உறும். எவராயினும் கொடுத்த வாக்கைக் காப்பற்றவேண்டும். சத்யத்தைப் பேணும் தன்மை இறைவனைக் காட்டித்தரும். கோடி கொடுத்தாலும் இயலுமா இயலாதா என்பதைத் திட்டமிடாமல் வாக்கு கொடுத்து விடலாகாது. இத்தன்மை ஒரு கோடிக்குச் சமமாகும். Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog