திட்டமிடுங்கள்!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 *💗இன்றைய சிந்தனை...* *திட்டமிட்டு வாழுங்கள்..!!* ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்? ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் வசதி இல்லை. இங்கு ஆரம்பித்த பின் தான் அவ்வப்போது திட்டமிட்டு பயணிக்க வேண்டி இருக்கிறது. சுற்றுலாப் பயணத்தில் பயணம் எப்போது முடிவடையும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் ஆரம்பத்தைப் போல முடிவு தேதியும் நாம் அறியாதது. மற்றபடி இரண்டு பயணங்களிலும் திட்டம் முக்கியமே. புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவன் அதை அப்படியே பின்பற்றுவானானால் நிறைய இடங்களுக்கு சௌகரியமாகச் சென்று திருப்தியாகத் திரும்ப முடியும். வாழ்க்கைப் பயணத்திலும் திட்டமிட்டு வாழ்ந்தால் நிறைய சாதித்து திருப்தி பெற முடியும். இரண்டு பயணங்களிலும் திட்டமிடாத போது அர்த்தமில்லாமல் அலைகிறோம். அலைபாய்கிறோம். அடுத்தது என்ன என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பத்திலேயே நிறைய காலம் வீணாக்குகிறோம். தேவையில்லாமல் சுற்றுகிறோம். அடுத்தவர்கள் எங்கு போகிறார்களோ நாமும் அங்கு போகிறோம். பயணம் முடியும் போது தான் சாதித்ததை விட அர்த்தமில்லாமல் அலைந்தது அதிகம் என்ற உண்மை சம்மட்டி அடியாக நமக்கு உறைக்கிறது. எனவே நிறைவாக வாழ விரும்பினால், நிறைய சாதிக்க விரும்பினால் திட்டமிட்டு வாழுங்கள். என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னவாக விரும்புகிறீர்கள் என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கான விடையை ஒட்டி உங்கள் திட்டங்கள் இருக்கட்டும். குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என இரண்டு வகைத் திட்டங்கள் தீட்டுங்கள். இப்போதைய தேவைகளை ஒட்டி உங்கள் குறுகிய காலத் திட்டங்கள் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை ஒட்டி உங்கள் நீண்ட காலத் திட்டம் இருக்கட்டும். உங்கள் வாழ்வில் இந்த இரண்டையும் செயல்படுத்தும் விதமாய் உங்கள் நிகழ்கால வார அல்லது மாதத் திட்டங்கள் இருக்கட்டும். இப்போதைய தேவைகளுக்கு 60-75% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குவீர்களானால் நீண்ட காலத் திட்டங்களுக்கு 40-25% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குங்கள். பலரும் இப்போதைய தேவைகளுக்கான அவசரமான வேலைகள் செய்வதிலேயே இருப்பதில் முக்கியமான தங்கள் நீண்ட காலக் கனவுகளுக்கான செயல்களைச் செய்யாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள். 'அலை ஓய்வதெப்போது, தலை முழுகுவதெப்போது' என்பது போல இப்போதைக்கு செய்ய வேண்டிய அவசர வேலைகள் என்றும் ஓய்வதில்லை. அதன் நடுவில் உங்கள் நீண்டகால வாழ்க்கை லட்சியத்திற்கான செயல்களையும் புகுத்தி செய்து கொண்டிருங்கள். குறுகிய காலத் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிக்கையில் நீண்ட கால லட்சியத்திற்கான செயல்களையும் செய்து கொண்டே இருப்போமானால் வாழ்க்கையின் முடிவில் இந்த இரண்டிலுமே நிறைய சாதித்திருப்போம். 'பல தடவை திட்டம் போட்டு பார்த்து விட்டேன். நினைத்தபடி எதுவுமே நடப்பதில்லை. அதனால் இப்போது திட்டமிடுவதையே விட்டு விட்டேன்' என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நினைக்கிற படி ஒவ்வொன்றும் நடந்து விடுவதில்லை என்பது உண்மையே. எத்தனையோ எதிர்பாராத சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் குறுக்கிடும் போது பல சமயங்களில் திட்டப்படி நடக்க முடியாமல் போவது இயற்கையே. நமது கவனம் இலக்குகளில் இருக்குமானால் அந்த எதிர்பாராத சூழ்நிலைகளிலும் முடிந்த வரை ஏதாவது செய்வதும், அந்த சூழ்நிலைகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே. அதையும் மீறி திட்டமிட்டு செயல்பட்டாலும் பல விஷயங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த படி ஆவதில்லை என்றால் கூட அதில் பலவற்றை சாதிக்க முடிகிறது, திட்டமே இல்லாமல் போனால் எதையுமே சாதிக்க முடியாமல் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஓடும் வெள்ளத்தில் போடப்பட்ட துரும்பாய் இலக்கில்லாமல் அடித்து செல்லப்படும் நிலை தான் திட்டமிடாத வாழ்க்கையின் முடிவு. கடைசியில் எங்கே போய் சேர்வோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். நாம் நினைத்தபடி வாழ வேண்டுமா, இல்லை ஓடும் வெள்ளத்தில் விழுந்த துரும்பாய் எப்படி, எங்கு போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லையா? திட்டமிட்டு வாழ வேண்டுமா, இல்லை திட்டமே தேவை இல்லையா? முடிவு நம் கையில் இருக்கிறது. *💗வாழ்க வளமுடன்💗* *பகிர்வு* 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Comments

Popular posts from this blog