"நானும் நீயும் ஒண்ணுதான்"


("மூன்று மணி நேரம் பேசியும் 'தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைக்கு''சரியான விளக்கம் சொல்லாத பண்டிதருக்கு பெரியவாளின் எளிமையான விளக்கம்)


கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.


ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.


அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?" என்று கேட்டார்.


"சின்முத்திரையின் தாத்பர்யம்!" என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே .....எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" என்றார்.


"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?" என்றார் அவர்.


அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக் கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை. கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற் போல் பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.


அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.


"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும், நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத் தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-"நானும் நீயும் ஒண்ணுதான்!" என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக் கொள்ளலாமா?" என்றார்.


கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து,

."இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி உருகினார் "இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்... எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை, அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips