"என்ன காமாட்சி ரத்தை.. ரத்து பண்ணிட்டாளா?"--பெரியவா
(ஒரு அர்ச்சகர் மூலமாக, விவாகரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பெரியவாளின் அற்புத நிகழ்வு)
இரண்டே நிமிடத்தில் இணைத்து வைத்த மகிமை
குமுதம் லைஃப் 27-02-2019
தொகுப்பு-ஆர்.என்.ஆர்.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா திருத்தல யாத்திரைகள் முடித்துவிட்டு, காஞ்சிபுரம் மடத்துக்குத் திரும்பியிருந்த காலகட்டம் அது.
பரமாசார்யார் மேல் தூய்மையான பக்தி உடைய பக்தர்கள் பலமாத இடைவெளிக்குப் பிறகு அவரை தரிசிக்க வந்திருந்ததால், பெரும் கூட்டம் கூடியிருந்தது.
இடைப்பட்ட காலத்தில் அவரவர் இல்லத்தில் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் சிலர். இதுவரை கஷ்டம் துரத்தியதாகக் கூறி ஆறுதல் தேடினார்கள் கொஞ்சம் பேர். இன்னும் சிலர் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி, அது நீங்க ஆசார்யாளின் ஆலோசனை ஆசி வேண்டினார்கள்.
அந்த சமயத்தில் இளம் வயதுப் பெண் ஒருத்தி, தன் பெற்றோரோடு வரிசையில் வந்து கொண்டிருந்தாள். அந்தக் குடும்பத்தினர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது. மகாபெரியவாளின் பார்வை படும் இடத்துக்கு அவர்கள் வந்து கொண்டிருந்த சமயம், திடீரென்று தன் அருகே இருந்த அணுக்கத் தொண்டரை அழைத்தார் மகாபெரியவா.
அந்தப் பெண்ணைக்காட்டி ஏதோ சொன்னார்.உடனே வேகமாக வந்து, அந்தப் பெண்ணையும், அவளது பெற்றோரையும் மகாபெரியவர் முன் அழைத்துப் போனார் அந்தத் தொண்டர்.
என்ன காரணமாக இருக்கும்? எதற்காக அழைக்கிறார்? என்று புரியாமல் பரபரப்பாக வந்து நின்றார்கள் அவர்கள்.
" நீ இங்கே நிற்க வேண்டாம் .காமாட்சி கோயிலுக்குப்போ. முதல்ல அவளுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு,அப்புறம் இங்கே வா.!" அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார் மகாபெரியவா.
ஏன்? எதற்கு? என்று புரியாவிட்டாலும், பெரியவா வார்த்தைக்கு மறுப்பு ஏது? உடனே அவர்கள் அங்கே இருந்து புறப்பட.."நீங்க எங்கே போகீறீர்கள்? அவள் மட்டும் போய்விட்டு வரட்டும்.நீங்கள் இங்கேயே இருங்கள்!" அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொன்னார் மகாபெரியவா
.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் புறப்பட்டாள்.இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். ரொம்பவே சந்தோஷமாக, கூடவே, ஓர் இளைஞனுடன் திரும்பி வந்தாள் அந்தப் பெண்
.
பார்த்துக் கொண்டிருந்த அவளது பெற்றோர் முகத்திலும் திடீரென்று ஒரு சந்தோஷம் மலர்ந்தது.
"என்ன காமாட்சி ரத்தை ரத்து பண்ணிட்டாளா? போங்கோ போய் சந்தோஷமா இருங்கோ,இனிமே இது அந்த மாதிரி எல்லாம் எண்ணம் வரக்க்கூடாது புரிஞ்சுதா?" சொன்ன மகாபெரியவா,குங்குமம் தந்து ஆசிர்வதித்தார்.
நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,என்ன நடந்தது என்று புரியாமல் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த இளம்பெண்ணே பேசத் தொடங்கினாள்.
"ஏனக்கும் இவருக்கும் கல்யாணமாகி ஒன்றரை வருஷம்தான் ஆகிறது அதற்குள் ஏகப்பட்ட ஈகோ பிரச்னைகள்.இனிமேல் சரிப்பட்டு வராது என்று ஆறுமாதம் முன்பு விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தோம். நாளைக்குத்தான் தீர்ப்பு.அநேகமாக விவாகரத்து கிடைத்துவிடும் என்று வக்கீல் சொல்லிவிட்டார்.
மனதுக்குள் ஒரே அழுத்தம். அதுதான் மகாபெரியவாளை தரிசனம் செய்ய வந்தோம். இங்கே வந்ததுமே அவர் காமாட்சி கோயிலுக்குப் போகச் சொன்னது ஏன் என்றெல்லாம் தெரியாது. நானும் அங்கே போய் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு சன்னதியில் கொடுத்து விட்டு நின்றேன்
அம்பாளுக்கு அர்ச்சனை செய்து விட்டு,அந்த பிரசாதத்தை கொடுத்த அர்ச்சகர், "அர்ச்சனை.. செய்த பிரசாதத்தை ரெண்டுபேரும் சேர்ந்து வாங்கிக் கொள்ளுங்கள்.!" என்று சொன்னபோதுதான் பார்த்தேன். என் பக்கத்தில் என் கணவர் வந்து நிற்கிறார்.மனசு சரியில்லை என்று கோயிலுக்கு வந்தாராம். வந்த இடத்தில்தான் தற்செயலாக இது நடந்திருக்கிறது.
அம்பாள் சன்னதியில் சேர்த்து பிரசாதம் வாங்கிக் கொள்ளச் சொன்னதும், நாங்கள் பிரிவதில் அம்மனுக்கே விருப்பம் இல்லை என்று தோன்றியது.
கோவில் வளாகத்திலேயே உட்கார்ந்து இருவரும் மனம்விட்டுப் பேசியதில், விவாகரத்தே தேவையில்லை. சேர்ந்து வாழ்வதுதான் சந்தோஷம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டோம். இதோ நாங்கள் சேர்ந்து வந்து ஆசார்யாளிடம் ஆசி வாங்கிக் கொண்டு விட்டோம்." சொன்னவள் சந்தோஷமாக சந்தோஷமாக கணவருடனும்,பெற்றோருடணும் புறப்பட்டாள்.
இரண்டு மணி நேரம் முன்னால் வரை,இரண்டாகப் பிரிய இருந்த அவர்களது வாழ்க்கையை தன் பார்வை பட்ட இரண்டே நிமிடத்தில் இணைத்து வைத்துட்ட மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அந்தப் பரமேஸ்வரனின் அம்சமாகவே அவரைப் பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தார்கள்.
Comments
Post a Comment