#ஜாம்பவதிகள்
ஐந்து மணிக்கெல்லாம் கொதிப்பு தாங்காமல் கத்தும் குக்கர் , அண்டை வீட்டார் தூக்கம் கலைத்து தேங்காயுடன் மல்லுக்கட்டும் மிக்ஸி, சூரியனை எதிர்ப்பார்த்து கொடியில் ஆடும் துணிகள், அவசரமாய் எழுப்பப்படும் பிள்ளைகள், அடுக்களையில் உதவியாய் கணவன் , மள மள வேலைகளுக்கு நடுவே கேசுவல் லீவ்,லாஸ் ஆஃப் பே, ஹவுஸிங் லோன் ,வார இறுதி ப்ளான்கள் பற்றிய அலசல்கள் - இவையனைத்தும் தான் அந்த வீட்டில் குடும்பத்தலைவியும் வேலைக்கு போகிறாள் என்பதை ஆருடம் போலத் துல்லியமாய் பறைசாற்றும் கூறுகள்.
என் வாட்ச்சை பாத்தியா?
ஐ.டி கார்ட் எங்க வெச்சே?
லன்ச்சுக்கு என்னம்மா?
சாயந்திரம் எப்போ வருவே?
ஐ.டி ரெய்டில் கேட்பது போல அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலும், பதில் சொல்ல முடியாதவைகளுக்கு
"தி கோர்ட் இஸ் அட்ஜர்ண்ட் " என்கிற பாணியில்
சாயந்திரம் வந்து பாத்துக்கலாம்" எனும் அறிவிப்பும் தான் அவசரமான காலை வேளைகளில் அதிகம் கேட்கும் வார்த்தைகள் .
எவ்வளவு தான் வார்ட்ரோபினை அடுக்கி வைத்தாலும் மேட்சிங் ப்ளவுசும், கை குட்டையும் நாம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாமூச்சி விளையாடும் .
மளிகை சாமான்களைத் தவிர்த்து மற்ற அத்துணைக்கும் ஒரே புகலிடம் நம் ஹேண்ட் பேக்.
முக்கால் வாசி நாட்கள் புஃபே பாணியில் நின்றபடியே அவசரமாய் அள்ளி விழுங்கி, சொச்சத்தை டப்பாவில் அடைத்துக்கொண்டு, அரசு பேருந்தோ, ஆபீஸ் கேப்போ,
ஷேர் ஆட்டோவோ, அல்லது நம்ம வண்டியோ,அரக்கபரக்க மூச்சிறைக்க முண்டி அடித்துக்கொண்டு உட்காரும்போது தான் அடுக்களையில் ஆழமாய் உள்ளித்த மூச்சினை தவணையில் வெளியேற்றுவோம்..
அலுவலகத்தின் வாசலை நெருங்கும் போதே டொமஸ்டிக்மோடிலிருந்து ப்ரொஃபஷெனல் மோடிற்கு மாறிக்கொள்ளும் வேகம் மேஜிக்க்ஷோ நடத்துபவர்கள் கண்களுக்கே மண்ணைத்தூவும்..
கல்லுடைக்கும் வேலையோ ,கார்ப்பரேட் வேலையோ,எல்லா இடங்களிலும் நம் மனது ,வீட்டிற்கும் அலுவலகத்திற்குமாய் ஷிப்ட் போட்டுக்கொண்டு அல்லாடும்.
பரபரப்பு சூழலும்,
எதிர்ப்பார்ப்புகளும், குத்தல்பேச்சுக்களும்,
பொறாமைப்பார்வைகளும்,
காலக்கெடுக்களும்,வீடுதிரும்பும் நேரம் பார்த்து முளைக்கும் புது வேலையும்/அவசர மீட்டிங்கும், இடையறாது அரங்கேறும் வேளையில்,
எதேச்சையாய் ஜன்னல் வழியே கண்ணில் படும் மாலை நேரத்து மங்கிய வெளிச்சம்
தீடீரென வீட்டைக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்..
போனதும் கிரைண்டர் போடணும்,நைட்டுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல, பசங்க வீட்டுக்கு வந்திருக்குமா? அம்மாவை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறேன்னு சொல்லிருந்தேனே? ..அந்நியனாய் இரு அவதாரங்களுக்கிடையே மனம் அங்கலாய்க்கும்.
இதென்ன இருதலைக்கொள்ளி எறும்பாய் ஆனோமே என நம்மீதே கொஞ்சம் கோபம் வரும்.
மொத்தமாய் சத்து உறிஞ்சப்பட்டு,நமக்கு நாமே பாவமன்னிப்பு வழங்கியபடி சக்கையாய் வீடு திரும்பும் போது, சூரியனை எதிர்ப்பார்த்து கொடியில் ஆடிய துணிகள் நிலாவின் வருகைக்காய் தன் பணி தொடரும்
சாயந்திரம் வந்து பார்த்துக்கொள்வதாய் சொல்லி விட்டுச்சென்ற விஷயங்கள் அங்கேயே அப்படியே...நமை பார்த்து சிரிக்கும்..
காபி போடுவது யார் என்பதற்காய் ஒரு நீயா நானா நடக்கும்..
மிச்சமீதிகளை சூடு செய்து சொச்சத்திற்கு கொஞ்சம் வெளியே வாங்கி எப்படியோ ஒரு வழியாய் ஒரு பொழுதை கழித்தவுடன் வரும் நிம்மதி பெருமூச்சிற்கு பாரத ரத்னா விருது கூட இணையாகாது .
யார் சொன்னது நாம் வீக்கர் செக்ஸ் என்று?
ஏதோ ஒரு துறையில் மட்டும் இணையற்ற சாதனை புரிவோரை அத்துறையில் ஜாம்பவன்கள் என வாரிக்கட்டிக்கொண்டு புகழும் போது,
அம்பறாத்தூணியாய் ஆயிரமாயிரம் பொறுப்புகளையும் சவால்களையும் சமாளித்து , வாரநாட்களில் விடுபட்டு போன அத்துணை வேலைகளையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இறுக்கி பிடித்து ஈடு செய்து,உறவுகள் உத்யோகம் என்ற இரட்டை குதிரையில் ஜான்ஸிராணிகளாய் ஒரு சேர பயணிக்கும் நாம் "ஜாம்பவதிகள்" அல்லவா?
வேலைக்குப்போவதால் நாம் இழப்பவைகளும்,(முக்கியமாய் நம் ஆரோக்கியம்), அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைப்பவைகளும், தவற விட்டவைகளும் ,நாம் தியாகம் செய்தவைகளும் , பலரின் பேச்சுக்களுக்கு ஆளான சூழல்களும் நிறைய இருக்கலாம் ..
நான் வீழ்வேன் என நினைத்தாயோ என நாம் நமக்குள் சொல்லிக்கொண்டுதானே மீண்டும் மீண்டும் எழுகிறோம்
மறந்துவிடாதீர்கள்..நாமெல்லாம் ஜாம்பவதிகள் என்று.........
சியாமளா ரமேஷ்பாபு
நாம் ஜாம்பவதிகள் தான் 👍😍
ReplyDelete