நடராஜர் ஆலயம், 

கோனேரிராஜபுரம்


கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருள்பாலிக்கிறார். 


சிற்பி ஒருவர், உலைக் களத்தில் நடராஜரை வார்க்கும் போது, சிவபெருமானே நேரில் வந்து நடராஜராய் சமைந்த அதி அற்புத சுயம்பு நடராஜர் விக்கிரகம் இங்கு உள்ளது. 


இவரது திருவுருவத்தில், மனித உடலில் இருப்பது போன்று மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும் , நகங்கள், முடியும் காணப்படுகின்றன.


இந்த உயிரோட்டமான விக்கிரகம் இத்தலத்திற்கு எப்படி வந்தது?. 


அப்பர், சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம் இது. 


கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். 


குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.


சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. 


மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். 


அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.


அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.


சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். 


மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். 


அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.


‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். 


சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. 


தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.


‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். 


இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். 


இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். 


மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.


மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் அபிஷேகம் இத்தல சுயம்பு நடராஜருக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. 


ஈசனே மனித வடிவில் வந்து, இத்தலத்தில் இருக்கும் நடராஜராய் உருவானதால், ஆனி திருமஞ்சன நாளில் இவரை வணங்கி வழிபட்டால் வேண்டியன யாவும் நமக்கு கிடைக்கும்.


திருவிடைமருதூரில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாவடுதுறையில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், எஸ்.புதூரில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருநல்லம்.

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips