திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கு வந்து, மாசி மக நன்னாளில், தெப்பக்குளத்தில் இருந்து விளக்கெடுத்துச் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி என்பது ஐதீகம். 27ம் தேதி சனிக்கிழமை மாசி மகத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது..


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர் எனும் அற்புதமான திருத்தலம். திவ்விய க்ஷேத்திரங்களில் திருக்கோஷ்டியூர் திருத்தலமும் ஒன்று. இங்கே சேவை சாதிக்கும் பெருமாளின் திருநாமம் செளம்ய நாராயணப் பெருமாள்.


திருக்கோஷ்டியூர் திருத்தல மகிமை அற்புதமானது.


நவகிரகங்களில் ஒருவர் புதன் பகவான். நமக்கு புத்தியில் தெளிவையும் திடத்தையும் வீரியத்தையும் கொடுப்பவர் இவர். இவரின் மைந்தன் புரூரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஒருமுறை புரூரவச் சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் புண்ணிய பூமிக்கு வந்தார். அப்போது, அவர் வந்த நாள்... மாசி மகாமகம்.


மகா மகம் எனும் நன்னாளில், மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரவச் சக்கரவர்த்தி. ஆனால் காசியம்பதி அருகில் இல்லையே என்று கலங்கினார். மனமுருகி பெருமாளைப் பிரார்த்தித்தார்.


அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பிரவகித்து வந்தது என சிலிர்ப்புடன் விவரிக்கிறது திருக்கோஷ்டியூர் ஸ்தல புராணம்.


கிணற்றில் இருந்து வந்த கங்கை நீரில், நடுவே ஸ்ரீமகாவிஷ்ணு திருக்காட்சி தந்தார். தற்போது ஆலய பிராகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, ‘மகாமக கிணறு’ என்றும் மாசி மகக் கிணறு என்றும் போற்றி அழைக்கப்படுகிறது.


அதேபோல், இன்னொரு புராணச் சிறப்பும் திருக்கோஷ்டியூருக்கு உண்டு.


இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து கூடிப் பேசினார்கள். புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த அவதாரமே நரசிம்ம அவதாரம் என்கிறது புராணம். அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து, கூடிப் பேசிய திருவிடம்... திருக்கோஷ்டியூர். கோஷ்டியாக எல்லோரும் கூடிப் பேசிய ஊர் என்பதால், திருக்கோஷ்டியூர் என்றானது. .


பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்பெருமக்கள் இந்தத் தலத்துப் பெருமாளை கண் குளிரத் தரிசித்துள்ளனர். மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்தத் தலம் திவ்விய க்ஷேத்திரங்களில் மிக முக்கியமான தலம் என்று திருமால் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.


இத்தனை பெருமைகள் கொண்ட திருக்கோஷ்டியூர் திருத்தலத்தின் இன்னொரு அற்புதம்... கோயிலின் திருக்குளம்.


மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். பத்துநாள் விழாவாக களைகட்டுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் இந்த விழாவின் முக்கிய அம்சம்... திருத்தேரோட்டம். அதேபோல் மற்றுமொரு சிறப்பு... திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு.


திருக்குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும் என்கிறார்கள். சிறக்கும் என்கிறார்கள். செழிக்கும் என்பது ஐதீகம்.


பக்தர்கள் தங்களின் குறைகள் நிறைவேறுவதற்காக, குளக்கரையில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த விளக்குகளை எடுத்து வந்து, வீட்டில் தினமும் தீபாராதனை காட்டி, நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி என்கிறார் கோயிலின் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்!


வருகிற 27ம் தேதி மாசி மகம் திருவிழா. எனவே 26ம் தேதி, 27ம் தேதி, 28ம் தேதி ஆகிய மூன்று நாட்களில், பெருமாளை ஸேவித்து தெப்பக்குளத்தில் விளக்கேற்றி வழிபடுவோம். விளக்கெடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜிப்போம்!

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips