*கண்ணப்ப சுவாமிகள்- சொரூப சித்து காட்டியவர்*

சித்தர்கள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; வருவதுமில்லை; போவதுமில்லை என்று திருமூலர் கூறியதுபோல் கண்ணப்பசாவாமிகள் எங்கே பிறந்தார்? அவர் யார்? எப்படிச் சென்னைக்கு வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. பல அவதார புருஷர்கள் ஜீவ சமாதி கொண்ட புண்ணிய பூமியான திருவொற்றியூர்க் கடற்கரையில் உடலில் எந்தவித ஆடையுமின்றிச் சடை முடியும், நீண்ட தாடியுமாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர். 


அவர் ஒரு சித்தர் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.


அவரைச் சித்தம் கலங்கியவர் என மக்கள் துரத்தியதால் அலைந்து திரிந்து இறுதியில் புழலில் உள்ள காவங்கரைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார்.  சாமிகளின் தலையில் இருந்து நறுமணம் வீசியது. அதைக் கண்டு வியப்படைந்த மக்கள் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொண்டனர்.


அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரைச் சட்டிச் சாமி என்று மக்கள் அழைத்தனர். அவருக்கு உடை வழங்கிய சித்ராம்பாளும் அவருடைய கணவரும் ‘கண்ணா’ என்று அன்புடன் அழைத்ததால் கண்ணப்பசாமி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.


நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்

படமாடக் கோயில் பகவற்க தாமே


என்ற திருமூலரின் கூற்றுப்படி பக்தர்களுக்குச் செய்யும் உதவி இறைவனைச் சென்றடைய உதவும் என்று கண்ணப்பசாமி நம்பினார். தன் கையிலிருக்கும் சட்டியை அட்சய பாத்திரமாக மாற்றினார். உணவை எடுக்க எடுக்க அது பெருகிய அதிசயத்தை, இன்றும் பலர் வழி வழியாகப் பேசி வருகின்றனர்.


கண்ணப்பசாமிகள் தமது பக்தர்களின் குறைகளை, அவர் சொல்லாமலேயே தீர்த்து வைத்துள்ளார். அவரது தீவிர பக்தரான பொற்கொல்லர் ஒருவர் தமது வாடிக்கையாளர் நகை செய்வதற்குக் கொடுத்த பணத்தைக் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்திவிட்டதாகக் குற்ற உணர்வுடன் வந்து அவரிடம் முறையிட்டார். சாமிகள் தனது பக்தனின் கையில் மூன்று கூழாங்கற்களைக் கொடுத்தார். அவை தங்கக் கட்டிகளாக மாறி ஜொலித்தன.


*நவகண்ட சித்தர்:*


வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணையா பாகவதர் என்பவர் நள்ளிரவு 12 மணிக்குச் சாமிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சாமிகளின் அவயங்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடந்ததைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டார். இப்படி அவயங்களைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டு யோகம் செய்வதை ‘சொரூப சித்து’ என்றும் ‘நவ கண்ட சித்து’ என்றும் போகர் குறிப்பிடுகிறார்.


இப்படிப் பல அற்புதங்களைப் புரிந்த கண்ணப்பசாமிகள் தாம் சமாதி அடையப்போகும் தருணத்தை முன்பே அறிந்தார். தமக்கான சமாதிக் குழியைத் தோண்டப் பணித்தார். தாம் *சமாதி அடைந்து 41 நாள்களுக்குப் பிறகுதான் தன்னைப் புதைக்க வேண்டும்* என அவரது பக்தர்களிடம் கூறினார். 1961-ம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் சமாதிக் *குழிக்குள் இறங்கிச் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார்.*


சமாதிக் குழியைப் பலகையால் மூடி 41 நாளும் விளக்கேற்றி வழிபட்டனர் பக்தர்கள். பின்னர் பலகையை அகற்றிவிட்டுச் சமாதியை மூடினர். சாமிகள் சொன்னதுபோல சமாதியின் மீது விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். பின்னால் காஞ்சிப் பெரியவரின் ஆலோசனையின் பேரில் கண்ணப்பசாமிகளின் கற்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது சிலை சமாதியின் முன்புறம் வைக்கப்பட்டு சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


*புழல் செல்லும் சாலையிலிருந்து காவாங்கரையினுள் நுழைந்து சிறிது தூரம் சென்று வலது புறம் சென்றால் கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதியை அடையலாம்.* அங்கே சிவமாக வீற்றிருக்கும் சித்தரை உணர்ந்து கொண்டால் அவர் நம்முடன் பேசுவார்; துன்பங்களுக்குத் தீர்வு கூறுவார்.

*நாயடியேன்*

*குமரேசன் இராஜசிம்மன்*

Comments

Popular posts from this blog