Shared Post:
மராட்டிய தேசத்து அவந்திபூர் நகரில் அன்று காலை, நாவிதர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
பேச்சு முழுவதும் சேனாயி பற்றித்தான்.
""இப்படியும் ஒருவன் இருப்பானோ? சேனாயிக்கு அரசவை நாவிதன் என்ற அந்தஸ்து கிடைத்தது கொஞ்ச காலம் முன்பு. அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிய வேண்டாமோ?'' எத்தனையோ நாவிதர்கள்
அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். மன்னனோ முகமதிய மதத்தைச் சேர்ந்தவன். என்ன காரணத்தாலோ சேனாயியைப் பார்த்தவுடனேயே மன்னனுக்குப் பிடித்துவிட்டது. உடனடியாக சேனாயிக்கே ஆஸ்தான நாவித அந்தஸ்தைக் கொடுத்து விட்டான்.
பதவி சார்ந்து சேனாயிக்கு ஒரு பெரிய வீடு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கணிசமான ஊதியம் தரப்பட்டது. அவனது குடும்பப் பராமரிப்பை அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. இதைவிட வேறென்ன வேண்டும்? தினமும் காலைவேளையில் அரண்மனைக்குச் சென்று மன்னருக்கு முடிதிருத்தவேண்டும். அதுமட்டுமே பணி. ஆஸ்தான நாவிதன் என்பதால் வேறு யாருக்கும் அவன் முடி மழிக்கவும் கூடாது.
பிறகென்ன! அதிக வேலையே இல்லாமல் நிறைந்த ஊதியம்! ஒவ்வொரு நாளும் தவறாமல் அரண்மனைக்கு சேனாயி போய்க்கொண்டுதான் இருந்தான்.
ஆனால், அவன் ஒரு பாண்டுரங்கப் பித்தன். பண்டரிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணன் மேல் அவனுக்கு அபார பக்தி. செங்கல் மேல் நின்றுகொண்டு வரமருளும் கிருஷ்ணனைப் பற்றிய சிந்தனைதான் எப்போதும். சதா தியானத்தில் ஆழ்ந்து பரவச நிலைக்கும் போய்விடுவான். காலை வேளையில் மட்டும் அவன் மனைவி அவனை உலுக்கி அரண்மனைக்கு ஊழியம் செய்ய அனுப்பிவிடுவாள்.
இன்று வெளியூரிலிருந்து வந்த ஒரு பஜனை கோஷ்டி அதிகாலையில் கிருஷ்ண கானங்களை இசைத்தவாறு, அவந்திபூர் வழியாக பண்டரிபுரம் போயிற்று. பாடல்களைக் கேட்ட சேனாயி மெய்மறந்தான். தானும் அவர்களோடு பாடிக்கொண்டே பண்டரிபுரம் புறப்பட்டு விட்டான். மனைவியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவள் சொன்னதே அவன் காதுகளில் விழவில்லை. கிருஷ்ண நாமம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு மற்ற எந்த ஓசையும் அவன் செவிகளில் விழாதவாறு செய்திருந்தது.
அவந்திபூரில் வாழும் பிற நாவிதர்களாலும் சேனாயியை நிறுத்த முடியவில்லை. அவர்கள்தான் கூடிக்கூடி தெருக்களில் நின்று பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஒழுங்கு தவறி யாரேனும் பணிக்கு வராதிருந்தால், அவர்களைச் சிரச்சேதம் செய்யவும் தயங்கியதில்லை அந்த மன்னன். இனி சேனாயியின் நிலை என்னவாகும்!.
நாவிதர்களில் ஒருவனுக்கு சேனாயி மேல் கடும் பொறாமை. இது சேனாயியைப்பற்றி அரசரிடம் கோள்சொல்ல அரிய சந்தர்ப்பமல்லவா! அவன் பதுங்கிப்பதுங்கி அரண்மனை நோக்கி நடந்தான். அரசனை சந்தித்தான். தணிந்த குரலில் பேசலானான்:
""மகாராஜா! இன்று சேனாயி முடிமழிக்க வரமாட்டான்!''
""ஏன்! நல்ல ஊழியனாயிற்றே அவன்!''
""அவன் அடுத்தவர்களை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன். கிருஷ்ண பக்தன் என்று சொல்லிக்கொள்வான். இன்று தன் பணி பற்றிய பொறுப்பே இல்லாமல் பண்டரிபுரம் சென்றுவிட்டான். வெளியூர் போவதானால் உங்களிடம் சொல்ல வேண்டாமா? அரசவை வேலை என்ன கிள்ளுக்கீரையா? ராஜாவின் ஊழியர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடக்க முடியுமா? திடீரென்று பணிக்கு வராமல் இருந்ததற்காக நீங்கள் அவனுக்கு மரண தண்டனை கூட அளிக்க முடியும். சாமான்ய குற்றமா இது? போகட்டும். தாங்கள் அனுமதி அளித்தால் இன்றிலிருந்து நான் உங்களுக்கு முடிமழித்து விடுகிறேன்!''
இந்தப் பேச்சைக் கேட்டதும், மன்னன் அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.
""அடேய்! உனக்கு அரசவை வேலை கிடைக்காத பொறாமையால் இப்படிச் சொல்கிறாயா! சேனாயி உண்மையாகவே பண்டரிபுரம் சென்றுவிட்டானா என்று தெரியவில்லை. அவன் வருகிறானா என்று பார்க்கிறேன். அவன் பணிக்கு வராதிருந்தால் சட்டப்படி அவன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும். வேறு யார் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதைப் பின்னர் முடிவுசெய்வேன். நீ போகலாம்''.
கோள்சொன்னவன் தளர்ந்த நடையோடு வெளியேறினான்.
பண்டரிபுரத்தில் செங்கல் மேல் இடுப்பில் கைவைத்து நின்று கொண்டிருந்த ருக்மிணி, தன்னருகில் அவ்விதமே நின்றுகொண்டிருந்த கண்ணனிடம், ""நீங்கள் சேனாயியைக் கைவிடலாமா?'' என்று கேட்டாள்.
""இதோ புறப்பட்டுவிட்டேன்,'' என்றார் கிருஷ்ணர். அடுத்த கணம் சேனாயியாக உருமாறினார். புல்லாங்குழல், சிறிய மரப்பெட்டியாக மாறியது. சங்கு சக்கரம் இரண்டும் கத்தி, கத்திரிக்கோல் என நாவிதத் தொழிலுக்கான உபகரணங்களாக மாறி பெட்டிக்குள் புகுந்து கொண்டன. அவந்திபுரம் செல்வதற்காக கிருஷ்ணர் செங்கல்லை விட்டு இறங்கியபோது ருக்மிணி நகைத்தாள்.
""நாதா! இந்த வேடம் அழகாகப் பொருந்துகிறது உங்களுக்கு. வாமனாவதாரத்தில் வருணாசிரமத்தின் முதல் வருணத்தைச் சேர்ந்த அந்தணராக உருமாறினீர்கள். ராமாவதாரத்தில் க்ஷத்திரியரானீர்கள். கிருஷ்ணாவதாரத்திலோ வைசியராக, இடையராக மாறினீர்கள். இப்போது நான்காம் வருணம் சார்ந்து நாவிதராக உருக்கொண்டிருக்கிறீர்கள். வர்ணாசிரமம் என்பது தொழில் சார்ந்த வேறுபாடே தவிர மற்றபடி எல்லோரும் சமமானவர்கள் தானே? ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு பாராட்டுவது கொடுமையான பாவம் அல்லவா? உங்களின் அழகியநாவிதத் தோற்றத்தைப் பார்த்தால் உங்கள் கழுத்தில் இப்போதே ஒரு மாலையிட வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு!''
""இந்தக் காலையில் மாலை வேண்டாம் ருக்மிணி. ஆண்டாள் மூலம் நிறைய மாலைகளைப் பற்பல காலை வேளைகளில் பெற்றுவிட்டேன். என் தொழில் முடிந்து நான் வந்த பிறகு, மாலையில் என் தொழில் நேர்த்தியைப் பார்த்து எனக்கு மாலை சூட்டு! சிரித்தவாறே சொன்ன கிருஷ்ணர் உபகரணப் பெட்டியைக் கையில் இடுக்கிக் கொண்டு ஒரே கணத்தில் அவந்திபுரம் சென்று அரசன் முன் நின்றார்.
""மன்னா! தாங்கள் இன்னும் தயாராகவில்லையா?..
மன்னர் வியப்போடு பார்த்தார்.
""அட... சேனாயியே தான். அப்படியானால் இவன் வரமாட்டான் என்று அந்த நாவிதன் பொய் சொல்லியிருக்கிறான்! வழக்கமாகவே சேனாயியைப் பார்த்தால் மனத்தில் சாந்தி பிறக்கும். இன்றோ அளவற்ற ஆனந்தமும் சேர்ந்து பிறக்கிறதே! மன்னன் முடிதிருத்திக்கொள்ள அமர்ந்தான்.
கத்தியைத்தீட்டி தொழிலைத் தொடங்கினார் கிருஷ்ண சேனாயி.
""ஞானம் என்ற கத்தியால் ஆணவம் என்ற முடியை மழிக்க வேண்டும் அரசே! அப்படி வைராக்கியத்தோடு ஆணவத்தை நீக்கியவர்களுக்கு கடவுள் தரிசனமே கிட்டும். தாங்கள் மன்னராக இருந்தாலும் ஆணவமற்றவர்!'' முகச்சவரம் செய்தவாறே கிருஷ்ண சேனாயி உபதேசமும் செய்யலானார். மன்னர் பரவசத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
""சேனாயி! நீ உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறாய். அதைக் கேட்டால் மனம் தித்திக்கிறது!''
""அரசே! முன் ஒருமுறை இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறினேன். அப்போது என் கையில் சாட்டை இருந்தது. அன்று நான் சொன்னவற்றைக் கேட்டவர் பின்னர் மன்னரானார். இன்று என் கையில் சாட்டைக்கு பதிலாக கத்தி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே நீங்கள் மன்னராகத் தான் இருக்கிறீர்கள்''.
""சேனாயி! நீ பேசுவது எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் உன் குரல் புல்லாங்குழல் ஓசைபோல் காதில் தேனாய்ப் பாய்கிறது''.
""அரசே! தொடர்ந்து புல்லாங்குழலை வாசித்தால் குரலும் அப்படி ஆகுமோ என்னவோ?'' பேசியவாறே தொழிலை முடித்து புறப்படத் தயாரானார் கிருஷ்ண சேனாயி.
""இன்று உன் தொழில் வழக்கத்தை விட மிக நேர்த்தியாக இருந்தது. உன் பேச்சும் கூட மிக இனிமை. வழக்கமான சம்பளத்தோடு இந்தா இன்றைய உன் பணிக்கான விசேஷ சன்மானம்!''
மன்னர் மகிழ்ச்சியுடன் ஒரு பொற்கிழியை சேனாயி கையில் அளித்தார்.
நெஞ்சில் லட்சுமியையே வைத்திருப்பவன் கையில் இப்போது லட்சுமி! கிருஷ்ணசேனாயி புறப்பட்டார்.
அதற்குள் மன்னர் தலையில் தடவிக் கொள்வதற்காக வெள்ளிப் பேலாவில் எண்ணெய் கொண்டு வைத்தார்கள் ஊழியர்கள். எண்ணெயைப் பார்த்தார் மன்னர். அதில் சேனாயியின் பிரதிபிம்பம் தெரிந்தது.
என்ன ஆச்சரியம்! சேனாயி தலையில் ஒரு மகுடம்! அதில் மயில்பீலி! சேனாயிக்கு எப்படி நான்கு கைகள் முளைத்தன! மன்னர் திகைத்துப் போய் நிமிர்ந்து பார்த்தார்.
கிருஷ்ண சேனாயி மனோகரமாக ஒரு முறுவல் பூத்தார். பின் விடைபெற்றுச் சென்றுவிட்டார். போகிற வழியில் உண்மையான சேனாயியின் உபகரணப் பெட்டியில், மன்னர் தந்த பொற்கிழியை வைத்துவிட்டுப் போனார் பாண்டுரங்கன்.
உண்மையான சேனாயி வீடு திரும்பியபோது உபகரணப் பெட்டியில் இருந்த பொற்கிழியைப் பார்த்து விதிர்விதிர்த்துப் போனான். ஓடோடிப் போய் தான் தொழிலுக்கு வராததற்கு மன்னரிடம் மன்னிப்பு வேண்டினான்.
மன்னர் கண்களில் கண்ணீர் வழிந்தது. நடந்ததை அவர் விவரித்தபோது சேனாயியின் விழிகளிலும் நீர் திரையிட்டது. தன் பக்தனைப் பராமரிப்பவருக்குத் தரிசனம் தந்த கண்ணன் தனக்கு என்று தரிசனம் தருவான் என சேனாயி ஏங்கியபோது, கண்ணன் நகைத்தவாறே சேனாயி முன் காட்சி தந்து அருளாசி வழங்கினார்.
அவர் கழுத்தில் அவரது தொழில் நேர்த்தியை மெச்சி ருக்மிணி அணிவித்த பூமாலை கமகமவென மணம் வீசிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment