**சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! என்று சொன்னால் போதும். கவலை இனி இல்லை!!!.**



யமுனைக் கரையில் கண்ணனின் தோளில் சாய்ந்தவாறு கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்துக் கொண்டிருந்தாள். ஓவியமாக ராதை தன் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த போதிலும், கண்ணனின் கவனம் அக்கரையிலேயே இருந்தது. "என்மேல் ஒரு சிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' என்றாள் பொய் கோபத்ததுடன்.


"எனக்குப் பசிக்கிறது!"என்றான் அந்த மாயாவி.


இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?'' என்றாள் ராதை.


"அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''. "யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள்.


அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.


"துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்."அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!'' என்றாள் ராதை.


"ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''


சரி... சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்! ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.



"ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!'' என்றான் கண்ணன்.


ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள். ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள்.


துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.


"கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''


"உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''


"எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''


"அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.


யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்."தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.


"அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும். ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''



"ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''


ராதை கலகலவென சிரித்தாள். "என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''


"தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''


ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.


மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.


"யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்னபொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது'' என்றால் ராதை கோபத்தை அடக்க முடியாமல்.


கண்ணன் நகைத்தவாறே கேட்டான்: "அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''


"இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''


"வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''


"நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?"


"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.


"அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.


கண்ணன் சொல்லலானான்"அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவுமுழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''


கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.


"கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக்கொண்டு விடுகிறான்!''


இது தானே உண்மையான சரணாகதி தத்துவம்


Comments

Popular posts from this blog