□□□தெய்வ தரிசனம்□□□
ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு கோவிலில் சாமி கும்பிடச் சென்றான் ஆனந்த்! கோவில் வாசலில் இருந்த பூக்கடை அருகே செருப்பை விடப்போனான்.
அங்கு ஒரு முதியவர் தலை சுற்றிக் கீழே விழுந்துவிட்டார்! இதைப் பார்த்த ஆனந்த் பெரியவரை மெல்ல எழுப்பி அருகிலிருந்த தூணில் சாய்த்து உட்காரவைத்துவிட்டு அருகிலிருந்த கடையில் ஒரு சோடா வாங்கி வந்து, முகத்தில் தெளித்து சற்று குடிக்கவும் கொடுத்தான்!
முதியவரிடம் விவரம் கேட்டபோது, ""இரண்டு நாளா சாப்பிடலே..., அதான் மயக்கமா வந்திடுச்சு'' என்றார்.
அப்போது கோவிலுக்குள் செல்ல இருந்த சற்று வயதான தம்பதியரிடம், ""இவரைக் கொஞ்சம் பாத்துக்கோங்க...,நான் இவருக்கு ஏதாவது உணவு வாங்கி வருகிறேன்''என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்தான். அவர்களும் காத்திருந்தனர்.
சிற்றுண்டியும் கொஞ்சம் தண்ணீரும் வாங்கி வந்து மிகவும் சோர்வாயிருந்த முதியவரை கைத்தாங்கலாக அருகிலிருந்த மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். உணவைச் சாப்பிட வைத்து சிறிது தண்ணீரும் கொடுத்தான். பெரியவர் அவனிடம், ""ரொம்ப நன்றி தம்பி'' என்றார்.
இதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதிகள் ஆனந்திடம், ""ரொம்ப நல்ல காரியம் செஞ்சீங்க தம்பி...,நீங்க நல்லா இருக்கணும்...,அப்ப நாங்க கோயிலுக்கு உள்ளே போய் சாமி கும்பிடக் கிளம்புறோம்'' என்றனர்.
ஆனால் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது! இனி மாலைதான் நடை திறப்பார்கள்!
நின்றுகொண்டிருந்த தம்பதியரில் அந்தப் பெண்மணி, ""ஹும்...சாமியைப் பார்க்க முடியாம போய்விட்டதே'' என்றாள்.
""அதுதான் சாமியை வெளியிலேயே பார்த்துவிட்டோமே'' என்று ஆனந்தைக் கை காட்டினார் கணவர். மனநிறைவுடன் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்!...
ஆம் ..... உதவும் உள்ளம் கொண்ட அனைவருமே தெய்வம் தான்
ReplyDelete