கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார்


நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.


ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள். 


கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:


நித்யான்ன தாதா, 

தருணாக்னிஹோத்ரி, 

வேதாந்தவித், 

சந்திர சஹஸ்ர தர்சீ, 

மாஸோபாவாசீச, 

பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே


பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: 


தினமும் அன்னதானம் செய்வோர், 

தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், 

வேதாந்தம் அறிந்தவர்கள், 

சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர், மாதா மாதம் உபவாசம் இருப்போர், 

பதிவ்ரதையான பெண்கள்.


அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம் அறிந்தால்தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிவோம்:


(1).நித்ய அன்ன தாதா: அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். திருவள்ளுவரும் கூட:-


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)


பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.


மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருகிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.


அதிதி தேவோ பவ: (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது. 


அந்தக்காலத்தில் தான் உண்பதற்கு முன்னால் வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்த செல்வார்கள்.


தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர அன்னக்கொடி ஏற்றி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!


(2).தருண அக்னிஹோத்ரி: அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும் அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்யமுடியும். இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவரு வோரை கிருஷ்ணனே வணங்குகிறார் நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!


(3).வேதாந்த வித்:- வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பலகோடி ஜென்மங்களில் புனியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவன் வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்! இவர்களும் காணக்கிடைப்பது அபூர்வம். 


(4).ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி: சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அத்தகையோரையும் கண்ணபிரான் வணங்குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கத்தை ஏனைய மதத்தினரும் நம்மிடமிருந்து கற்றனர்.


ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில் லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் காத்திருப்பர். ஆகையால்தான் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.


(5) மாத உபவாசி: மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் – உண்ணா நோன்பு—கடைப் பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருப்பது.  இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல.இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு. அவர்களை நாமும் வணங்குவோம். 


(6)இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!! உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: உண்மை, வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்பான் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் (குறள் 55).


அட! இப்படிப் பத்து கற்புக்கரசிகளைக் கண்டுபிடித்து வறண்ட பகுதிகளில் எல்லாம் மழை பொழியச் செய்துவிடலாமே! அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போட்டுவிடலாமே என்று சிலர் நினைக்கலாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் பிரயோகிக்க மாட்டார்கள்.


அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில் / தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.


நமக்கும் தெரியும் ராவணன் வதம் என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.


உலகில் ஏழு நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அணுகுண்டைப் பிரயோகிக்கிறார்களா?  இல்லையே. இது போல பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர்.


அந்தக் காலத்தில் எல்லா பெண்களும் திரிகரண சுத்தியுள்ள (சொல், செயல், சிந்தனை = மனோ வாக், காயம்) கற்புக்கரசிகளாக இருந்தார்கள். இதனால்தான் மனு சொன்னார்:


எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை (மனு 3-56)


மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள் சாபம் இட்டால் அந்தக் குடும்பங்கள் அடியோடு அழிந்து போகும் (மனு 3-59)


தந்தைமார்கள், கணவன்மார்கள், மைத்துனன்கள், சகோதர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் பெண்களை மதிப்போடு நடத்துங்கள். அவர்களை ஆடை அணிகலன்களால் அலங்கரியுங்கள் (மனு ஸ்மிருதி ஸ்லோகம் 3-55).


இப்படியெல்லாம் பாரட்டப்பட்ட பதிவிரதைகளை கண்ணன் வழிபடுவதில் 

வியப்பேதும் உண்டோ? கணவனை தெய்வமாக நினைக்கும் பெண் இந்த காலத்தில் அபூர்வம் என்று சொல்லவா வேண்டும்?


கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை எங்கெங்கெலாம் நீங்கள் காணுகிறீர்களோ அங்கெங்கெல்லாம் நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுங்கள்!! உங்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


ஸ்ரீராமஜயம்

Comments

Popular posts from this blog