*மகிழ்ந்து மகிழ்விக்கவும்.. லாஜிக் தெரியுமா..??*


*ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத் திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.*

  

*அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிச் சென்று விட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப் படுக்கை என்பதால் அவரை கவனித்துக் கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகி விடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.*


*சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.*


*‘என் அம்மா படுத்தப் படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மா தான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்த போது தெரியவில்லை, இறந்த பிறகு தான் தெரிந்தது. எதிலும் வெறுமை, ஊக்கமின்மை,பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததால் எழுதுவதற்கு வார்த்தைகள் கூட வருவதில்லை. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் எழுத மனதில் ஊக்கம் இல்லை’ என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.*


*இதில் ஓர் உளவியல் உள்ளது. கடைசியில் சொல்கிறேன். இப்போது ஒரு கதையைப் படியுங்கள்.*


*ஒரு திருடன் சர்க்கஸ் பார்க்கப் போனான். வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்க்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி. நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்க்கஸ் வீரனிடம் சென்று இந்தப் பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த வீரன் ‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்ற போது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’ எனக் கூறி அழைத்துச் சென்றான்.*


*அடுத்த நாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும் போது சர்க்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான். அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக் கொடுத்த பிறகு சர்க்கஸ் வீரனிடம், ‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’ என்று சொன்னான்.*


*அதற்கு சர்க்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல் ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’ எனச் சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ எனக் கேட்கிறான்.*


*சர்க்கஸ் வீரன், ‘நான் சர்க்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை. சர்க்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால் தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன். நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப் போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்லத் திருடன் தலை சுற்றி மயக்கமடைந்தான். இந்தக் கதையை புலவர் கீரன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.*


*இந்த இரண்டு நிகழ்வுக்கும் பொதுவாக ஓர் உளவியல் இருப்பதைக் கவனியுங்கள்.*


*நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உற்சாகமாக இருக்கும் போது தான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும். துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். உற்சாகம் குறையும் போது நம் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு தூசியைக் கூட நம்மால் தன்னிச்சையாக தட்டி விட்டுக் கொள்ள முடியாது.*


*நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மைத் சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.*


*மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் .*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   


*வாழ்த்துக்கள்.*

Comments

Popular posts from this blog