ஆன்மீகக் கதை .....


தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது.


வைகுண்ட பதியான விஷ்ணுவே மயங்கும் வகையில் வாசிக்கும் தம்முடைய இசைதான் சிறந்தது என்றார் நாரதர். இராவணனின் இசைக்கு மயங்கிவரங்களை கொடுத்தவர் எங்கள் ஈஸ்வரன். அவர் என் இசையை ரசிக்கிறார் எனவே நான் தான் சிறந்தவர் என்றார் தும்புரு.


அதெப்படி என் இசையை இதுவரை அவர் கேட்டிருக்கிறாரா? என் பாட்டைக் கேட்டால் அப்புறம் என்னை சிறந்தவன் என்று ஒப்புக்கொள்வார் என்றார் நாரதர்.


உமக்கு கலகம் செய்யும் அளவிற்கு வாசிக்கத்தெரியுமா? என்று தெரியவில்லை! ஈசன் திரிகால ஞானி அவர் உன்னைப் பற்றி என்ன உலகத்தை பற்றி எல்லாம் அறிந்தவர். அவர் இதுவரை உன்னைப் பற்றியோ உன் இசையைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை தெரியுமா?


 என்னைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை என்பதிலிருந்தே அவர் என் இன்னிசையைக் கேட்கவில்லை என்று தோன்றுகிறது. நீ உன் இசையைத் தவிர வேறு எதையும் அவரைக் கேட்கவிட்டால்தானே! எங்கே உன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறாய்! என்றார் நாரதர்.


உடனே தும்புருவிற்கு கோபம் வந்துவிட்டது. நானா பயந்தாங்கொள்ளி! இப்போதே நாம் இருவரும் கைலாயம் செல்வோம்! ஈசனிடம் வீணை வாசித்து யார் சிறந்தவர் என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றார்.


இது சரியான யோசனை! இப்போது நீ சொன்னாயே இது சிறந்த வார்த்தை! நாம் இருவரும் ஈசன் முன் வாசிப்போம்! அவர் சொல்லட்டும் யார் இசை சிறந்தது என்று.


இப்படி இருவரும் தீர்மானித்துக் கொண்டு கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர்.


அங்கே ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர்.


“யாழிசை வல்லுனர்களே! இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்றார் அனுமன்.


உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர்.


யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சபாஷ் சரியான போட்டிதான்! எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்றார் அனுமன்.


இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள்! நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.


ஆஞ்சநேயர் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை! மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை! பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. ஆஞ்சநேயர் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத்துவங்கியது.


நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை! இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது! இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர்.


சிறிது நேரத்தில் ஆஞ்சநேயர் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது.


இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே! இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டுவிட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள்! உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார் குறும்புடன்.


இரு முனிவர்களும் ஆஞ்சநேயரின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்துவிட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை! எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே! இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர்.


ஆஞ்ச நேய பெருமான் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன், முனிவர்களே! வித்யா கர்வம் கூடாது! அது நம்மை அழித்துவிடும்! அடக்கமே சிறந்த குணம்! இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள்! என்று கூறினார்.


தங்கள் கர்வத்தை விட்டொழித்த முனிவர்கள் விடைபெற்றனர்.


நீதி: வித்தை கர்வம் கூடாது

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips