ஆனந்த விகடன் டுடே - ஹ்யூமர்
’கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவிஷீல்டு மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கடந்த வாரம் வைரல்.
இந்த நியூஸ் ஒரு வாரமாக என் மண்டைக்குள் ஓடி, நியூ நார்மல் வாழ்க்கை இப்படி இருக்குமோ எனக் கற்பனைக்குதிரை தறிகெட்டு ஓடியது.
இதோ இப்படித்தான்...
காதலிகளுக்குப் பிரிவதற்கு இன்னொரு காரணம் கிடைத்திருக்கும்.
“கோபி... எங்க குடும்பமே ஸ்புட்னிக்-வி. கோவாக்சினுக்கு வேணும்னா செட் ஆகும். ஆனா, நீங்க கோவி ஷீல்டு... நிச்சயமா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாரு. என்னை மறந்துடுங்க ப்ளீஸ்!” என கண்ணீரோடு குட்பை சொல்வாள். கோவிஷீல்டு கோபி கேவிக் கேவி அழுவான்.
கல்யாண புரோக்கர்கள் வித்தியாசமாக உருமாறியிருப்பார்கள். கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி என தனித்தனி ஆல்பங்கள் கைவசம் வைத்திருப்பார்கள்.
“பையன் வீடு இந்தியால கொரோனா இரண்டாவது அலை உச்சத்துல இருந்தப்போ ஸ்புட்னிக் வி-க்காக வெயிட் பண்ணிப் போட்டுக்கிட்ட வசதியான குடும்பம். அதனால அவங்க எதிர்பார்க்குறதை செஞ்சிடுங்கோ!” என்று டிமாண்ட் பண்ணுவார்கள்.
“ஆஹகா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத்ரம்... பொண்ணு ஸ்புட்னிக் நட்சத்திரம்... கோடியில ஒரு ஜோடிக்கு அமையிற அமோகமான ஜாதகப் பொருத்தம்..!” என்பார் பிரபல ஜோதிடர்.
“எங்க வைஷு முதல் அலையில கொரோனா அறிகுறி இருந்தப்போ வீட்லயே பத்து நாள் குவாரன்டீன்ல நல்லா சமைக்கக் கத்துக்கிட்டா. பத்துக்குப் பத்துல சிம்பிளான ரூம்ல ஓ.டி.டி-ல மட்டும் படம் பார்த்து சிக்கனமா வாழப் பழகிட்டா. நம்பிக் கொடுத்தீங்கன்னா உங்க பையனைப் பார்த்துக்குவா!” என்று பெண் வீட்டாரே மாப்பிள்ளை வீட்டாரிடம் நிச்சயதார்த்தத்தின் போது சொல்வார்கள்.
வீட்டின் ஷோகேஸ்களில் ஷீல்டுக்குப் பக்கத்தில் கோவிஷீல்டு போடும்போது எடுத்த குடும்ப உறுப்பினர்களின் தடுப்பூசிப் புகைப்படங்களை ஃபிரேம் பண்ணி அடுக்கி வைத்திருப்பார்கள். “நாங்க கோவிஷீல்டு பரம்பரை!” என தூக்குத்துரை கணக்காக மீசையை நீவிவிட்டுக் கொள்வார்கள் பெருசுகள்.
சீர்வரிசையில் அரை அண்டா ஹேண்ட் சானிட்டைசர், பீரோவில் ஐந்நூறு பண்டல் சர்ஜிக்கல் மாஸ்க் வைத்து கெத்து காட்டுவார்கள். தாய் மாமன் சீராக தாம்பூலப் பையில் N95 மாஸ்க் போட்டுக் கொடுப்பார். திருமண நிகழ்வுக்கு யார் வந்தா, யார் போனா என்று கண்டுபிடிக்கவே முடியாது. கல்யாணத்துக்கு வராத மாமணி மாமா மணிகூட, “என்ன ஒரு தடபுடல் செஞ்சீட்டீங்க போங்க. மாஸ்க் போட்டிருந்ததால நீங்க என்னை கவனிக்கல. கல்யாணம்னா இப்படித்தான் நடத்தணும்!” என போனில் கப்சா விடுவார்.
கல்யாண ஆல்பத்தைப் புரட்டினால் எல்லோரும் மாஸ்க் மயமாக இருப்பார்கள். “மாப்பிள்ளை ஏன் கல்யாண ஆல்பத்துல கோச்சுட்டு ஒதுங்கி நிக்கிறாரு?” என்று புரியாமல் கேட்டால், “கோவிக்கலைங்க. சமூக இடைவெளிய அத்தனை துல்லியமா ஃபாலோ பண்ணியிருக்காரு..!” என்று விளக்கம் சொல்ல வேண்டி யிருக்கும்.
வளைகாப்பு வைபோகத்தில் கூட கன்னத்தில் தடவாமல் சந்தனத்துக்குப் பதில் சானிட்டைசரை எடுத்துக் கைகளில் தடவி வாழ்த்திவிட்டு வருவதை வாடிக்கை ஆக்கியிருப்பார்கள்.
இரண்டுபேர் எதிர்காலத்தில் சந்திக்கும்போது:
“நான் முதல் அலைல கொரோனா வந்த பேட்ச்... நீங்க?”
“ஓ... கபசுரக்குடிநீரா? நான்லாம் இரண்டாம் அலை சர்வைவர்..! வேக்சின் வேணுகோபால்னு பேரை மாத்திக்கிட்டேன்!” எனப் பேசிக் கொள்வார்கள்.
ப்ப்பா... பயங்கரம்!
Comments
Post a Comment