நாச்சியார் கோயில் - கும்பகோணம்


64 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்காணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்டவர். இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், ராஜ கோபுர வாசலில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயிலாக, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். சிவபக்த நாயன்மாரால் கட்டப்பட்ட வைணவ ஸ்தலம். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை “மணிமாடக்கோயில்’ என்று பாடியுள்ளார்.


மூலவர் சன்னதியின் மேல் உள்ள ஹேம விமானம், ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு கீழே நவக்கிரகங்கள் உள்ள வைணவ ஸ்தலம்.


108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய தேசமாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.


ராமாயண காலத்திற்கு பிறகு அனுமனுக்கே முதலிடமாக போனதில் கருடனின் மன புழுக்கத்தை போக்க மகாலெட்சுமி ," பூமியில் நான் மனித உருவில் மறைந்து வளர போகிறேன்; நீ கண்டுபிடித்து எம்பெருமானுடன் திருக்கல்யாணம் செய்து வை; அந்த ஸ்தலத்தில் நீ முதலிடம் பெறுவாய்" என கூறினார்.


மேதாவி மகரிஷி விஷ்ணு பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி திருநரையூரில் சித்தநாதேஸ்வர சிவஸ்தலத்தில் தவம் இருந்தார்.


சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் மனைவி விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.


மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றி, தன்னை மகளாக வளர்க்கும்படி கூற, மகரிஷியும் அவளை வஞ்சுளவல்லி நாச்சியார் என பெயரிட்டு வளர்த்து வந்தார்.


கருட பகவான் உலகத்தை சுற்றி தேடி வந்து மகாலெட்சுமி, மேதாவி மகரிஷி மகளாக வளர்வதை கண்டுபிடித்து விஷ்ணுவை அழைத்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, "சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன்" என ஐந்து வடிவங்கள் எடுத்து மேதாவி மகரிஷி குடிலுக்கு வந்தார். அங்கு உணவருந்தியபின் கை கழுவ தண்ணீர் தந்த வஞ்சுளவல்லி நாச்சியாரின் கரம்பற்றியதை கண்டு கோபம் அடைந்த மேதாவி மகரிஷி முன் ஐவரும் ஒன்றாக இணைந்து பெண் கேட்டு இரந்து நின்ற கோலத்தில் நின்றபோது மேதாவி மகரிஷி தன் தவவலிமையால் வந்திருப்பது விஷ்ணு என அறிந்து சில நிபந்தனைகளுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள, கருடாழ்வார் முன்னிலையில் சிவனும் பார்வதியும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.


திருமண நிபந்தனைப்படி ஸ்ரீனிவாச பெருமாள் - வஞ்சுளவல்லி நாச்சியாராக அந்த ஊரிலேயே கோவில் கொண்டார்கள்; ‘இத்தலத்தில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வரம் அளித்தார்கள். வஞ்சுளவல்லி நாச்சியாருக்கு முதலிடமும், நிர்வாக உரிமையும் தரப்பட்டது. வஞ்சுளவல்லி நாச்சியாருக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. தாயார் இடுப்பில் சாவிக்கொத்துடன் பெருமாளுக்கு சிறிது முன் நின்ற கோலத்தில் தம்பதி சமேதராக மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார்கள். . நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் தாயார் பெயரிலேயே இத்தலம் “நாச்சியார் கோயில்’ என்ற பெயரும் பெற்றது. மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.


மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், “”நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்” என்றார். அதனை ஏற்று இத்தலத்தில் மூலவர் கருவறைக்கு இடது புறம் 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் பிரதான மூர்த்தியாகவும், உற்சவமூர்த்தியாகவும் இடம்பிடித்தார். கருட பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. நாள் தோறும் 6 கால பூஜை நடைப்பெறுகிறது.


மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர். இது ஒருமாடக்கோயில். யானை ஏற முடியாதபடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். ராஜகோபுரத்தைக் கடந்து, உள்ளே தூண் மண்டபத்தை அடுத்து படிகளில் ஏறிச்சென்று மூலவர் கருவறையை அடையலாம்.


நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து “முத்ராதானம்’ செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, “நம்பி’ என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.


திருவிழா


மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கல் கருடசேவை உற்சவமும், வீதிஉலாவும் நடக்கிறது.


பிரார்த்தனை


எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.


கருடாழ்வாருக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சாத்தி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். பட்டு வஸ்திரம் சாத்தி வழிபட்டால், எண்ணங்கள் ஈடேறும்.


ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வாரை வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும். மேலும் வி‌ஷ ஜந்துக்களின் பயம் போகும்.


வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.


பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும்.


நேர்த்திக்கடன்


பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.


இறைவன் ஸ்ரீநிவாசப் பெருமாள்


திரு நறையூர் நம்பி ,


தாயார் வஞ்சுளவல்லி


கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு. விஷேச தினங்களில் காலை 1 மணிவரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

Comments

Popular posts from this blog