*சாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள்*



எந்த சாமிசிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்ததான் அபிஷேகம் செய்வார்கள்.


சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும். அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரம் வலம் வரக்கூடாது. சிவனுக்கு கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும்.


வலம்புரி சங்கு அபிஷேகம் 10 மடங்கு பலன்களை தரும். சிவபெருமான் அபிஷேகப்பிரியர். ஆண்டு முழுவதும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும். வீட்டில் தினமும் காலை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கயிலாயப் பதவியையே பெற்று விடலாம் என்பது ஐதீகம். அக்கினி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும்.


சிவபெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால்தான் அவர் தலையில் கங்கையை சூடி, பனி மலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர நாட்களில் அவரை குளிர்ச்சி படுத்தும் விதத்தில் அபிஷேகம் செய்து மகிழ்வித்தால், கோடை வெம்மையால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து அவர் நம்மை பாதுகாப்பார். அது மட்டுமின்றி நல்ல வரங்களையும் தருவார்.


சிவனின் அம்சமான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் நடக்கும். அவை மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய 6 நாட்களில் நடைபெறும். இதில் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய 2 நாட்களிலும் நடராஜர் அபிஷேகம் மிகப்பெரிய திருவிழா போல நடத்தப்படும்.


இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்துக்கு முன்பே நடராஜருக்கான அபிஷேகத்தை செய்து முடித்து விடுவார்கள். சிவாலயங்களில் உள்ள நந்தி, தெட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோருக்கும் அவர்களது சிறப்புக்குரிய நாட்களில் பல்வேறு பொருட்களால் விதம், விதமான அபிஷேகங்கள் செய்வார்கள். சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.


இரவில் சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம் வருமாறு:-


முதல் சாமம் : பஞ்சகவ்ய அபிஷேகம்.

இரண்டாம் சாமம் : சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம்.

மூன்றாம் சாமம்: தேன் அபிஷேகம்.

நான்காம் சாமம்: கரும்புச்சாறு அபிஷேகம்.


வைணவத் தலங்களில் பெருமாளுக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். அவற்றை காண கண் கோடி வேண்டும். திருமலையில் ஏழுமலையானுக்கு வெள்ளி தோறும் அதிகாலையில் நடக்கும் அபிஷேகம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். ஸ்பெயின் நாட்டு குங்குமப்பூ, நேபாள நாட்டு கஸ்தூரி, சீனாவில் இருந்து வரும் புனுகு, பிரான்சில் இருந்து வரும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.


முதலில் புனுகு தைலம் தடவி அபிஷேகத்தை தொடங்குவார்கள். பாராயணம் முழங்க சுத்தமான தண்ணீர், பசும்பால் கொண்டு அபிஷேகம் நடத்துவார்கள். 51 வட்டில் பசும்பால் இதற்கு பயன்படுத்தப்படும். ஏழுமலையான் அபிஷேகத்தில் தயிர், தேன், இளநீர் போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை.


வாசனைத் திரவியங்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றிருக்கும். இந்த அபிஷேகத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும். இந்த அபிஷேகம் செய்ய பணம் கட்டினால் பல மாதங்கள் கழித்தே அபிஷேகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். வைணவத் தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும்.


சக்தி தலங்களில் செய்யப்படும் அபிஷேகங்கள் நம் மனதில் நிறைவை உண்டாகும். அது அம்பாள், தாயாரின் மனதை குளர்ச்சி அடைய செய்யும். அது போல முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு தலத்துக்கு ஏற்ப அபிஷேகங்கள் விதம், விதமாக நடத்தப்படுகின்றன. பழனியில் உள்ள முருகர் சிலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளால் 81 சித்தர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டதாகும்.


தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. முருகன் கையில் வைத்திருக்கும் வேலுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.


இரண்டு நாகங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் (10.30-12.00) மஞ்சள், குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் - மனைவி இடையே அன்பு பெருகும். ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.


அவற்றில் சில:


கொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள். திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள். தில்லைக்காளிக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.


எப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம். திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள். சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பவுர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.


திருப்பழனம் பழனத்தப்பர், ஐப்பசி பவுர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார். தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது. தருமபுரி ஹரிஹரநாதகோவில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள். உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.


சென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் ஜெயந்திநாதர் உருவம் தெரியும் கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். தனக்கு நடக்கும் அபிஷேகத்தை ஜெயந்திரநாதரே பார்ப்பதாக ஐதீகம். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.


அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும், செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.


அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும், சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இத்தகைய சிறப்பான அபிஷேகம் முடிந்ததும் அடுத்து சுவாமிக்கு அலங்காரம் செய்வார்கள். பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும் நகைகளாலும் சிலையை அலங்கரிப்பார்கள்

Comments

Popular posts from this blog