மதம் பிடித்த யானையை அடக்கிய கோழி!
திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியிலுள்ள ஒரு கடைத் தெருவில் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
தல வரலாறு:
நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதன் காரணமாக மறுபிறவியில் பனிறியாக பிறந்து, சேற்றில் உருண்டு பிரண்டான். அதன் பிறகு தனது முன் பிறவி செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தினான். இதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, திருச்சி மாவட்டம், உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவதீர்த்தத்தில் புனித நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான். இந்த கோயிலில் உள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாக கன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பஞ்சவர்ணேஸ்வரர் பெயர் காரணம்:
உறையூர் வந்த பிரம்ம தேவன் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானை வணங்கினார். அப்போது, சிவபெருமான் தனது தங்கநிறம் (பொன்மை), சிகப்பு (செம்மை), வெண்மை, கருமை, புகைமை என்று 5 நிறங்களை வெளிப்படுத்தினார். அப்போது, தங்க நிறத்திலிருந்து மண்ணும், வெள்ளை நிறத்திலிருந்து தண்ணீரும், சிகப்பு நிறத்திலிருந்து நெருப்பும், கருமை நிறத்திலிருந்து காற்றும் இறுதியாக புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று கூறினார்.
காஞ்சிபுரத்தில் நிலமாகவும், திருவானைக்காவலில் நீராகவும், திருவண்ணாமலையில் நெருப்பாகவும், காளஹஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் ஆகாயமாகவும் சிவபெருமாள் காட்சி தருவதால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று 5 பூதங்களையும் உள்ளடக்கி 5 தலங்களில் உறைவதால் (வசிப்பதால்), இந்த ஊருக்கு உறையூர் என்றும், இந்த சிவபெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
உதங்க முனிவர்:
வேதம், புராணங்களில் வல்லவரான உதங்க முனிவர், தனது மனைவி பிரபையுடன் கங்கையில் புனித நீராடினார். அப்போது பிரபையை முதலை ஒன்று இழுத்துச் சென்று சின்னா பின்னமாக்கியது. வாழ்வின் நிலையை முற்றிலுமாக அறிந்த முனிவராக இருந்தாலும் கூட இந்த நிகழ்ச்சி அவரை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதையடுத்து, உதங்க முனிவர் உறையூர் வந்து சிவனை தரிசனம் செய்தார்.
அப்போது, காலை வழிபாட்டில் ரத்தின லிங்கம், உச்சிகால வழிபாட்டின் போது ஸ்படிக லிங்கம், மாலை வழிபாட்டின் போது பொன் லிங்கம், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கம், அரத்தஜாம வழிபாட்டில் சித்திரலிங்கம் என்று சிவபெருமான் காட்சியளித்தார். இதன் காரணமாகவும் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்சவர்ணேஸ்வர்ரை தரிசனம் செய்த உதங்க முனிவரின் மனம் நிம்மதியடைந்தது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.
ஆடி பௌர்ணமி:
உதங்க முனிவருக்கு ஆடி பௌர்ணமி நாளில் சிவபெருமான் 5 நிறங்களில் தரிசனம் அளித்ததால் அன்று ஆடி பௌர்ணமி நாளில் சிவனை தரிசனம் செய்வது அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
சிவ பூஜை, சிவ தரிசனம்:
பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் பைரவர், சனி பகவான் மற்றும் சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாக உறையூர் பஞ்சவர்ணேஸ்வர்ர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை மற்றும் அஷ்டமி நாட்களில் பைரவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. உலகில் எந்த இடத்தில் சிவனுக்கு பூஜை செய்தாலும், சிவனை தரிசனம் செய்தாலும் இந்த பஞ்சவர்ணேஸ்வர்ரை வந்தடையும் என்பது ஐதீகம்.
சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக இந்த பஞ்சவர்ணேஸ்வரர் அருள் புரிகிறார். இந்த கோயிலின் வரலாற்றுடன் கோழிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. ஆதலாம் இந்த பகுதி மக்கள் கோழிக்கும் மரியாதை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
தல வரலாறு:
சோழ மன்னர் யானை மீது உலா வந்த போது, யானைக்கு மதம் பிடித்தது. மன்னரும், யானை பாகனும் செய்வதறியாமலும் மக்களை காப்பாற்ற முடியாமலும் தவித்தனர். அப்போது கோழி ஒன்று தனது குரலை எழுப்பி வந்து யானையின் மத்தகத்தின் மேல் தனது மூக்கினால் கொத்தியது. இதையடுத்து, மதம் பிடித்த யானை பழைய நிலையை அடைந்தது. யானையின் மதத்தை அடக்கி முடிந்த தும் கோழி ஒரு வில்வ மரத்தடிக்கு சென்று மறைந்தது.
கோழி மறைந்த அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது, அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்துள்ளது. இதைக்கண்ட மன்னன், தன்னையும், தனது நாட்டு மக்களையும் காப்பாற்றவே சிவபெருமான் கோழி உருவத்தில் வந்துள்ளது என்று கருதி சிவபெருமானுக்கு கோயில் எழுப்பினான். மேலும், சிவபெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயரும் சூட்டினான். பலம் பெற்ற, வலிமை வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போன்று பலம் வாய்ந்தவர்களை அடக்கும் சக்தியை பஞ்சவர்ணேஸ்வரர் தந்து அருள் புரிவார். இந்த கோயிலில் சிவனை வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆதலால், இந்த கோயிலின் மூலவர் திருமூக்கீச்சரம் (மூக்கிச்சுரம்) என்றும் பெயர் ஏற்பட்டது.
Comments
Post a Comment