ஐப்பசி பௌர்ணமி...!
(பௌர்ணமி: 19-10-2021 மாலை 07:56 முதல் 20-10-2021 இரவு 08:54 வரை)
ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்!
ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும்.
அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.
ஐப்பசி பௌர்ணமி:
ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். சந்திரனை முடிமேல் சூடிய ஈசனுக்கு மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவன் பிரம்மஹத்தி தோஷம்
இது மட்டும்தான் காரணமா என்றால் அதுதான் இல்லை. வேறொரு காரணமும் இருக்கிறது. சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் என்னவென்று பார்க்கலாம். பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலமே பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும். யார் பிச்சையிடும்போது இந்தக் கபாலம் அன்னத்தினால் நிறைகிறதோ அப்போது அந்தக் கபாலம் சிவபெருமானின் கையை விட்டுப் பிரியும் என்பது விதி.
காசி அன்னபூரணி:
சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தினால் நிறைய, பிரம்மனின் தலை சிவபெருமானை விட்டு விலகும். சிவபெருமானும் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டு மாயையிலிருந்தும் விலகுவார். அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி. அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
அபிஷேக பிரியர் சிவன்
உமை ஒரு பாகனான இருக்கும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகம் செய்யும் முறை
வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நீர் வாழ் உயிர்களுக்கு உணவு.
சோறு கண்ட இடம் சொர்க்கம்
நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம். சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருக்கிறான். அவனே நமக்குப் படியளப்பவன். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.
சிவனுக்கு நன்றிக்கடன்
ஈசனே அன்னத்தின் வடிவில் அருள்புரிகிறார். ஈசன் இல்லாமல் எதுவும் இல்லை. உணவளித்து நம்மை வாழவைக்கும் ஈசனுக்கு நன்றிக்கடனாக அன்னாபிஷேகத்தைச் செய்கிறோம். வானவியல் சாஸ்திரத்தின்படி துலா மாத பௌர்ணமி தினத்தின் போது தான் சந்திரன் அதிகப் பொலிவாகத் தோன்றுவான். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
உணவுக்கு பஞ்சம் வராது
கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும் அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால் சகலமும் ஒடுங்கிவிடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால் அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும்.
அன்னதோஷம் போகும்
அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும். அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது. சொர்கத்திற்கு போகும் வரை சோறுக்கு தட்டுப்பாடு வராது என்பது நிச்சயம்.
Comments
Post a Comment