வரதட்சணையாக வந்த ஸ்ரீராமர்...

நல்லுறவு தந்தருளும் சாளக்ராம மகிமை!



வரதட்சணை தருவதும் பெறுவதும் எல்லாக் காலத்திலும் உண்டு.


அந்தக் காலத்தில், வைஷ்ண சம்பிரதாயத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் தருவதை பெண் வீட்டாரும் பெறுவதை மணமகன் வீட்டாரும் கௌரவமாகவும் பெருமையாகவும் நினைத்தனர்.


சாளக்ராமம் என்பது விஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது.


நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுவதாகச் சொல்வர்.


நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் சம்பந்தியானார்கள்; நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு சீர்வரிசையில் சாளக்ராமத்தை வழங்கினார்.


சிலகாலம் கழித்து, மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ், தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது, இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.

பொதுவாக, உள்ளங்கை அளவோ அல்லது அதை விட சற்று பெரிதாகவோ இருக்கும் சாளக்ராமம். ஆனால், தஞ்சாவூர் மன்னருக்குச் சீர்வரிசையாக மிகப் பெரிய சாளக்ராமம் வழங்கப்பட்டது.


இந்த சாளக்ராமத்தைக் கொண்டு, அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்தார் மன்னர். அப்படியே கோயிலும் எழுப்பினார்!


கருவறையில் குடிகொண்டிருக்கும் இறைவன், சாளக்ராமமாக காட்சி தருவது இந்திய அளவில் அரிது என்கிறார்கள்.


அப்படி, கருவறையில் சாளக்ராம மூர்த்தமே பிரதான தெய்வமாகத் திகழும் தலம், சோழ தேசத்தில், குறிப்பாக நஞ்சை கொஞ்சும் தஞ்சையில் உள்ளது


தஞ்சாவூர் அருகே உள்ளது புன்னைநல்லூர். மகத்துவம் மிக்க மாரியம்மன் ஆலயத்துக்குப் பின்புறத்தில் தனியே அழகுற கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீகோதண்டராமர்.


சௌந்தர்ய விமானம். உள்ளே இருப்பவரும் சௌந்தர்யமாக, அழகு ததும்ப காட்சி தருகிறார். ஐந்தடி உயரத்தில், சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலம்!


ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதாதேவி ஆகியோருடன் ஸ்ரீசுக்ரீவனும் உடனிருக்க சாந்நித்தியத்துடன் சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர்.


கண்டகி நதியில், முக்திநாத் தலத்துக்கு அருகில் இருந்து எடுத்து வந்த சாளக்ராமத்தைக் கொண்டு ஸ்ரீராமரை உருவாக்கி ஸ்தாபித்திருப்பதால், முக்தி தரும் தலம் எனப் போற்றுகின்றனர்.


ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், பிறவிப் பயனை அடையலாம். காரியங்கள் யாவும் தடையின்றி நிகழும்.

இந்த உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், ஒரேயொரு முறை தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமரை வந்து வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த இப்பிறவியில் ஒரேயொரு முறை வந்து சாளக்ராம கோதண்டராமரை வணங்குங்கள். குடும்பம், மனைவி, குழந்தைகள், உத்தியோகம், நல்லுறவு என சந்தோஷமும் அமைதியுமாக வாழ்வீர்கள்

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips