*தேங்கிய மழை நீரை செலவின்றி எடுத்து பூமிக்குள் அனுப்ப*!
Aram Online
மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை!
தொடர் மழை தமிழகம் முழுக்க சக்கை போடுபோட்டவண்ணம் உள்ளது! மழைவெள்ளத்தால் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், உற்பத்திக் கூடங்களும் தண்ணீரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணம் உள்ளனர்.முடிந்த வரை அரசு துரிதகதியில் இறங்கி நீரை வெளியேற்றினாலும் பல இடங்களில் அரசு உதவியை எதிர்பார்த்து மக்கள் தவிக்கின்றனர்.
ஆனால், அரசு உதவியை எதிர்பார்க்காமல் எந்த செலவுமில்லாமல் இந்த தண்ணீர் பிரச்சினையில் இருந்து நாமே நம்மை விடுவித்துக் கொள்ளமுடியும். அத்துடன் அந்த தண்ணீரை நம் நிலத்திற்குள்ளேயே விட்டு சேகரித்துக் கொள்ளவும் முடியும் என்பதைத்தான் இந்த காணொளியில் இந்த விவசாயி விளக்கி உள்ளார்.
குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் தங்களிடம் உள்ள போர்பம்பை ரிவர்சில் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் எத்தனை அடி ஆழத்திற்கு போர் போட்டு உள்ளார்களோ, அத்தனை அடி ஆழத்திற்கு இந்த வெள்ளத் தண்ணீரை மின்சார உதவியின்றி உள்ளே அனுப்பிவிடலாம்.
ஆரம்பத்தில் ஓரிரு நிமிடங்கள் மோட்டாரைப் போட்டுத் தண்ணீரை வெளியேற்றிவிட்டு நாம் மோட்டாரை நிறுத்திவிட வேண்டும். அப்போது அந்த தண்ணீர் வெளியேற்றிய குழாய் நிறுத்தப்பட்டவுடன் வேகமாக காற்றை உள்ளுக்கு இழுக்கும். அப்போது அந்தக் குழாயை தேங்கிக் கிடக்கும் தண்ணீருக்குள் சொருக வேண்டும். அவ்வளவு தான் தேங்கியுள்ள தண்ணீர் தானாக பைப்பிற்குள் ஓடி பூமிக்குள் சென்றுவிடும்!
இதில் ஒருவர் செய்ய வேண்டிய சிறிய செலவு ஒன்றே ஒன்று தான்! அது தண்ணீர் தேங்கியுள்ள பகுதி வரை அந்த பிளாஷ்டிக் பைப் வருவதற்கு தக்க நீளத்திற்கு அதை வாங்கி தண்ணீர் வெளியேறும் குழாயின் வாய் பகுதியில் சொருக வேண்டும். இதன் மூலம் தேங்கியுள்ள தண்ணீரானது ஒரு மணி நேரத்திற்கு 12,000 லிட்டர் வரையிலும் நிலத்திற்குள் சென்றுவிடும். இந்த வீடியோ பதிவை கவனமுடன் பார்த்து உங்கள் சொந்த அனுபவ புரிதலில் களயதார்த்தத்திற்கு ஏற்ப செயல்படுங்கள்! இதன் மூலம் உங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் வெள்ள அபாயத்தில் இருந்து விடுவித்து பலன் அடையுங்கள்!
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் போர்வெல்லை 500 அடி முதல் ஆயிரம் அடி வரை கூட இறக்கி உள்ளார்கள்! அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் தங்கள் நிலத்தடி நீர்வளத்தை காப்பாற்றிய புண்ணியம் செய்தவர்களாவார்கள். தமிழகம் முழுக்க தற்போது 22 லட்சம் போர்வெல்கள் புழக்கத்தில் உள்ளன! அவை அனைத்தும் களம் கண்டால் ஒரு சில மணி நேரத்திலேயே இந்த மழைவெள்ளச் சூழல்கள் முடிவுக்கு வந்துவிடும்.
இந்த வீடியோ பதிவை வெளியிட்ட விவசாயியின் பெயர் நமக்குத் தெரியவில்லை. அவர் நம்மை தொடர்பு கொண்டால், அவர் பெயரை புகைபடத்துடன் வெளியிட்டு கெளரவிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த செய்தியை பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையை நான் சொல்லாமலே நீங்கள் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன்.
சாவித்திரி கண்ணன்
கூடிய விரைவில் இதை செயல்படுத்தினால் மக்கள் இந்த ஒரு விடிவு காலம் கிடைக்கும்
https://aramonline.in/6776/borewell-avoid-flood-save-people/
Comments
Post a Comment