லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது. 1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும். 2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு. 3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள். 4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே. 5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு. 6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே. 7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள். 8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை. 9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. 10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. 11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன். லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

Comments

Popular posts from this blog