*திரிவேணி சங்கமத்துக்கு* *நிகரானதும்,கங்கை, ராமேஸ்வரம்* *சேது தீர்த்தங்களில் நீராடிய*
*16 மடங்கு பலன்களை* *வழங்க்கூடியதும்
*ஷோடசசேது எனும் 16 கிணறுகள்* *உள்ள முக்கூடல் தீர்த்தக் குளம்* *உள்ள ஆலயம் பற்றி தெரியுமா*?
காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடிய பலனையும்,இரண்டு தலங்களையும் ஒன்றாகத் தரிசித்து முக்தி அடைவதற்கான பலனையும் வழங்ககூடிய திருவாரூர் அருகே அமைந்துள்ள திருமுக்கோண நாதேசுவரர் ஆலயம் பற்றி தெரியுமா?
திருவாரூரில் வசிப்பவர்களில் அநேகம்பேருக்கு தெரியாத புத்திரப்பேறு, திருமண பாக்கியம் வழங்கும் திருவாரூருக்கு அருகில் கேக்கரை என்கிற ஊரில் உள்ள திருமுக்கோண நாதேசுவரர் கோவில், திருபள்ளியின்முக்கூடல்
என்கிற பாடல் பெற்ற தலம் பற்றிய
சிறப்பு தகவல்கள் அடங்கிய பதிவு!
காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 86-வது தலமாக விளங்கும் திருபள்ளியின்முக்கூடல் (குருவிராமேஸ்வரம்),
திருவாரூருக்கு அருகில் உள்ளது.
இறைவன் பெயர்: திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோணநாதர்
இறைவி பெயர்: அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.
தல வரலாறு:பழைய சிவத்தலமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் 'அரியான் பள்ளி ' என்று குறிக்கப்பட்டுள்ளது.
(அரிக்கரியான் பள்ளி என்றும், அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலில் குறித்தனர்.)
ஆனால் இன்று அப்பெயர் மாறி, 'திருப்பள்ளிமுக்கூடல் ' என்றே வழங்குகிறது.
(இறைவன் பெயர், சமஸ்கிருதப் பெயரை நோக்கத் தமிழில் 'முக்கண்நாதர் ' என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று - தொடர்பே இல்லாமல் 'முக்கோணநாதர் ' என்று வழங்குகிறது.)
இத்தலத்தின் வரலாறு, ராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையது என்பதால், இத்தலத்தை இங்குள்ள மக்கள் குருவிராமேஸ்வரம் என்றும் கூறுகின்றனர்.
ஒருமுறை, காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாகத் தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.
இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஜடாயுவுக்கு
தரிசனம் தந்து, ‘‘சீதையை ராவணன் எடுத்துவரும் நேரத்தில் நீ தடுப்பாய்.
அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம்.
அது கேட்ட ஜடாயு, “பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, ராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமல் போகுமே, அதற்கு என்ன செய்வது” என்று வேண்ட, இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க, ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது.
இவ்வரலாற்றின் காரணமாகத்தான், மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை குருவிராமேஸ்வரம் என்று கூறுகின்றனர்.
இதனால்,இக்கோவில் எதிரில் உள்ள முக்கூடல் தீர்த்தம் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்துக்கு நிகராகக் கருதப்படுகிறது.
இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால், இத்தீர்த்தம் ஷோடசசேது என்றும் சொல்லப்படுகிறது.
தலச் சிறப்பு
தபோவதனி என்னும் அரசி, குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள்.
இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன், தாமரை மலரில் அழகிய குழந்தையாகத் தோன்றினாள்.
அப்பெண் மணப்பருவம் வந்தபோது, இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறப்படுகிறது.
ஒரு முறை சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான்.
இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது.
மன்னன் உணவருந்தும் போது சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான்.
இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த
கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்த செய்தான்.
பின் அப் பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது
என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு:
இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை.
கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
முகப்பு வாயில் மதிற்சுவர் மாடங்களில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர்.
முகப்பு வாயில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் சுதை உருவங்கள் உள்ளன.
உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சூரியன் சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன.
உள் மண்டபத்தில் நுழைந்து சென்றால் நேரே மூலவர்
அழகாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.
வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி சந்நிதியும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன.
இங்குள்ள சுயம்பு சிவலிங்கம் மிகவும் பளபளப்பாகக் காட்சி அளிக்கிறது.
இத்தல இறைவனை மூர்க்க ரிஷி வழிபட்டுள்ளார்.
இவ்வாலயம் ஒரு சிறிய கோயில் என்பதால் மகா மண்டபத்தில் நின்றவாறே சுவாமியையும், அம்பாளையும் தரிசிக்க இயலும்.
மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.
திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் மூன்றாவது பாடலில் இத்தலத்தின் அம்பாளை மைம்மேவு கண்ணி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத்தின் சிறப்புக்கள் :
இக்கோவில் தீர்த்தம் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராக கருதப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள முக்கூடல் தீர்த்தக் குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன.
இதில் நீராடினால், மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
12 அமாவாசைகளுக்கு இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால், புத்திர தோஷம், திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.
தசரத சக்கரவர்த்திக்கு ராமர் தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால், கயா (காசி) கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால், இத்தலம் கேக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
தீர்த்தக் குளத்தின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தல புராணத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் இந்த தீர்த்தக் குளம், விரைவில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் முக்கூடல் தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பலன் பெற வாய்ப்பு உண்டாக வேண்டும்.
அதற்கு இறைவன் முக்கண்நாதரை வேண்டி வழிபடுவோம்.
இந்த ஆலயத்திற்கு எப்படிப் போவது?
திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாக, கேக்கரை செல்லும் சாலையில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி கேக்கரையை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1 கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம்.
ஊர் வரை பேருந்து செல்லும். திருவிற்குடி என்கிற சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்,
திருப்பள்ளிமுக்கூடல்,
கேக்கரை அஞ்சல், வழி திருவாரூர்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610 002.
இவ்வாலயம், தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவில் குருக்கள் வீடு கோயிலுக்கு அருகில் இருப்பதால், தரிசனம் செய்வதில் சிரமம் இருக்காது.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த இத்தலத்துக்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் தான் தடுமாறித் திரிந்து உழன்ற செயல் இரங்கத்தக்கது என்று தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் நெகிழ்ச்சியுடன் அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்.
திருச்சிற்றம்பலம்
1. ஆராத இன்னமுதை அம்மான் றன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
2. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
3. பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை
வேதியனை வெண்காடு மேயான் றன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
4. போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
5. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்
படிந்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
6. கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனி கமலத் தோன்றன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
7. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் றோழனை நீடு ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
8. நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலத் தான மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
9. ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
10. தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று
படுத்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்
பயிலாதே பாழேநான் உழன்றவாறே.
திருச்சிற்றம்பலம்
இந்த ஆலயத்தின் புகைப்படங்கள் கீழே!👇🏻👇🏻
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment