குட்டி கதை : ராமநாமத்தின் மகிமை... ஒரு ராஜா இருந்தாரு. அவரு பெரிய்ய்ய்ய சக்கரவர்த்தி! அவரு தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனாரு. மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்! அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டாரு. மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தாரு. அதுலே அவருக்கு ஒரு நிம்மதி! காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும் உடம்பு சோர்வாப் போச்சு! கையிலே கொண்டு வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு! ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! ..... என்ன செய்யறதுன்னே தெரியலே.... அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா ஒரு குடிசை தெரிஞ்சுது. ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.... வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'' அப்படீன்னாரு. ஆனா மந்திரி ராஜா கிட்டே, ""எனக்கும் பசிதான்! ஆனா நான் வரலே.... இங்கேயே இந்த மரத்தடியிலேயே நான் ராமநாமத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்...... அது என்னோட பசியை ஆத்திடும்!.... ராம நாமத்தைச் சொல்றவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.... நீங்க போயிட்டு வாங்க....'' அப்படீன்னாரு. ராஜாவுக்கு மந்திரி மேலே கோபமா வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நெனச்சுக்கிட்டு தூரத்துலே தெரிஞ்ச அந்த குடிசைக்கு நடந்து போனாரு. அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கே இருந்த ஒரு பாட்டி கிழிசல் புடவையைக் கட்டியிருந்தாள்! ஆனா நல்ல காலம்! அந்த பாட்டி ஒரு பானையிலே நிறையச் சோறு வெச்சிருந்தா.... ராஜாவுக்கு ஒரு தட்டிலே சோறும், குழம்பும், பொறியலும் கொடுத்தா! ராஜாவுக்கு அது தேவாமிர்தமா இருந்தது! சாப்பிட்டுட்டு ராஜா தண்ணியும் குடிச்சாரு! ராஜாவுக்குப் பசி அடங்கிடுச்சு! அவரு பாட்டிகிட்டே, "பாட்டி என்னோட கூட ஒருத்தர் வந்திருக்காரு.... அவரும் பசியோடதான் இருக்காரு.... ஒரு தட்டிலே அவருக்கும் கொஞ்சம் சோறு கிடைக்குமா?'' அப்படீன்னு கேட்டாரு. "அதுக்கென்ன, தாராளமா எடுத்துக்கிட்டுப் போ!.... நான் வேறே சோறு வடிச்சுக்கறேன்!'' அப்படீன்னு சொல்லிட்டு, பாட்டி ஒரு தட்டிலே, சோறு, குழம்பு, பொறியல் எல்லாம் போட்டுத் தந்தாங்க!'' ராஜா அதை எடுத்துக்கிட்டு, ஓடோடி வந்து, பாட்டி வீட்டிலே நடந்ததை எல்லாம் சொல்லி, மந்திரிகிட்டே உணவுத் தட்டைக் கொடுத்தாரு. மந்திரியும் அதைச் சாப்பிட ஆரம்பிச்சாரு. ராஜா மந்திரியைப் பார்த்து, "நீங்க சொல்ற ராம நாமமா உங்களுக்கு சோறு கொண்டு வந்து கொடுத்துச்சு?.... என்னோட யோசனையால்தானே உங்களுக்கு இப்போ சோறு கிடைச்சுது!'' அப்படீன்னாரு. மந்திரி ராஜாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "ராஜா, நீங்க சக்கரவர்த்தி!... ஆனா நீங்க ஒரு சாதாரண ஏழைப் பாட்டிகிட்டே கையேந்தி சாப்பாட்டுக்கு நின்னீங்க...... அதனாலே உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுது!.... ஆனா எனக்கு என்னோட பிரபு ஸ்ரீராமன், சக்கரவர்த்தியான உங்க கையாலே, நான் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுக்கும்படியாச் செஞ்சுட்டார்!..... இதுதான் ராமநாமத்தின் மகிமை!....'' அப்படீன்னாரு! சக்கரவர்த்தியும் தன்னோட தப்பை உணர்ந்து தலை குனிந்தார்..! பின்னே? கடவுளைவிட யாரு ஒஸ்தியா இருக்க முடியும்..? (பெருமாளே..! எங்கள் கஷ்டங்களை தீர்க்க வரவேண்டும் விரைவாகவே.!)

Comments

Popular posts from this blog