அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம். அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம். அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம். பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள், குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும். ஆனா, இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு. தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு. அஷ்டலக்ஷ்மியின் சன்னதி விமானத்தில் ஒன்பது சக்திகள் அமைந்துள்ளன. அதேப்போன்று தரைப்பகுதி சக்கரமாகவும், மொத்த அமைப்பு மேருவாகவும், தரிசனத்திற்கு மேலே சென்று இறங்கிவரும் பாதை “ஓம்” வடிவமாகவும் கட்டப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு . மாகாலக்ஷ்மி சன்னதியை தரிசனம் செய்துட்டு வரும்போது 18 படிக்கட்டுகள் இருக்கு. அவை 18 தத்துவங்களை நமக்கு உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. சிற்ப ஆகம சாஸ்திரப்படி அவை குறுகலாக 28 அங்குல அளவு கொடுத்து அமைக்கப்பட்டிருக்கு. மேலே ஏறிச் சென்றால் முதல் தளத்தின் கிழக்கே கஜலக்ஷ்மியையும், தெற்கே சந்தானலக்ஷ்மியையும், மேற்கே விஜயலக்ஷ்மியையும், வடக்கே வித்யாலக்ஷ்மியையும் ஆகிய நான்கு லக்ஷ்மிகளின் தரிசனம் மட்டுமே கிடைக்கும். அடுத்தடுத்த படிகளில் மேலே ஏறிச்சென்றால் இரண்டாம் தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள தனலட்சுமி தாயாரைத் தரிசிக்கலாம். தனலட்சுமி தாயாரைத் தரிசனம் செய்துவிட்டு மண்டபம் வழியேக் கீழே இறங்கி வந்தால் தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்யலட்சுமி, வடக்கே தைரியலட்சுமியையும் தரிசிக்கலாம். இந்த கோவில் ஓம் எனும் எழுத்தின் வடிவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு “ஓம்கார” தலம்ன்னு அழைக்கப்படுது. வற்றாத வங்கக்கடல் எப்போதும் ஓம் என்றே முழங்கிக் கொண்டு இருக்கிறது. இதனாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படலாம். நாம் மேலே ஏறி செல்லும் போது திருக்கோவிலின் தென்கிழக்கு பகுதியில் மஹாலட்சுமி திருமாலுக்கு மாலையிடும் காட்சியும், அருகில் பரமேஸ்வரன், பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், நாரதர், அக்னி, சுகர், வருணன், வாயு துர்வாசர், வசிஷ்டர் அனைவரும் இந்த மங்களகரமான காட்சியை பார்ப்பது கலையுணர்வுடன் வடிவமைத்திருப்பது காணத்தக்கது. தென்கிழக்கு பகுதியிலுள்ள வைகுண்ட தரிசனகாட்சி அழகான கூர்ம பீடத்தின் மேல் எட்டு இதழ்கள் 4 வீதம் கொண்ட பத்ம பீடத்தில் சாமரம் வீசுகின்றனர். ஆதிசேஷன் படுக்கையின் மேல் சங்கு, சக்கரம், கதை இவைகளுடன் அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் திருமால் காட்சியளிக்கிறார் . ஒருபுறம் வைந்தேயரும், ஒரு புறம் விஸ்வக்சேனர், இந்திரர், சனகர், சனந்தனர், சனாதனர் போன்றோரும் வைகுண்ட நாதனை தரிசனம் செய்யும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கு. வடமேற்கு பகுதியில் அத்வைதம் அளித்த சங்கரரும், விஷிச்டத்வைதம் நிறுவிய ராமனுசஜரும், துவைததை நிறுவிய மத்வாச்சரியரும்கூட வீற்றிருக்கின்றனர். திருகோவிலின் வடமேற்கு பகுதியில் விஜயலக்ஷ்மியை தரிசனம் செய்து விட்டு வித்யாலக்ஷ்மியை தரிசிக்க வரும் வழியில் சித்ரவேலைபாட்டில் கல்விக்கடவுளான, லட்சுமிஹயகிரீவரும், அவரை துதிக்கும் நிகமார்ந்த மாகா தேசிகனையும் காணலாம். அடுத்தாற்போல் லட்சுமி உடனுறை வராக மூர்த்தியையும் தரிசிக்கலாம். கஜலட்சுமி சன்னதியில் தரிசனம் முடிந்த பின், பதினெட்டுப் படிகள் மேலே ஏறி இரண்டாம் தளத்திலுள்ள தனலட்சுமி சன்னதிக்கு செல்லும் வழியில் நிகமார்ந்த தேசிகன் திதி கொள்வதையும், திருமகள் காட்சித் தந்து பிரம்மச்சாரிக்கு பொன்மாரி பொழிவதையும் விவரிக்கும் கதை சிற்பங்கள் காணப்படுது. தனலட்சுமி சன்னதியின் முன்பு பெரும் வட்டமான மாடத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் மகாலட்சுமி திருவுருவமும், தனலட்சுமியை சுற்றி வரும்போது தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் அனந்தசயன பெருமாள் திருவுருவமும், பாதசேவை செய்யும் அலைமகளும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் காட்சித் தருகின்றனர். பிரதான கர்ப்பக் கிரகம் 10 அடி அகலத்தில் 14 அடி உயரம் உடையது. கருங்கல் சுவரால் மேல்பகுதி அமைக்கப்பட்டிருக்கு. மூலவர் மகாலட்சுமி தாயார் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களிலும் அபய வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறாள். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீனிவாசர் என்னும் பெயரோடு மகா விஷ்ணு அருள்புரிகிறார். மகாலக்ஷ்மியும் மஹா விஷ்ணுவும் திருமணக்கோலத்தில் நின்ற வண்ணம் உள்ளதால் எப்பொழுதும் மகாலக்ஷ்மிக்கு 9 கஜம் பட்டுப்புடவையும் மகா விஷ்ணுவிற்கு 10 முழ வேட்டியும் கட்டப்படுது. இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம். வில்வ மரம் லட்சுமிக்கு உகந்தது, அதில் லட்சுமி வாசம் செய்கிறாள் என சொல்வதுண்டு. வில்வத்தின் வேர் முதல் நுனி வரை லட்சுமி குடி இருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வழிபாட்டு முறை பஞ்சராத்திர ஆகமம். இக்கோவிலில் மேலும் விஷ்ணுவின் தசாவதாரச் சன்னிதி, கமல விநாயகர் சன்னிதி, குருவாயூரப்பன் சன்னிதி, சக்கரத்தாழ்வார்- யோக நரசிம்மர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதியும் அமைந்திருக்கு. குழந்தை திட தான்ய உணவை முதன் முதலாக உட்கொள்ள தொடங்க, ஒரு நல்ல நாளில் இக்கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னிதியில் பூஜை புணஸ்காரம் செய்து, திருமஞ்சனத் தீர்த்தத்தை தருகின்றனர். மேலும் திருப்பவித்ர உற்சவம், மார்கழித் திங்கள், கோகுலாஷ்டமி, தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை விழாக்கள்ல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுதாம். அஷ்ட லட்சுமிகளும், ஒரே இடத்தில் அஷ்டாங்க விமானத்தில் கோவில் கொண்டிருப்பது உலகத்திலேயே வேறெங்கும் கிடையாதாம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி என எட்டு லட்சுமிகளை கொண்ட கோவில் இது. திருமண தோஷம் போக லட்சுமி நாராயணனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து திருமண யோகம் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லட்சுமிக்கும், நோய் குணமாக ஆதிலட்சுமிக்கும், செல்வம் வேண்டி தனலட்சுமிக்கும், கல்வி செல்வம் பெற வித்யாலட்சுமிக்கும், மனத்தைரியம் பெற தைரியலட்சுமிக்கும் பூஜை செய்து அம்மனின் அருள் பெறுகின்றனர்.

Comments

Popular posts from this blog