*மென்மையாக கோபப்படு!* மனைவிக்கு கோபம் வந்தால் சமைக்காமல் படுத்துக் கொள்வாள். அம்மாவுக்கு கோபம் வந்தால் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக் கொள்வாள். கோபத்தின் நிறம் ஒன்று தான். அதை வெளிப்படுத்தும் விதம் மென்மையாக இருப்பது நல்லது. காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற மன்னர் அங்கே ஒரு மான் குட்டியை வேட்டையாடினார். அந்த மான்குட்டியை அரண்மனைக்கு எடுத்துப் போகும்படி தன்னுடன் வந்த வேலைக்காரனிடம் கூறினார். மான்குட்டியைத் தொடர்ந்து பதற்றமுடன் வந்தது அதன் தாய். அந்தத் தாயின் பாசத்தையும் பரிதவிப்பையும் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த வேலைக்காரன் அந்த மான் குட்டியை தப்பி ஓடவிட்டு விட்டான். அப்புறமென்ன, விஷயம் தெரிந்ததும் அரசன் ஆத்திரப்பட்டான். அவனது வேலையைப் பறித்து வெளியே துரத்தப் பட்டான். ஒரு வருடம் கடந்து போய்விட்ட நிலையில், ஒரு நாள் அந்த ஏழை வேலைக்காரனுக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘உன்னை இளவரசரின் ஆசிரியராக நியமிக்கிறேன்’ என்று மன்னர் அறிவித்தார். அந்த ஊழியனின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. "மன்னா! முன்பு உங்கள் சொல்படி நடக்காத இவனுக்கு இந்தப் பணி கொடுத்திருக்கிறீர்களே...?” என்று மன்னருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், காதோரம் முணுமுணுத்தார். “மான்குட்டி மீது பரிவு காட்டியவன், என் மகன் மீதும் பரிவு காட்டுவான். நன்றாகப் பார்த்துக் கொள்வான். என்று நம்புகிறேன்” என்றான் அந்த மன்னன். பிறர் மீது இரக்கப்படுபவர் இறைவனின் கருணையைப் பெறுபவர், என்பதற்கு இந்தக் கதை ஒரு சோற்றுப் பதம். பரிவு என்பது பன்னாட்டு மொழி. எல்லா தேசத்திலும் அந்த மொழியால் பேச முடியும். ஊமைகளாலும் அந்த மொழி பேச முடியும். செவிடர்களாலும் அந்த மொழியைக் கேட்க முடியும். நாமும் பரிவு என்னும் மொழியை அவ்வப்போதாவது பேசவோம். அப்போது தான் நம் சந்ததி பிறரின் பரிவு பெறும். “அன்பில் நம்பிக்கை வை, அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடிவிடாதே! என்கிறார் தாகூர். சில காரணங்களுக்காகப் பலரையும் விரும்புகின்றோம். காரணத்தையும் மீறிச் சிலரை நேசிக்கின்றோம். அதற்கு பெயர் தான் அன்பு. அந்த அன்பு என்னும் பொக்கிஷம் உங்களிடம் இருந்தால் உங்கள் மீது பிறர் பார்வையும் இறைவனின் கனிவும் உங்களை நோக்கி இருக்கும். முன்பொரு காலத்தில் எந்த விலங்கும் இல்லாமல் மனிதர்கள் இருந்த காலத்தில் உலகம் முழுவதும் குதிரைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. ஓரிடத்தில் நிறைந்திருந்த புல்வெளியில் ஒரே ஒரு குதிரை மட்டும் மேய்ந்து வந்தது. அதனால் அந்த புல்வெளி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கிடந்தது. ஒருநாள், எங்கிருந்தோ வந்த ஒரு மான் புல்லை மேய்ந்ததுடன் இங்கும் அங்கும் ஓடித் திரிந்து வயல்வெளியை, புல்வெளியை நாசப்படுத்தியது. அது அங்கு சுதந்திரமாக இருந்தது. இதைக் கண்டு குதிரைக்கு கோபம் பொங்கியது. அந்த மானை எப்படிப் பழிவாங்குவது. அதை விரட்டி அடிக்க வழி என்ன என்று யோசித்தது. எனவே, இந்த விஷயத்தில் தனக்கு உதவும்படி பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரனிடம் கோரியது குதிரை. ‘அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. செய்து விடலாம். நீயும் உதவி செய்ய வேண்டும். முதலில் நான் சொல்கிறபடி செய். இதோ இந்தக் கடிவாளத்தை உன் வாயில் மாட்டிக் கொள். பிறகு உன் முதுகின் மேல் நான் உட்கார்ந்து கொண்ட பிறகு அப்படியே அந்த மானை அம்பால் வீழ்த்தி விடுவேன். சம்மதமா...?” என்று மனிதன் கேட்டான். ‘சரி’ என்று குதிரை ஒப்புக் கொண்டது. குதிரையின் வாயில் முதல் முறையாகக் கடிவாளம் ஏறியது. அதன்மீது ஏறிஅமர்ந்தான் அந்த மனிதன் மானைப் பார்த்து அம்பு விட்டான். மான் தப்பி ஓடிவிட்டது. அடுத்து குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து விரட்டி இங்கும் அங்கும் ஓட்டினான். குதிரையும் அவன் கட்டளைப்படி ஓடியது. பிறகு, தனது தோட்டத்தில் குதிரையை பிடித்து கட்டி வைத்தான். குதிரை அவனுக்கு அடிமையானது. அதன் பிறகு குதிரைகள் இன்று வரை மனிதர்களுக்கு அடிமைகளாக அவனைச் சுமந்து திரிகின்றன. பழிவாங்க நினைப்பது ஆபத்தானது. ஒரு கட்டத்தில் அது எதிரியை மட்டுமல்ல, நமக்கே பாதிப்பைத் தரும். விட்டுக்கொடு, விட்டுக்கொடு உனக்கு வேண்டியது கிடைக்கும். இதுதான் நட்பை, குடும்ப வாழ்வை சந்தோஷம் கொள்ளச் செய்யும் செயல். ஐந்து வினாடி நாம் புரியும் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் முகத்தில் புன்னகை கொண்டிருந்தால் அது *வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும்* என்று எண்ணிப்பாருங்கள்...!

Comments

Popular posts from this blog