அருள்மிகு காரணீசுவரர் கோவில், சைதாப்பேட்டை  தல வரலாறு: ஒரு முறை வசிஷ்ட முனிவர் தாம் செய்ய இருந்த யாகத்துக்கு பல பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதினாலும், யாகம் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும், எதைக் கேட்டாலும் உடனடியாகத் தரும் காமதேனுப் பசுவை சில நாட்கள் தமக்கு இரவலாகத் தந்து உதவ வேண்டும் என தேவேந்திரனான இந்திரனிடம் வேண்டுகோள் விடுக்க, தேவேந்திரன் தனது காமதேனு பசுவை அவருக்கு சில நாட்கள் வைத்திருக்கும்படித் தந்தார். அந்தப் பசுவும் வசிஷ்டரிடம் இருந்தது. ஒரு நாள் அந்தப் பசு யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இடையூறு செய்ய கோபமடைந்த வசிஷ்டர் அந்த காமதேனுப் பசுவை காட்டில் திரிந்து அலையும் காட்டுப் பசுவாக மாறித் திரியுமாறு சாபமிட்டார். ஆகவே அதுவும் காட்டில் சென்று காட்டுப் பசுவாக மாறி சுற்றி அலைந்தது.  வெகு நாட்கள் ஆகியும் காமதேனு திரும்பி வராததைக் கண்ட தேவேந்திரன், அந்தப் பசுவின் நிலைப் பற்றி விஜாரித்து அறிந்து கொண்டப் பின் வருத்தம் அடைந்தார். வசிஷ்டரை அவரால் எதிர்க்க முடியாது. அவர் மாபெரும் முனிவர், அவருடைய சாபத்தை தன்னால் அழிக்க முடியாது என்பதை உணர்ந்தவர். ஆகவே அவரிடமே சென்று சாப விமோசனம் பெற்று அதை திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க, தன் கோபத்தை நினைத்து வருந்திய வஷிஷ்ட முனிவரும் தான் இட்ட சாபத்தை திரும்பப் பெறும் சக்தி தமக்கே இல்லை என்பதினால் அவரும் தொண்டை மானிலத்தில் (தற்பொழுது ஆலயம் உள்ள இடம்) ஒரு சோலையை அமைத்து, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் சிவபெருமானின் அருளினால் சாபம் விலகி காமதேனு அவருக்கு மீண்டும் கிடைக்கும் என அறிவுறைத் தந்தார்.  அதைக் கேட்ட தேவேந்திரனும் உடனேயே அங்கு சென்று தமது சக்தியினால் சோலைகள் அமைத்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அந்த சோலைக்குள் பல காலம் இருந்து தவம் செய்து பூஜை செய்தார். சிலகாலம் பொறுத்து அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் காட்சி அளித்து, அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க தேவேந்திரன் நடந்தது அனைத்தையும் கூறி தமக்கு காமதேனுப் பசுவை திரும்ப கிடைக்க அருளுமாறு கேட்டார். சிவபெருமானும் மகிழ்ச்சி அடைந்து காமதேனுவை மீண்டும் அவருக்குக் கிடைக்க வழி செய்தார். சோலை வளர்த்து மழை பொழிவித்து அந்த இடம் குளுமையாக இருந்ததினால் அதை காரணி அதாவது குளுமை என அழைத்து, அங்கு ஈஸ்வரரை வழிபட்டதினால் காரணீ ஈஸ்வரர் என்ற பெயரில் ஆலயம் அமைய நாளடைவில் அது மருவி காரணீஸ்வரர் என ஆயிற்று. ஆலயம் சுமார் 750 வருடத்திற்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.  இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது. இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு. கோவில் அமைப்பு  இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.  அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன. வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பாக உள்ளது.  ஆனியில் திருமஞ்சனம், சித்திரையில் கொடியேற்றம், ஐப்பசியில் கந்தசஷ்டி, மார்கழியில் ஆருத்ரா, தையில் தெப்பம் என்று ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் பூணும் திருக்காரணீஸ்வரர் ஆலயத்தில் மற்றொரு விசேஷமும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதியை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog