திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம் சென்னையில் இருந்து பல்லாவரம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வரும் திருநீர்மலையில் உள்ள சிறு குன்றின் மீது உள்ள வைஷ்ணவத் தலமே திருநீர்மலை என்ற ஆலயம் ஆகும். மலைப் பகுதியில் உள்ள ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ளது நீர்வண்ணன் என்ற ஸ்ரீ ராமபிரான் ஆலயம் மலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின் ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை என்றாலும், இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதற்கான சான்றுகள் அங்கு உள்ளன. இந்த ஆலயத்தில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ரங்கநாதராக பெருமாள் காட்சி தருக்கிறார். மூலவரை நீலமுகில்வண்ணன் என்றும் தாயாரை அணிமாமலர்மங்கை என்றும் அழைக்கின்றார்கள். இந்த மலை மீது மற்றும் மலையின் கீழுள்ள ஆலயத்தில் பெருமாள் தரும் காட்சிகள் என்ன? • ஸ்ரீ சாந்த நரசிம்ஹர் – இருந்த திருக்கோலம் • ஸ்ரீ சயன ரங்கநாதர் – கிடந்த திருக்கோலம் • ஸ்ரீ திருவிக்கிரம – நடந்த திருக்கோலம் மற்றும் மலை அடிவாரத்தில் காட்டிய நான்காம் கோலம் • நீர்வண்ண பெருமாள் – நின்ற திருக்கோலம் சிலருக்கு திருவிக்ரமா என்பவர் யார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினால் மேலே தொடரும் முன் இங்கு திருவிக்கிரம கோலத்தில் உள்ள பெருமாளைக் குறித்து சிறிய கதையைக் கூற வேண்டும். ஒருமுறை மகாபலி எனும் மன்னன் தனது ஆசானாக சுக்ராச்சாரியரை வைத்துக் கொண்டு பெரிய யாகத்தை செய்தான். அந்த யாகத்தை செய்து முடித்தால் அவன் இந்திரலோகத்தை விட பெரிய மன்னனாகி விடுவான். தேவ லோகமே அவன் கீழ் வந்து விடும். ஆகவே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வேண்டுகோளின்படி மஹா விஷ்ணுவானவர் ஒரு குள்ளன் உருவில் உள்ள அந்தணராக அந்த யாகத்தில் சென்று கலந்து கொண்டார். யாக முடிவில் ஆசிர்வாதம் செய்யும் அந்தணர்களுக்கு அவர்கள் கேட்கும் தக்ஷணையை கொடுத்தப் பின்னரே யாகம் முடிவுக்கு வந்து நிறைவடையும். குள்ள உருவில் இருந்த விஷ்ணு மன்னனுக்கு ஆசிர்வாதம் செய்தப் பின், தக்ஷணையாக தனக்கு தன் காலினால் மூன்று அடி எடுத்து வைக்கும் அளவிற்கு நிலம் கொடுத்தால் போதும் என்று கேட்க , குள்ளந்தானே என்று நினைத்த மன்னன், அப்படி ஆகட்டும் என்று கூற, விஷ்ணு தனது ஒரு காலினால் பூமியில் எல்லையைத் தொட, சரி அடுத்த அடி என்ன என்று மன்னன் கேட்க, குள்ளன் உருவில் இருந்த விஷ்ணு பகவான் தனது காலால் தேவலோகத்தைத் தொட, அதையும் சரி என்று மன்னன் கூற அடுத்த அடியை அவன் தலை மீதே வைக்க, அந்த மன்னனின் யாகப் பலன் முழுவதும் அழிந்தது. அப்படி அவர் எடுத்த அந்தக் கோலமே திருவிக்ரமக் கோலம். தல வரலாறு……… முன்னொரு காலத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் தான் ராமபிரானைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் பல இடங்களுக்கும் அவரைத் தேடி அலைந்து கொண்டு சென்று வந்தபோது, இந்த மலைப் பகுதிக்கும் வந்து மலை மீது சென்றார். அங்கு தியானித்தவருக்கு விஷ்ணு பகவான் மூன்று கோலங்களில் காட்சி கொடுத்தார். சயனகோல ரங்கநாதராக, சாந்த சொரூபிணியான நரசிம்மராக மற்றும் நடந்த கோலத்தில் இருந்த திரு விக்ரமராகவும் காட்சி தந்தார். ராமரைக் காண ஆவலுடன் வந்தவருக்கு விஷ்ணுவின் காட்சி கிடைத்தாலும், வால்மீகி முனிவருக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. விஷ்ணுவும் ற்றாமரும் ஒருவர்தானே என்று அவருக்கு அப்போது தோன்றவில்லை. ஆகவே ராமபிரானைக் காண வந்த நேரத்தில் விஷ்ணு பகவானை அல்லவா மூன்று கோலத்தில் தரிசிக்க வேண்டி வந்தது என்று மன வருத்தத்துடன் மலையைவிட்டு கீழிறங்கி ராமனை தேடும் படலத்தை தொடர்ந்தார். இனியும் தனது பக்தரை அலைய விடக் கூடாது என்று எண்ணிய விஷ்ணு பகவான், வால்மீகி முனிவர் கீழறங்கும் முன்னரே தானே ராமராகவும். லஷ்மி தேவியை சீதையாகவும், ஆதிசேஷனை லஷ்மணராகவும், கருடனை ஹனுமாராகவும் உருடுக்க வைத்து மலை அடிவாரத்தில் வால்மீகி முனிவருக்கு சீதாசமேத ராமர், லஷ்மணர் மற்றும் பாதத்தின் அடியில் ஹனுமான் என வால்மீகி விரும்பிய வடிவிலேயே கல்யாண ராமராக காட்சி தந்து அவரது மனக் குறையை நீக்கினாராம். அதன் பின்னரே அங்கு அந்த கோலத்தில் இருந்த தெய்வங்களின் ஆலயம் தோன்றி உள்ளது. ஆனால் அந்த ஆலயத்தைக் கட்டியவர் யார் என்பது தெரியவில்லை. திருநீர்மலையில் விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் சேர்ந்து நான்காவது அவதாரமாயிற்று என்பதினால் இந்த தலம் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல அந்த நான்கு அவதாரங்களும் நான்கு வேதங்களைக் குறிப்பவை என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் தரிசனம் செய்வது திருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம், திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம் என்று நம்பிக்கை உள்ளது. இன்னும் சிலர் இங்கு வந்து வழிபடுவது என்பது இது திருப்பதிக்கும் சென்று வழிபட்டதற்கு சமமானது என்று கூறுகிறார்கள். ஆலய மகிமை இங்கு வந்து வணங்கி துதிப்பதின் மூலம்: • திருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம்,திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களுக்கு சென்று வணங்கிய பலன் கிடைக்கும் • மன அமைதி கிட்டி மனம் தெளிவு பெரும். • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். • இங்குள்ள ஆலய தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்கள் விலகும் • திருமணத் தடைகள் அகலும்

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips