*உருவு கண்டு* (சிறுகதை) ------------------------------- அரசுமருத்துவ மனையிலிருந்து வந்த அவசர அழைப்பைக் கேட்டதும் "இதோ வெகு விரைவில் வந்து விடுகிறேன்" என்றவாறு கசங்கல் துணியோடும் கலங்கிய முகத்தோடும் பேருந்தில் ஏறி விரைந்தான். பணம் அவசரத்தில் எடுக்காமல் வந்து விட்டோமே என்ற போது பையைத் துழாவினான் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்திரமாயிருந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல். எல்லோருமே அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், பிற நிறுவனங்களென்று படையெடுக்கும் கூட்டம். அத்தோடு நாகரீக உடையிலுள்ளவர்கள் கந்தலான, கசங்கலான ஆடை அணிந்த கந்தனைக்கண்டு "தள்ளி நில்லுயா"என இளக்காரமாக பேசினார்கள். கந்தனின் பதட்டமெல்லாம் மருத்துவமனையின் மீதே இருந்தது. தோளிலிருந்த துண்டு நழுவிக் கீழே அடிக்கடி விழ குனிந்து குனிந்து எடுத்து மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டான். பேருந்தில் "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.... என்ற பாடலுக்கிடையில் "எங்கய்யா போகனும்" "ராசபாளையம் அரசு மருத்துவ மனை" எனச்சொல்லி பையைத் துளாவிய போது பகீரென்றது. பயணச்சீட்டை நடத்துனர் கொடுப்பதை வாங்குமுன் பதை பதைக்க தேடினான் கீழே குனிந்து துண்டை எடுத்த போது விழுந்திருக்குமோ என்று. "யோவ்..! என்னயா தேடுற" "பையில பணம் வச்சிருந்தேன் எங்கேயோ விழுந்திருச்சு" "பணத்த காணுமா எவ்வளவுயா" "ஐநூறு ரூபாய்ங்க" "யோவ்..! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுயா.. "சத்தியமா காணும்யா.. "கீழ இறங்குயா" ஆத்திரத்தோடு நடத்துனர் சொன்னதும் வண்டி நிறுத்தப்பட்டது. "ஏன் சார் வண்டியில பெண்களுக்கு இலவசம்னு சொன்ன மாதிரி இந்த மாதிரி ஏழைகளுக்கும் இலவசம்னு சொல்லியிருக்கலாம். "இலவசம் இலவசம்னு குடுத்து குடுத்துதான்யா நாடு நாசமாப்போகப் போகுது" "பாவம்யா உச்சி வெயிலு காலில் செருப்பு கூட இல்லை, "அப்படிப்பாவம் பாக்குற ஆளு நீ எடேன், "இந்தாங்க பணம் அய்யா நீங்க மேல வாங்க, பேருந்து நகர்ந்தது நன்றிப்பெருக்கோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். "அட விடுங்கயா நானும் உங்களை மாதிரி தொழிலாளி தான், ஆமா திரும்ப எப்படி வருவே..?" "பரவாயில்லயா நடந்தே வந்திருவேன்" மருத்துவமனையை நெருங்கி விட்டதும் வாசற்படியை நோக்கி நடந்து வந்தவனின் முன் முழு ஐநூறு ரூபாய் ஒரு பெண்மணியின் காலுக்குக் கீழே கிடந்தது. "அம்மா பணம் கீழ கிடக்கு காத்துக்கு பறந்திடாம," அனைவரின் கவனமும் அவன் மீது பாய்ந்த போது "பெரியவரே ஐநூறு ரூபா பணம் காணும்னு சொன்னீங்களே அது உங்க பணமா இருக்கும் எடுத்துக்கோங்க," "இல்லைங்கயா இது என் பணமில்ல நான் வச்சிருந்தது அஞ்சும் நூறு ரூபா தாளு, இப்போது அனைவரது பார்வையும் அவர் மீது பரிதாபத்தோடு பாய்ந்தது. "ஆமா மருத்துவ மனைக்கு என்ன விசயமா போறீங்க, "...........," "சும்மா சொல்லுங்க ஏதாவது பண உதவி தேவைன்னா கூட நான் உதவுறேன்" "அய்யா உதவுறதயும், தர்மம் பண்ணியதையும் வெளிய சொல்லக்கூடாதுனு சொல்வாங்க, நீங்க எனக்கு பயணச்சீட்டு எடுத்து குறித்த நேரத்தில் வர உதவிய கடவுள் அதனால சொல்றேன், ஒரு உசுரக்காப்பாத்துறதுக்காக ரத்தம் குடுக்க கூப்பிட்டிருந்தாங்க அதான்...... எனச் சொல்லி முடித்ததும் பல பேர் கன்னத்தில் அறை விழுந்தது போல இருந்தது. *உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து* என்ற பேருந்தின் உட்புற திருக்குறளை அப்போதுதான் பலர் உணரவே ஆரம்பித்தார்கள். வண்டி நின்றபோது ஒலித்த பாடலின் கடைசி வரி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிய வைத்தது *நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்*

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips