*தஞ்சையில் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடு* முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். முதலாம் படைவீடு தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலய மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி – தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இதுதவிர விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் காணப்படுகின்றன. இக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் படைவீடு தஞ்சை பூக்கார தெருவில் உள்ளது, சுப்பிர மணியசாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். ~ஈசனைதேடி~ திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். அவர் தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடும்போது, முருகன் சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்வார். வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானி எண்ணினார். ஒரு நாள் ஞானியின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவும் கலைந்தது. கனவில் வந்ததுபோலவே, குறிப்பிட்ட ரெயில்நிலையம் சென்ற ஞானி, ரெயில்வே ஊழியரை சந்தித்து சிலையைக் கொடுத்தார். அந்த ஊழியருக்கும், அந்தக் கனவு முன்தினம் வந்ததை அவர் கூறினார். இருவரும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் எல்லா காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூன்றாம் படைவீடு தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக முருகப்பெருமானின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியில் யானை இருப்பது அரிய காட்சியாக இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. இங்கே விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், சிவன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் கார்த்திகை விரதம், பங்குனி உத்திர விழா, முத்து பல்லக்கு, சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நான்காம் படைவீடு தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது. இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது. ஐந்தாம் படைவீடு தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி – தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப் படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆறாம் படைவீடு தஞ்சை வடக்கு அலங்கம் பகுதி யில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog