*கந்த சஷ்டி* முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்தசஷ்டி கவசம். முருகப் பெருமானை தெரிந்த அனைவருக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி தெரியும். 270 வரிகளை கொண்ட கந்த சஷ்டி கவச பாடல் பலருக்கும் மனப்பாடமாக தெரியும். சிலருக்கு முழுவதுமாக தெரியாவிட்டாலும், காக்க காக்க கனகவேல் காக்க...நோக்க நோக்க நொடியினில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க...பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்ற வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கண்ணாடிக்கு அபிஷேகம் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும். சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார். முருகனுக்கு மஞ்சள் நீராட்டு கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். மும்மூர்த்தி முருகன் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். பெங்களூருவில் வணிகம் செய்து கொண்டே, தமிழ் இலக்கியங்களும் பயின்று வந்தார். முருகன் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு முறை பால தேவராயருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும், வலி சரியாகவில்லை. இனிமேல் தன்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாது என்னும் நிலைக்கு வந்தார். இதனால் திருச்செந்தூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். பால தேவராயர் திருச்செந்தூர் வந்த சமயத்தில் அங்கு கந்தசஷ்டி விழா துவங்கி இருந்தது. இதனால் கந்த சஷ்டி விழா முடிந்ததும் தற்கொலை செய்யலாம் என தனது முடிவை தள்ளி வைத்து விட்டு, கந்தசஷ்டி விரத இருக்க துவங்கினார். அருணகிரி நாதருக்கு தோல் நீக்கி, திருப்புகழ் பாட அருள் செய்த முருகப் பெருமான் தனக்கும் ஒரு வழி செய்வார் என முருகப் பெருமானிடம் தன்னை ஒப்படைத்து விட்டு, தினமும் கடலில் குளித்து முடித்து, முருகனை நினைத்து தியானம் செய்ய துவங்கினார். 6 கந்தசஷ்டி கவசம் அப்படி அவர் தியானத்தில் இருந்த போது முருகப் பெருமான், பால தேவராயருக்கு காட்சி தந்து கந்தசஷ்டி கவசத்தை இயற்ற வைத்தார். கந்த சஷ்டியின் 6 நாளும் முருகப் பெருமானை நினைத்து 6 கந்த சஷ்டி கவச பாடல்களை இயற்றினார் பால தேவராயர். ஆறு படை வீட்டிற்கும் தனித்தனியாக சஷ்டி கவசம் இயற்றினார். இவற்றில் தற்போது நாம் பாடி வரும் சஷ்டியை நோக்க சரவண பவனார் என துவங்கும் பாடல் திருச்செந்தூர் தலத்திற்கு உரிய கவச பாடலாகும். இதே போன்ற மற்ற 5 தலங்களும் பாடல்கள் உண்டு என்பது பலரும் அறியாத ரகசியம். கந்த சஷ்டி கவசத்தை பால தேவராயர் அரங்கேற்றிய தலம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில். இந்த தல முருகனை குறிக்கும் வகையில், சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்ற வரியை அவர் இயற்றி இருப்பார். கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் 36 முறை என்ற வீதத்தில் 6 நாட்களும் 216 முறை கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, " எனக்கு இந்த பிரச்சனை. இதனை நீ தான் வந்து தீர்த்து வைக்க வேண்டும். என்னுடைய இந்த பிரச்சனையை தீர்த்து வை முருகா" என அழைத்தால் எங்கிருந்தாலும் முருகப் பெருமான் ஓடோடி வருவார். அப்படி முருகனையே இழுத்து வரும் சக்தி படைத்தது கந்தசஷ்டி கவச வரிகள். சஷ்டி கவச பாராயண பயன் முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஒரு மனிதனுக்கு ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது. கந்த சஷ்டியில் வரும் அதி சூட்சும முருக மந்திரம் : ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளியையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக எப்போது படிக்க வேண்டும் சஷ்டி அன்றும், செவ்வாய்க்கிழமையிலும் கந்த சஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். சஷ்டி விரதம் இருந்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தால் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும். இதை குறிக்கும் வகையில் தான், "சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என சொல் உள்ளார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பை ஆகிய கருப்பையில் குழந்தைப் பேறு வரும் என்பது தான் இதன் உண்மையான பொருள். சண்முகா சரணம்.. - தொகுப்பு - இணையம்

Comments

Popular posts from this blog