*ஸ்ரீராமஜெயம்* *ருத்ராய_நமஹ* 🙏....... சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள். அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார். அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்க்கரைப் பொங்கல் காலியாகி இருப்பதையும், திருக்கச்சி நம்பியின் கையில் சர்க்கரைப் பொங்கல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டார். “என்ன காரியம் ஐயா செய்தீர்? பெருமாள் உண்ட மிச்சத்தைச் சாப்பிட வேண்டிய நாம் அவருக்கென்று வைத்த பிரசாதத்தைச் சாப்பிடுவது நியாயமா?” என்று கேட்டார் அர்ச்சகர். “சுவாமி! அடியேன் எதையும் சாப்பிடவில்லை. பெருமாள் தான் கேட்டார்! அவருக்கு ஊட்டி விட்டேன்!” என்றார் நம்பி. “இதென்ன புதுக்கதை! பெருமாள் என்றைக்கு ஐயா சாப்பிட்டிருக்கிறார்? நீர் தின்றுவிட்டு அவர் மேல் பழிபோடாதீர்!” என்றார் அர்ச்சகர். செய்தியைக் கேள்வியுற்ற கோயில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். பெருமாளுக்கென்று வைத்திருந்த பிரசாதத்தை நிவேதனத்துக்கு முன் எடுத்து உண்ட திருக்கச்சி நம்பிகள் இனிமேல் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியே அனுப்பினார்கள். வருத்தத்துடன் வீடு திரும்பினார் திருக்கச்சி நம்பிகள். இச்செய்தி ஊர் முழுவதும் பரவியதால், மக்கள் அனைவரும் திருக்கச்சி நம்பிகளைப் பலவாறு ஏசத் தொடங்கினார்கள். “வரதா! மக்கள் என்னைத் தூற்றுவதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை! ஆனால் இப்படி ஒரு லீலை செய்து நான் உனக்குச் செய்துவரும் தொண்டை நடக்கவிடாமல் செய்துவிட்டாயே!” என்று பெருமாளிடம் மனமுருகி வேண்டினார். சில நாட்கள் கடந்தன. திருமலையிலிருந்து சில பக்தர்கள் வரதராஜப் பெருமாளுக்கு 100 கங்காளம் பொங்கலும் 100 கங்காளம் புளியோதரையும் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு வந்து பிரசாதத்தை வரதராஜனுக்குச் சமர்ப்பிக்கையில் பெருமாள் அர்ச்சகரிடம், “திருக்கச்சி நம்பிகளை வரச்சொல்லுங்கள்! அவர் வந்தால் தான் நான் நிவேதனம் கண்டருள்வேன்!” என்றார். வேறு வழியில்லாமல் பூவிருந்தவல்லியிலிருந்து திருக்கச்சி நம்பிகளைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள். நூறு கங்காளம் பொங்கலும், நூறு கங்காளம் புளியோதரையும் பெருமாளின் முன்னே இருந்தன. திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள், “இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார். மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்! நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!” என்றார். அனைவரும் விலகிச் சென்றார்கள். கதவு தாளிட்டுக்கொண்டது. சிறிது நேரம் கழித்து, “இப்போது உள்ளே வாருங்கள்!” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. கதவைத் திறந்துகொண்டு பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது. அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். “இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!” என்றார் வரதராஜன். திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள். “திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!” என்று பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார். தன்மீது ஒருமடங்கு அன்புகாட்டும் அடியவர்களின் மேல் பல்லாயிரம் மடங்கு அன்புகாட்டும் எம்பெருமானின் கருணையை எண்ணி மனமுருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருக்கச்சி நம்பிகள். வடமொழியில் *“ரோதயதீதி ருத்ர:”* அழ வைப்பவனை ருத்ரன் என்று கூறுவார்கள். தன் கருணையால் தன் அடியார்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து அவர்களை அழ வைப்பதால் திருமால் *‘ருத்ரஹ’* என்றழைக்கப்படுகிறார். அதுவே _விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 115-வது திருநாமம்._ *“ருத்ராய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் அன்பையும் கருணையையும் திருமால் முழுமையாகக் காட்டி அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி அருளுவார். பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டு பொங்கல் ! நிரந்தரமாக தங்கட்டும் நிம்மதி சந்தோஷம் நம் அனைவரின் வீட்டில்!🙏🌹

Comments

Popular posts from this blog